×

ஆம்பூர், குடியாத்தத்தில் அதிமுக, அமமுக மோதலால் போலீஸ் தடியடி: வேட்பாளர் கார் கண்ணாடி உடைப்பு; 2 பேர் படுகாயம்

ஆம்பூர்:  ஆம்பூரில் அதிமுக மற்றும் அமமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலில் அமமுக வேட்பாளரின் கார் கண்ணாடி  உடைக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர்.  வேலூர் மாவட்டம் ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதி வேட்பாளராக அமமுக சார்பில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏவான  பாலசுப்பிரமணியம் போட்டியிடுகிறார். இவர் நேற்று மாலை தனது காரில் பல்வேறு வாக்குச்சாவடிகளுக்கு சென்றார். ஆம்பூர் கஸ்பா  ‘பி’ பகுதி வாக்குச்சாவடிக்கு செல்ல கஸ்பா முத்தாலம்மன் கோயில் அருகே வந்தார். அப்போது அங்கிருந்த அதிமுகவினர் எதிர்ப்பு  தெரிவித்துள்ளனர். இதனால் அமமுக மற்றும் அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி  கொண்டனர். மேலும், அங்கிருந்த அதிமுகவினர் சிலர் பாலசுப்பிரமணியம் கார் மீது கற்களை வீசி தாக்கினர். இதில் காரின்  பக்கவாட்டு கண்ணாடி உடைந்தது.தகவலறிந்து அதிரடிப்படையினர் அங்கு விரைந்து வந்தனர். மோதலில் ஈடுபட்டிருந்தவர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர்.  ஆனால், இரு தரப்பினரிடையே அடிதடி மற்றும் மோதல் தொடர்ந்ததால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டினர். இதில்  ஆம்பூரை சேர்ந்த டேவிட் மற்றும் சுதர்சன் ஆகியோருக்கு  மண்டை உடைந்தது. மேலும், சிலர் லேசான காயத்துடன் தப்பி ஓட்டம்  பிடித்தனர்.
படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம்   பதற்றமான சூழல் ஏற்பட்டது.

அதேபோல் குடியாத்தம் (தனி) தொகுதிக்கு உட்பட்ட கள்ளூர் கிராம வாக்குச்சாவடியில் அதிமுக கூட்டணி கட்சியான  பாமகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் இருதரப்பை சேர்ந்த 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. தகவலறிந்த  போலீசார் வந்து அவர்களை விரட்டியடித்தனர். பின்னர் காயமடைந்தவர்களை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். அங்கும் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார்  இருதரப்பினரையும் விரட்டியடித்தார். இளையான்குடி: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் நாகராஜன். இவரது சொந்த ஊர்  இளையான்குடி அருகே கீழநெட்டூரில்  அதிமுக வேட்பாளர் நாகராஜன் வாக்குப்பதிவு மையத்திற்கு உள்ளே சென்றார்.  அதிமுகவினர்  வாக்குப்பதிவு மையப்பகுதியில் நின்று, துண்டு சீட்டுகளை வைத்து பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தனர். இதனால் அமமுகவினர்,  அதிமுகவினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.அவர்களை போலீசார் தடியடி  நடத்தி விரட்டினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ampoor ,AIADMK ,Gudiyatham ,Ammukhu , Ampoor, AIADMK , Gudiyatham, Ammukhu police, by police,car glass breaking, 2 people were injured
× RELATED புதுச்சேரியில் அதிமுக முன்னாள்...