×

லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்தனர் இன்று வைகையில் இறங்குகிறார் அழகர்...3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

மதுரை: சித்திரை திருவிழாவையொட்டி இன்று மதுரை வைகையாற்றில் அழகர் இறங்கும் வைபவம் நடக்க உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் திருக்கல்யாணம், நேற்று தேரோட்டத்தை தொடர்ந்து, இன்று அதிகாலை மதுரை வைகையாற்றில் அழகர் இறங்கும் வைபவம் நடக்க உள்ளது. இதற்காக அழகர்மலையில் இருந்து தங்கப்பல்லக்கில் நேற்று முன்தினம் இரவு 7.45 மணிக்கு அழகர் மதுரைக்கு புறப்பட்டார். நேற்று அதிகாலை மதுரை மூன்றுமாவடியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எதிர்சேவையுடன் அவரை வரவேற்றனர். தொடர்ந்து நேற்றிரவு தல்லாகுளம் பெருமாள் கோயில் வந்தார்.

இன்று அதிகாலை தல்லாகுளம் பெருமாள் கோயிலில் இருந்து, வைகையாற்றில் இறங்க தயாராகும் அழகருக்கு, திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிவிக்கப்படும். ஆற்றுக்கு செல்லும் வழியில் அழகர், வெட்டிவேர் சப்பரத்திலும், பின்னர் மைசூர் மண்டபத்தில் ஆயிரம் பொன் சப்பரத்திலும் எழுந்தருளுகிறார்.  தொடர்ந்து இன்று அதிகாலை 5.45 மணிக்கு மேல் 6.45 மணிக்குள் தங்கக்குதிரை வாகனத்தில் அழகர், மதுரை வைகையாற்றில் இறங்குகிறார். அப்போது சுமார் 10 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் பத்து லட்சம் பக்தர்கள் மதுரையில் குவிந்துள்ளனர். இதையொட்டி கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் அழகர் வரும் பாதையிலும், வைகையாற்று பகுதியிலும் 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விழாக்கோலம் பூண்டு மதுரையே குதூகலத்தில் குளித்து கிடக்கிறது.

மாசி வீதிகளில் சித்திரை தேரோட்டம்
சித்திரை திருவிழாவின் 11ம் நாளான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. அதிகாலை கோயிலில் இருந்து கீழமாசி வீதியில் உள்ள தேரடிக்கு அம்மன், சுவாமி, பிரியாவிடை சென்றனர். அங்குள்ள கருப்பசாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து அதிகாலை 5.45 மணிக்கு மீனாட்சி அம்மன் சிறிய தேரில் எழுந்தருளினார். 6 மணியளவில் பெரிய தேரில் பிரியாவிடை, சுந்தரேஸ்வரர் எழுந்தருளினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ‘சங்கரா, சங்கரா’ கோஷத்துடன், நான்கு மாசி வீதிகளிலும் தேர்கள் அசைந்தாடி வலம் வந்தன.மாசி வீதிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தின் நடுவே மிதந்து வந்த பெரிய தேர் பகல் 12.30 மணிக்கும், சிறிய தேர் 12.45 மணிக்கும் நிலைக்கு வந்தடைந்தன. பக்தர்களுக்கு மாசி வீதிகளில் மோர், தண்ணீர் வழங்கப்பட்டன.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : pilgrims ,Madurai , Millions , devotees ,Madurai, 3 thousand police ,security
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...