×

பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 1,407 கிலோ தங்க நகை சிக்கியது: திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமானது

சென்னை: சென்னை அடுத்த திருவள்ளூர் அருகே இரண்டு வேன்களில் கொண்டு வரப்பட்ட ₹140 கோடி மதிப்பிலான 1,407 கிலோ தங்க கட்டிகள் மற்றும் நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல்  செய்தனர். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் இன்று நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதை தடுக்க பறக்கும் படையினர் தமிழகம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில்  பல்வேறு பகுதிகளில் நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியின் பொது பார்வையாளராக சுரேந்திரகுமார், மாவட்ட தேர்தல் அலுவலராக மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் உள்ளனர். இவர்கள் 2 நாட்களுக்கு முன்பாக பறக்கும்படை குழுவின் வாகன  சோதனை குறித்து ஆய்வு நடத்தினர்.அப்போது வாகன சோதனை திருப்திகரமாக இல்லை. சோதனையில் தீவிரம் காட்ட வேண்டும். கூடுதலாக பறக்கும்படை குழு அமைக்கப்பட்டு, வாகன சோதனையை அதிகரிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். தொடர்ந்து நேற்று  முன்தினம் கூடுதலாக 30 பறக்கும் படை குழுக்கள் நியமிக்கப்பட்டன. மாவட்டத்தில் தற்போது 90 பறக்கும் படை குழுக்கள் வாகன சோதனையில் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில்,  திருவள்ளூர்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் அருகே பிடிஓ செல்லப்பாண்டியன் தலைமையிலான பறக்கும் படை குழுவினர் நேற்று இரவு 7 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக  வந்த இரண்டு டெம்போ வேன்களை நிறுத்தி சோதனை செய்தனர். வேனில் தனித்தனி பெட்டிகளில் 1,407 கிலோ எடையுள்ள தங்க நகைகள் மற்றும் தங்க கட்டிகள் இருப்பது தெரிந்தது.

இதையடுத்து இரு வாகனங்களையும் அதிகாரிகள் தங்க நகைகள் மற்றும் கட்டிகளுடன் பறிமுதல் செய்து பூந்தமல்லி உதவி தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.முதற்கட்ட விசாரணையில் சுவிட்சர்லாந்தில் இருந்து பஞ்சாப் நேஷனல் வங்கி மூலமாக சென்னை விமான நிலையத்துக்கு இவை கொண்டு வரப்பட்டதும், அங்கிருந்து வேன்கள் மூலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு கொண்டு  செல்வதும் தெரிய வந்துள்ளது. இவற்றின் மதிப்பு ₹140 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இருப்பதாகவும் அவர்கள் கூறினர். என்றாலும், இதுகுறித்து முன்கூட்டியே தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காததால், நகைகளுடன் வாகனத்தை பூந்தமல்லி உதவி தேர்தல்  நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வருமானவரித் துறைக்கும் தகவல் அளித்தனர். அவர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர். பறக்கும் படை சோதனையில் 1,407 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட  சம்பவம் திருவள்ளூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதற்கிடையில், திருவள்ளூர் அருகே பிடிபட்ட தங்கம் அனைத்தும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமானது என்று தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் விளக்கம் அளித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : raids ,troops ,Tirupati Devasthanam , experiment , flying troops, 1,407 kilos, gold jewelry h,Tirupati Devasthanam
× RELATED ரேவண்ணா, பிரஜ்வல் வீடுகளில் போலீசார்...