×

வாட்ஸ்அப்பில் அவதூறு தகவல் பரப்பிய இளைஞர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு!

சிவகங்கை: வாட்ஸ்அப்பில் அவதூறு தகவல் பரப்பிய இளைஞர்களை கைது செய்யக்கோரி புழுதிபட்டி திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் 2 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்படைந்தது. மேலும், சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூரில் சாலையில் மரங்களை வெட்டி போட்டு ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் வாட்ஸ் ஆப்பில் ஒருபிரிவினர் குறித்து அவதூறாக செய்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். சிவங்கை மாவட்டம் எஸ்.புத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களான புழுதிப்பட்டி, மீனாட்சிபுரம், கே.புதுப்பட்டி, உலகம்பட்டி ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல பொன்னமராவதி, நத்தம் ஆகிய பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்று வருகின்றது.

இரு நபர்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை மட்டும் இழிவுபடுத்தி வாட்ஸ் ஆப்பில் பதிவு செய்துள்ளனர். இந்த செய்தி அப்பகுதியில் வைரலானதால், குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவாக பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளது. இதேபோல, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில், கடந்த சிலநாட்களாக இரு பிரிவினர் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதில் ஒரு பிரிவினர் குறித்து மற்றொரு பிரிவினர் வாட்ஸ்அப்பில் அவதூறு பரப்புவதாக புகார் எழுந்தது இதனையடுத்து நேற்று இரு பிரிவினரிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சமாதானம் செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் மூண்டது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், விரைந்து சென்று மோதலை தடுக்க முற்பட்டனர்.

அப்போது போலீசார் மீதும், அவர்கள் வந்த வாகனங்கள் மீதும் சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. இந்த கல்வீச்சில் 3 காவலர்கள் காயமடைந்தனர். மேலும் ஒரு போலீஸ் வாகனமும் சேதமடைந்தது. இதனையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர கலவரத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதன்காரணமாக, அப்பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், வாட்ஸ்அப்பில் அவதூறு தகவல் பரப்பிய இளைஞர்களை கைது செய்யக்கோரி புழுதிபட்டி திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக 2 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மறியலில் ஈடுபட்டவர்களுடன் திருச்சி எஸ்.பி நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : scene ,scandal , Watts Up, Defamation Message, Public, Road Strike, Traffic, Impact
× RELATED பணப்பட்டுவாடா மோதலில் சொந்த கட்சி...