×

தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலுக்கான திமுக பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலுக்கான பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து தி.மு.க பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

4 சட்டமன்ற தொகுதிக்கும் மே 19ம் தேதி இடைத்தேர்தல்

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2ம் கட்டத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதி தேர்தல் கடந்த 18ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளில் தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.

இந்த நிலையில் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து சூலூர் தொகுதியும் காலியானது. 4 தொகுதிக்கும்  இடைத்தேர்தல் நடத்த வேண்டும்’ என்று திமுக, உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதையடுத்து ‘தமிழகத்தில் காலியாக உள்ள அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிக்கும் மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும்’ என்று தேதல் ஆணையம் அறிவித்தது.

திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

இந்த 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பெயர் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சூலூரில் பொங்கலூர் பழனிச்சாமி, அரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜி,  திருப்பரங்குன்றத்தில் டாக்டர் பி.சரவணன், ஓட்டப்பிடாரத்தில் எம்.சி.சண்முகையா போட்டியிடுகின்றனர்.

ஏப்.22ல் மனு தாக்கல் ஆரம்பம்

4 தொகுதிகளுக்கு வருகிற 22ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் ஏப்ரல் 29ம் தேதி. 30ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும். மே 2ம் தேதி மாலை 3 மணிக்குள் வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம். அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இதனைத் தொடர்ந்து மே 19ம் தேதி வாக்குப்பதிவும், 23ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும். அதிமுக சார்பில் 4 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பது ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

திமுக பொறுப்பாளர்கள் நியமனம்

இந்நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலுக்கான பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து தி.மு.க பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

*திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதிக்கு பொறுப்பாளர்களாக இ.பெரியசாமி மற்றும் மணிமாறன்
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

*ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதிக்கு கே.என்.நேரு தலைமையில் கனிமொழி, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்

*அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதிக்கு பொன்முடி, செந்தில்பாலாஜி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

*சூலுார் சட்டப்பேரவை தொகுதிக்கு, எ.வ.வேலு, தென்றல் செல்வராஜ், த.மோ. அன்பரசன் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  

இதனிடையே அரவக்குறிச்சி அடுத்த சேந்தமங்கலம் ஆர்.எல்லப்பட்டியில் உள்ள பெருமாள் கோவிலில் இருந்து இடைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் வி.செந்தில் பாலாஜி தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : staffers ,DMK ,Legislative Assembly ,state ,elections , Bye-elections, trustees, appointments, DMK, general secretary, Karunanidhi,
× RELATED நாடாளும‌ன்ற தேர்தல் முடிவுகள்...