×

குஜராத், ராஜஸ்தான், ம.பி உள்ளிட்ட வட மாநிலங்களில் பெய்த கனமழைக்கு 50 பேர் பலி

போபால்: குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய 4  மாநிலங்களில் சூறைக்காற்று, இடி, மின்னலுடன் பெய்த கனமழையில் சிக்கி 50 பேர் பலியாகி உள்ளனர். நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் நேற்று முன்தினம் இரவு திடீர் கனமழை பெய்தது. பலத்த சூறைக்காற்று, இடி, மின்னலுடன் பெய்த கனமழையில் சிக்கி 50 பேர் பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக ராஜஸ்தானில் 21 பேர் இறந்துள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் 15 பேரும், குஜராத்தில் 10 பேரும், மகாராஷ்டிராவில் 4 பேரும் பலியானதாக தகவல்கள் உறுதிபடுத்தி உள்ளன. பலியானவர்களில் பெரும்பாலானோர் மழைக்காக மரத்தடியில் ஒதுங்கிய போது இடி தாக்கி  உயிரிழந்துள்ளனர். குஜராத், ராஜஸ்தான், மபியில் பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி பயிர்கள் நாசமாகி உள்ளன.கனமழைக்கு பலியானோர் குடும்பத்தினருக்கு தேசிய பொது நிவாரண நிதியிலிருந்து தலா ₹2 லட்சமும், காயமடைந்தோருக்கு ₹50,000மும் நிவாரணம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதே போல,  ராஜஸ்தான் மாநில அரசு ₹4 லட்சமும், குஜராத் மாநில அரசு ₹2 லட்சமும் நிவாரணம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே, அடுத்த 24 மணி நேரத்தில், டெல்லி, பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்ரகாண்ட், உபி, அசாம், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த காற்று, அல்லது இடியுடன் கூடிய மழைக்கு  வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.ஆறுதலிலும் அரசியல்: கனமழையைத் தொடர்ந்து, நேற்று காலை பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘குஜராத்தில் பருவம் தவறிப் பெய்த கனமழையால் பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத்  தெரிவிக்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து, மபி முதல்வர் கமல்நாத் தனது டிவிட்டர் பதிவில், ‘நீங்கள் குஜராத்துக்கு மட்டுமல்ல நாட்டிற்கே பிரதமர். பருவம் தவறிய மழையால் ம.பி.யிலும் 10 பேர் இறந்திருக்கிறார்கள். ஆனால், குஜராத் பற்றி மட்டும்  பிரதமர் கவலை தெரிவித்துள்ளார். இங்கு உங்கள் ஆட்சி இல்லாவிட்டாலும், மக்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்’ என்றார். உடனே, சில மணி நேரத்தில் டிவிட் செய்த பிரதமர் மோடி, ‘நாட்டின் பல்வேறு பகுதிகளில்  மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த அரசு துணை நிற்கும். வேண்டிய உதவிகளை செய்து தர மத்திய அரசு தயாராக இருக்கிறது’ என பதிவிட்டார்.கமல்நாத்துக்கு பதிலடி தரும் வகையில் பேசிய பாஜ எம்பி அனில் பலுனி, ‘‘முறைப்படி பார்த்தால், இயற்கை பேரிடர் குறித்து மாநில அரசுதான் முதலில் மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்து, இழப்பீடு உதவி கேட்க வேண்டும்.  ஆனால், கமல்நாத் மத்திய அரசுக்கு தகவல் தெரிவிப்பதை விட்டுவிட்டு, டிவிட்டரில் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்’’ என்றார்.மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதாக அந்தந்த மாநில அரசுகள் உறுதி அளித்துள்ளன.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : states ,Rajasthan ,Gujarat , Gujarat, Rajasthan, MP, 50 die ,heavy rains
× RELATED பொய்யானது பாஜகவின் வாரிசு அரசியல்...