நாடாளுமன்ற, இடைத்தேர்தல் நடத்துவதில் தோல்வி அடைந்த தேர்தல் ஆணையம்

* வாக்குப்பதிவு செய்ய அலைந்து திரிந்த வாக்காளர்கள்
* தமிழக வரலாற்றில் இதுவரை நடந்திராத அவலம்

சென்னை: நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலை நடத்துவதில் தேர்தல் ஆணையம் தோல்வி அடைந்து விட்டதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், தமிழக வரலாற்றில் இதுவரை வாக்குப்பதிவுக்கு இம்முறை போன்று அலைந்து திரிந்தது இல்லை என்றும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதி மற்றும் 18 சட்டசபை தொகுதிக்கான தேர்தல் நடந்தது. தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை 30 நாட்களுக்கு முன்னரே தேர்தல் ஆணையம் சார்பில்  செய்வது உண்டு. குறிப்பாக, தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கம். ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை காலங்களில் அவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

ஆனால், இந்த முறை தேர்தல் ஆணையம் சார்பில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு வாக்குப்பதிவு மற்றும் விவிபேட் இயந்திரத்தின் பயன்பாடு குறித்து முறையாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், நேற்று நடந்த வாக்குப்பதிவின் போது ஊழியர்கள் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபேட் இயந்திரத்தை இயக்குவது எப்படி என்பது தெரியாமல் தடுமாறினார்கள். வாக்குப்பதிவு இயந்திரம் சரியாக இருந்தும் பொதுமக்களால் பல இடங்களில் வாக்குப்பதிவு செய்ய முடியவில்லை. இதனால், காலை 7 மணிக்கே வாக்குப்பதிவு செய்ய வந்த பொதுமக்கள் பலர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாக்குச்சாவடி மையங்களில் காத்திருந்தனர்.

மேலும், தமிழகம் முழுவதும் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பித்ததும் 384 வாக்குச்சாவடி மையங்களில் இயந்திரங்களில் பழுது ஏற்பட்டது. மேலும்,  692 இடங்களில் விவிபேட் இயந்திரமும் வேலை செய்யவில்லை. இதனால், வாக்குப்பதிவிற்கு வந்த பொதுமக்கள் 1 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தனர். அந்த இடங்களில் வாக்குப்பதிவு மற்றும் விவிபேட் இயந்திரங்கள் மாற்றிய பிறகே வாக்குப்பதிவு தொடங்கியது.
கடந்த காலங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறையாக வேலை செய்கிறதா என்று சோதனை செய்த பிறகே வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு வரப்படும்.

ஆனால், இந்த தேர்தலில் வாக்குச்சாவடி இயந்திரங்களை பரிசோதனை செய்யவில்லை. இதனால், இதுவரை நடந்த எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. எனவே, வாக்காளர்கள் பல மணி நேரம் காத்திருந்து வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற நிலை இந்த தேர்தலில் ஏற்பட்டது. மேலும், வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் பூத் சிலிப் விநியோகம் செய்யப்படும் என்று கூறப்பட்டது. இதன் மூலம் பொதுமக்கள் வாக்குச்சாவடிகளை சுலபமாக கண்டறிந்து வாக்களிக்க முடியும். ஆனால், தமிழகம் முழுவதும் இப்பணியை தேர்தல் ஆணையம் சார்பில் முறையாக செய்யவில்லை என்று தெரிகிறது. குறிப்பாக, சென்னையில் 50 சதவீதம் மட்டுமே பூத் சிலிப் விநியோகம் செய்யப்பட்டது.

அரசியல் கட்சி முகவர்களிடம் உள்ள வாக்காளர் பட்டியலில் தங்கள் தெருக்களின் பெயர்களை தேடுவதற்கு ரொம்ப கஷ்டப்பட்டனர். ஒரு பக்கம் வெயில் கொடுமை, ஒரு பக்கம் தங்களுக்கு பூத் சிலிப்பை பெற முடியாத நிலை எந்த கட்சி ஏஜென்டிடம் கேட்டாலும் இங்கே இல்லை, அங்கே போங்க என்று கூறியதால் வாக்காளர்கள் ரொம்பவே சிரமத்திற்கு ஆளானார்கள். மிகுந்த சிரமத்திற்கு பிறகே எங்கு வாக்கு உள்ளது என்பதை பார்த்து அதன் பிறகே வாக்களிக்க சென்றனர். இதனால், மிகவும் தாமதமாக பொதுமக்கள் பலர் தங்களது வாக்கை பதிவு செய்ய சிரமப்பட்டனர். சிலர் வாக்குகளை பதிவு செய்யாமல் திரும்பி சென்ற சம்பவமும் அரங்கேறியது.

தேர்தல் ஆணையம் சார்பில் 100 சதவீதம் வாக்குப்பதிவு என்பது குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம் செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளை பெயரளவுக்கு மட்டுமே மேற்கொண்டது. ஆணையம் சார்பில் நடிகர்களை வைத்து பிரசாரம் செய்வது, தினமும் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி கொடுப்பது என்பதோடு தங்களது பணிகள் முடிந்து விட்டதாக நினைத்து விட்டனர். ஆனால், 100 சதவீதம் வாக்குப்பதிவிற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக, தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்வதற்கு ஏதுவாக வசதி செய்து தர வேண்டும். ஆனால், எந்த ஒரு வசதியும் செய்து தரப்படவில்லை.

குறிப்பாக, சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு வாக்குப்பதிவுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக கூடுதல் பஸ் வசதி செய்து தரும் வகையில் போக்குவரத்து துறை செயலாளருக்கு தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் கடிதம் எழுதி இருக்க வேண்டும்.
ஆனால், தேர்தல் ஆணையம் சார்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், நேற்றுமுன்தினம் இரவு கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து குறைவான பஸ்களே இயக்கப்பட்டன. இதனால், பொதுமக்கள் வேறுவழியின்றி பஸ் படியில் தொங்கிய படியும், பஸ்சின் மேற்கூரையின் மீது ஏறி பயணம் செய்தவாறும் சொந்த ஊருக்கு சென்றனர்.

மேலும், பலர் பஸ் கிடைக்காமல் விடிய, விடிய கோயம்பேடு பஸ் நிலையத்தில் காத்திருந்தனர். பொதுமக்கள் பலரும் நேற்று காலையில் தான் பஸ் பிடித்து தங்களது சொந்த ஊருக்கு சென்றனர். இதனால், 100 சதவீதம் வாக்கு பதிவாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் அலட்சிய நடவடிக்கையால் வாக்குப்பதிவுக்கு செல்வதற்கும், வாக்குப்பதிவு நாளன்றும் பல்வேறு சிரமங்களை பொதுமக்கள் சந்தித்தனர். இதன் மூலம், தேர்தல் ஆணையம் தோல்வி அடைந்துள்ளது என்று மக்கள் குற்றம்சாட்டினர். வாக்காளர்கள் பலர் பூத் சிலிப் இல்லாமல் எந்த வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பது என்பது தெரியாமல் அலைந்து திரிந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED நாடாளுமன்ற துளிகள்