×

பதற்றம், சந்தோஷமாக இருந்தது முதன்முறையாக ஓட்டுப்போட்ட இளைஞர், இளம்பெண்கள் உற்சாகம்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் முதன்முறையாக இளம் வாக்காளர்கள் லட்சக்கணக்கானோர் வாக்களித்தனர். அவர்கள் ஓட்டுபோடும்போது சந்தோஷமாகவும் பதற்றமாகவும் இருந்தது என்று தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். நந்தனம் ஹரி (19): முதல்முறை வாக்களிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நிறைய சின்னங்கள் இருந்தது. அதில் எனக்கு ஒரு சில சின்னங்கள் மட்டுமே தெரிந்தது. அதில் ஒரு சின்னத்துக்கு எனது வாக்கை பதிவு செய்தேன். நாட்டு மக்களுக்கு என்ன தேவையோ, அதை யார் கேட்காமல் செய்வார்களோ அவர்களுக்கு எனது வாக்கை பதிவு செய்துள்ளேன்.

தி.நகர் நிருபமா (19): முதல்முறை வாக்களித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அனைத்து வாக்காளர்களும் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். இப்போது மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். நான் எதிர்பார்த்த மத்திய அரசு அமைய எனது வாக்கை பதிவு செய்தேன். தி.நகர் தீப்தி (19) முதல்முறை வாக்களித்தது மகிழ்ச்சியாக உள்ளது. 18 வயது நிரம்பிய அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். நான் வாக்களிக்கும் போது மனதில் ஒருவித பதற்றம் இருந்தது. வாக்குச்சாவடிக்குள் சென்ற உடன் என்ன சொல்வார்களோ என்ற பதற்றத்தில் இருந்தேன். எனது கையில் பூத் சிலிப் இருந்ததால் அவர்கள் கேட்டவுடன் அதை காட்டினேன். பிறகு எனது அடையாள அட்டையை கேட்டார்கள். அதையும் நான் காட்டினேன்.

என் கையில் மை வைத்த போது ஏதோ எனது மனதிற்கு நாம் சாதிக்க ஒன்று இருக்கிறது என்பதை உணர்ந்தேன். நாட்டின் பாதுகாப்பு அவசியம், மக்கள் அனைவரும் சுதந்திரமாக வாழ வேண்டுமென்றால் யாருக்கு வாக்களிக்க வேண்டுமோ அவர்களுக்கு எனது வாக்கை பதிவு செய்தேன். தேனாம்பேட்டை மகாலட்சுமி (19) : முதல்முறையாக வாக்களிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அவர்கள் சொன்னார்கள், இவர்கள் சொன்னார்கள் என்று வாக்களிக்காமல் மனசாட்சியின்படி வாக்களிக்க வேண்டும். நான் முதன்முறையாக வந்ததால் எந்த வாக்குச்சாவடியில் வாக்களிப்பது என்று தெரியவில்லை. பூத் சிலிப் வேறு தராததால் என்ன செய்வதென்று முதலில் தெரியவில்லை.

அப்போது நான் அரசியல் கட்சி முகவர்களிடம் போய் கேட்டேன். அவர்கள் எந்த வாக்குச்சாவடி என்று தேடி கண்டுபிடித்து கூறினார்கள். அதன்பிறகு தான் வாக்களித்தேன். எனக்கு பூத் சிலிப் கொடுத்திருந்தால் இப்படி கஷ்டப்பட்டிருக்க மாட்டேன். என்னை போன்று பலரும் பூத் சிலிப் கிடைக்காமல் அலைந்து திரிந்ததை பார்க்கும் போது, தேர்தலுக்கு சரியான ஏற்பாடு செய்யவில்லை என்று புரிகிறது. இனி வருங்காலங்களில் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.

தி.நகர் பிரீத்தி சுப்ரமணி (20) : மத்தியில் மோடி ஆட்சி அகற்றப்பட வேண்டும். விவசாய கடன், நீட் ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி கொடுப்பவர்களுக்கு நான் வாக்களித்தேன். முதல்முறையாக வாக்களிக்கும் போது பதற்றமாக இருந்தது. வாக்களித்து விட்டு வந்த பிறகு, அந்த பதற்றம் எதுவும் இல்லை. சாலிகிராமம் சுதா பரிமளா (19) : இப்போதுதான் கல்லூரி படிப்பை முடித்துள்ளேன். இதுதான் எனக்கு முதல் ஓட்டு. முதல்முறையாக வாக்களித்தது மகிழ்ச்சியாக உள்ளது. ஓட்டுபோடும்போது பதற்றமாக இருந்தது.

இருந்தாலும், எப்படியோ வாக்களித்துவிட்டேன். வடபழனி அம்ரிதா (19) : சிஏ படித்துக்கொண்டிருக்கிறேன். முதன்முறையாக வாக்களிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். இது நமது கடமை. இனி ஒவ்வொரு தேர்தலின் போது நான் எங்கு இருந்தாலும் என்னுடைய வாக்கை தவறாமல் பதிவு செய்ய வேண்டும்  என்று கொள்கை முடிவை எடுத்துள்ளேன்.

சாலிகிராமம் சுரேகா (20) : இன்ஜினியரிங் 3ம் ஆண்டு படித்து வருகிறேன். முதன்முறையாக வாக்களிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இளைஞர்கள், புதிய வாக்காளர்கள் வாக்களிப்பதன் மூலம்தான் மாற்றம் ஏற்படும். விருகம்பாக்கம் லதா (19) : தனியார் கம்பெனியில் வேலை செய்கிறேன். முதன்முறையாக வாக்களிப்பது மகிழ்ச்சியாக இருந்தது. அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். ஒவ்வொரு வாக்காளர்களுக்கு தங்களது வாக்கை பதிவு செய்தால் மட்டுமே சரியான ஒருவரை நம்மால் தேர்வு செய்ய முடியும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : youngster ,ladies , Tension, happiness, first time, voting, youth, young women, enthusiasm
× RELATED நர்சரி கார்டனில் தீ விபத்து