×

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து டிக் டாக்’ செயலி நீக்கம் ஆப்பிள், கூகுள் நடவடிக்கை

புதுடெல்லி: மதுரை உயர் நீதிமன்ற கிளையின் உத்தரவைத் தொடர்ந்து, மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி இந்தியாவில் டிக் டாக் செயலியை ஆப்பிள், கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது. கலாசாரத்தை இழிவுபடுத்தி, ஆபாசத்தை ஊக்குவிக்கும் பாலியல் குற்றவாளிகள் டிக் டாக்’ செயலி மூலம் குழந்தைகள், இளைஞர்களின் வாழ்வை சீரழிப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 3ம் தேதி, இது தொடர்பான மனுவை விசாரித்த நீதிமன்றம், டிக் டாக் பதிவிறக்கம் செய்ய தடை விதிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அடங்கிய அமர்வு முன் நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டிக் டாக் செயலி நிறுவனத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முத்து குமார், செயலி தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பதாலும் நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் பல லட்சம் வீடியோக்கள் அழிக்கப்பட்டுள்ளதாலும் தடையை நீக்கி உத்தரவிட வேண்டும்’ என்று வாதாடினார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், இதுகுறித்து மத்திய அரசு, சம்பந்தப்பட்ட நிறுவனம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டு, இதுவரை பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, செயலி மீதான நடவடிக்கை குறித்து மத்திய அரசின் தகவல் தொழில் நுட்பத் துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். தவிர, இதனைக் கண்காணிக்க தனிநபர் ஆணையம் ஒன்றையும் ஏற்படுத்தி, மத்திய அரசு இதனை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 24ம் தேதிக்கு தள்ளிவைத்து ஆணையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, கூகுளின் பிளே ஸ்டோர், ஆப்பிளின் ஆப்பிள் ஸ்டோரில் இருந்து டிக் டாக் செயலியை நீக்கும்படி மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அறிவுறுத்தியது. இதையடுத்து கூகுள், ஆப்பிள் நிறுவனங்கள் அதனை நீக்கி நடவடிக்கை எடுத்தன. இந்நிலையில், டிக் டாக் செயலி நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், `செயலியை ஏற்கனவே பதிவிறக்கம் செய்த 12 கோடி பயனாளர்களும் இதனைத் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

நிறுவனத்தின் நிபந்தனை, விதிகளை மீறி இந்திய பயனாளர்கள் பதிவேற்றம் செய்த 6 கோடி வீடியோக்கள் அழிக்கப்பட்டுள்ளன’ என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும் கூகுள், ஆப்பிளில் செயலி நீக்கம் செய்யப்பட்டது குறித்து எந்த தகவலும் அறிக்கையில் இடம் பெறவில்லை.
முன்னதாக, இது தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு  தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், வரும் 22ம் தேதிக்கு வழக்கை  ஒத்திவைத்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Doc ,Google ,Apple , Court, order, tick talk 'processor, removal, Google activity
× RELATED ஐபோன் கேமரா தயாரிக்க தமிழக நிறுவனத்துடன் பேச்சு!!