×

உங்கள் ஒரு விரலில் உருவாகும் சர்கார்

உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் வாக்களிக்கும் முறையில் தேர்தல் நடந்து வருகிறது. தற்போது 17வது மக்களவை தேர்தல், ஒரு சில மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து வருகிறது. இன்று  தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்க உள்ளது. உங்கள் ஒரு விரல், அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாட்டை ஆள்பவர்களை தேர்ந்தெடுக்க போகிறது. ஜனநாயகக் கடமையாக வாக்களிக்கும் முன்பு சில  நடைமுறைகளை தெரிந்து கொள்வோமா?

18-19க்குள் 1.50 கோடி
தேர்தல் ஆணையம் அறிக்கையின்படி, இந்தியாவின் மக்கள் தொகையான 130 கோடி பேரில், சுமார் 90 கோடி பேர் வாக்காளர்களாக உள்ளனர். புதிய வாக்காளர்கள் 8.40 கோடி. 18 - 19 வயதுக்குள் 1.50 கோடி இளம் வாக்காளர்கள்  உள்ளனர் என தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 39 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதில் ஆண்கள் - 2.92 கோடி, பெண்கள் - 2.98 கோடி என மொத்தம் 5.91 கோடி  வாக்காளர்கள் உள்ளனர். 13 லட்சம் இளம்  வாக்காளர்களும் இதில் அடக்கம்.

3 முறை சரிபார்ப்பு
தேர்தலில் தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இயந்திரங்களை தேர்தல் ஆணையம் 3 முறை சரி பார்க்கிறது. முதலாவதாக, தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே அனைத்து அரசியல்  கட்சியினரையும் அழைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்கினை பதிவு செய்யும். இதில் பிரச்னைகள் உள்ள இயந்திரங்கள் அப்புறப்படுத்தப்படும். தொகுதிவாரியாக அனுப்பி வைத்தபின் சின்னங்கள் பொருத்தப்படும். அப்போது  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரை அழைத்து மாதிரி வாக்குப்பதிவை நடத்தும். பின்னர் வாக்குப்பதிவு நாளன்று அனைத்து வாக்குச்சாவடிகளிலும், ஏஜென்ட்கள் முன்னிலையில் சீல் உடைக்கப்பட்டு, மாதிரி வாக்குப்பதிவு  ஒரு மணி நேரத்திற்கு முன்பு நடத்தப்படும். அதன் பின்பே தேர்தலில் மக்கள் வாக்களிப்பார்கள்.

விவிபேட்டில் பிரச்னையா?
விவிபேட் இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம் தெரியும். தெரியாதபட்சத்தில் வாக்காளர், தேர்தல் அலுவலரிடம் 17ஏ, 17சி, படிவத்தை பூர்த்தி செய்து  அனைத்து கட்சிகளின் ஏஜென்ட்கள் முன்னிலையில் சோதனை  முறையில் வாக்களிக்க (test vote)
சொல்வார்.

மாடல் 3 இருக்க பயமேன்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் இணைக்கப்படும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் தலா 16 வாக்காளர்களின் பெயர்களை மட்டுமே சேர்க்கமுடியும். அந்த வகையில் ‘மாடல் 2’ கட்டுப்பாட்டு இயந்திரத்தில் 4 வாக்குப்பதிவு  இயந்திரங்களை இணைக்க முடியும். ஒரு நோட்டா போக 63 வாக்காளர்கள் மட்டும் போட்டியிடும் வகையில் இயந்திரத்தின் செயல்பாடு இருந்தது. 63 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிட்டால் அந்த தொகுதியில் வாக்குச்சீட்டு  மூலம்தான் தேர்தலை நடத்தமுடியும் என்ற நிலை இருந்து வருகிறது.
தற்போது புதிதாக வந்துள்ள ‘மாடல் 3’ல் 24 வாக்குப்பதிவு இயந்திரங்களை இணைக்க முடியும். இதன் மூலம் ஒரு நோட்டா போக 383 வாக்காளர்கள் போட்டியிட்டாலும் கவலையில்லை. தற்போதுள்ள மாடல் 3 வாக்குப்பதிவு  இயந்திரத்திலும் வேட்பாளர் படம், சின்னம், பெயர் ஆகியவற்றை பிரைலி முறையில் பதிவு செய்ய முடியும். இதனால் பார்வையற்றவர்கள் எளிதில் ஓட்டுப்போட வழி செய்யப்பட்டுள்ளது.

உண்‘மை’ அறிவோம்
தேர்தலில் வாக்களிக்க செல்லும் முன்பு வாக்காளரின் இடது கை ஆட்காட்டி விரலில் நகத்திற்கும், தோலிற்கும் மத்தியில் அழியாத மையை தேர்தல் பணியாளர் வைப்பார். அந்த விரல் இல்லாவிட்டால் அதற்கடுத்த விரலிலும்,  இடது கையில் விரல்களே இல்லா விட்டால் வலதுகை ஆட்காட்டி விரலிலும், இரண்டு கைகளுமே இல்லாதவர்களுக்கு இடதுகை மணிகட்டிலும் மை வைக்கப்படும். கைகளே இல்லாதவர்களுக்கு இடதுகால் விரலில் மை  வைக்கப்படும்.

பெண் எம்பிக்கள் குறைவு
உலகிலேயே சிறிய நாடான ருவாண்டாவில் 61 சதவீதம் பெண்கள் போட்டியிட்டு பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர். இந்தியாவில் 1996ம் ஆண்டே பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டாலும்,  இன்றளவும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமலேயே உள்ளது. இதனால் பெண் எம்பிக்கள் இந்தியாவில் குறைவாகவே இடம் பெறுகின்றனர். கடந்த 2014 மக்களவை தேர்தலில் இடம் பெற்ற பெண் எம்பிக்கள் 61 பேர்  மட்டுமே. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தியாவில் பெண் வாக்காளர்களே அதிகளவு உள்ளனர். பெண்களை கவுரவப்படுத்தும் விதமாக தேர்தல் ஆணையம் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், தலா ஒன்று என்ற  கணக்கில் முழுக்க பெண் தேர்தல் அலுவலர்களை கொண்ட மாதிரி வாக்குச்சாவடி மையங்களை உருவாக்கி வருகிறது.

‘ஆப்’ மூலம் புகாரளிக்கலாம்
அரசியல் கட்சியினரின் அத்துமீறல், பணம் கொடுத்தல், கள்ள ஓட்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை cVIGIL என்ற ஆப் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு நீங்கள் தெரியப்படுத்தலாம். உங்கள் ஆன்ட்ராய்ட் போனில் இந்த  ஆப்பை டவுன்லோடு செய்து விதிமீறலை வீடியோ, போட்டோ எடுத்து நேரடியாக தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பலாம்.

வருவாய்த்துறை ‘அலர்ட்’
இந்த மக்களவை தேர்தலில்தான் வருமான வரித்துறை 24 மணிநேரமும் செயல்படக் கூடிய கட்டுப்பாட்டு அறையை திறந்துள்ளது. இதில் பணம் பதுக்கி வைத்தல், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பரிசு பொருட்கள்,  பொருட்களை பதுக்கி வைத்தல் குறித்து எந்நேரமும் தகவல் தருவதற்கு இலவச தொலைபேசி எண்களை தந்துள்ளது. இதில் புகார்கள் தரப்படுபவர்கள் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும். இதற்கான எண்கள் 1800 425 669, 94454- 67707.

காற்று புகாத அறை
வாக்குப்பதிவுக்கு முன், பின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் ஒவ்வொரு சட்டசபை தொகுதிவாரியாக இருட்டறை (காற்றுகூடா புகாத அறை) ஏற்படுத்தப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பத்திரமாக வைக்கப்படும். இங்கு  சிசிடிவி கேமரா செயல்பாட்டுடன், துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணிநேரமும் பணியில் இருப்பர்.

‘49 ஓ’வும்...நோட்டாவும்...
கடந்த 2013ம் ஆண்டுக்கு முன்பு வரை வாக்களிக்க விருப்பமில்லாதவர்கள், தேர்தல் அதிகாரியை சந்தித்து ‘49 ஓ’ படிவத்தை பெறுவார்கள். அதனை பூர்த்தி செய்து தந்தவுடன் அந்த படிவம் தனியாக முத்திரையிடப்பட்டு  வைக்கப்படும். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ‘ரகசியம்’ என்ற சொல் 49ஓவில் பின்பற்றப்படவில்லையென தெரிவித்ததன் அடிப்படையில் உச்சநீதிமன்றம் உத்தரவிற்கு பின்பு ‘நோட்டா’ என புதிய முறை,  அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் கொண்டு வரப்பட்டது. இதுவும் கடந்த 2014 மக்களவை தேர்தலில் இந்தியா முழுவதும் 59 லட்சம் வாக்குகளை வாங்கி சாதனை படைத்தது. தமிழகத்தில் 1.4 சதவீதம் வாங்கியது.  நீலகிரி தொகுதியில் சென்ற தேர்தலில் அதிகபட்சமாக 45 ஆயிரம் வாக்குகளை நோட்டா அள்ளியது.

மலைக்கிராமங்களில்...
தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், கோவை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் மலைக்கிராமங்கள் அதிகளவு உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு தேர்தலுக்கு முதல்நாளே வாக்குப்பதிவு இயந்திரங்களை  கழுதைகளின் மேல் வைத்து சுமந்து செல்வதும், குறிப்பிட்ட தூரம் சென்றவுடன் தலையில் சுமந்து செல்வதும் நடக்கும். கழுதைகளை ராஜமரியாதையாக துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் அழைத்து செல்வர்.

யாருக்கு ஓட்டு போட்டோம்
சில நேரத்துல ஏதோ ஒரு குழப்பத்துல ஓட்டு போட்டோம்னு வைங்க.. கவலையேப்படாதீங்க. இதையும் நீங்கள் செக் செய்யலாம். வாக்குப்பதிவு இயந்திரத்துடன் விவிபேட் என அழைக்கப்படும் ஒப்புகை சீட்டு இயந்திரத்தினை  தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் நீங்கள் வாக்களித்த வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் 7 விநாடிகள் உங்களுக்கு தெரியும். இதை வைத்து யாருக்கு வாக்களித்தோம் என தெரிந்து கொள்ளலாம்.

ஆன்லைனில் தபால் வாக்குகள்
ராணுவ வீரர்கள் தங்களது வாக்குகளை முன்பு தபால் வாக்குகள் எனப்படும் வாக்குச்சீட்டு முறையில் பதிவு செய்வார்கள். கடந்த தேர்தல்களில் இதற்காக விமானத்தில் சம்பந்தப்பட்ட ராணுவவீரர்கள் பணியாற்றும் கேம்ப்களுக்கு  வாக்குச்சீட்டுகள் அனுப்பி வைக்கப்படும். இந்த தேர்தலில் ஆன்லைன் மூலமே வாக்குகளை செலுத்திட புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியது. இதன்படி முதல் வாக்கை இந்தோ - திபெத்திய எல்லையில்  பாதுகாப்பு படை டிஐஜி சுதாகர் நடராஜன், கடந்த 6ம் தேதியே பதிவு செய்துள்ளார். நாடு முழுவதும் 30 லட்சம் சர்வீஸ் வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயந்திரத்தில் குளறுபடியா?
வாக்குப்பதிவு இயந்திரங்களில் திடீரென குளறுபடி ஏற்பட்டு வாக்குப்பதிவை நிறுத்தவேண்டிய சூழல் ஏற்பட்டால், அனைத்து ஏஜென்ட்கள் முன்னிலையிலும், தேர்தல் நடத்தும் அலுவலர் பழுதான இயந்திரத்திற்கு சீல் வைத்து  விடுவார். அடுத்து புதிய இயந்திரங்களை பயன்படுத்த மண்டல அலுவலர் அனுமதி பெற்று பயன்படுத்தலாம். ஏற்கனவே பதிவான வாக்குகள் தொழில்நுட்ப வல்லுநர்கள் உதவியுடன் வாக்கு எண்ணும் மையங்களில் எண்ணப்படும்.  கலவரம், ஏற்பட்டாலோ, இயற்கை சீற்றங்கள் உண்டானாலோ, வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு தேர்தல் மீண்டும் நடத்த உத்தரவிடப்படும்.

வெப்பம் குறைக்குமோ?
இந்தமுறை தேர்தல் ஏப்ரல் - மே மாதம் நடைபெறுவதால், தமிழகம் உட்பல பல மாநிலங்களில் வெயில் வெளுத்து வாங்குகிறது. அதிகபட்சமாக 105 டிகிரியை தாண்டி கொளுத்தி எடுப்பதால், இம்முறை வாக்குப்பதிவு சதவீதம்  குறைய வாய்ப்பு ஏற்படுமோ என தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது. இருந்தாலும் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தீவிர விழிப்புணர்வு பிரசாரத்தையும் ஆணையம் செய்து வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : surgeon , In your, finger Sarkar ,forming
× RELATED உலக சுகாதார அமைப்பின் குழுவில்...