×

வீடுகளை காலி செய்யும் பரிதாபத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு: குடிநீர் லாரிகளை எதிர்பார்த்து குடங்களுடன் காத்திருக்கும் அவலம்

சென்னை: சென்னையில் நிலவி வரும் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் குடும்பத்துடன் காலி செய்து வேறு இடங்களை நாடி செல்லும் பரிதாபத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். நிலத்தடி நீர்மட்டம் அதால பாதாளத்துக்கு சென்று விட்டதால் லாரி தண்ணீருக்காக அனைத்து தரப்பு மக்களும் குடங்களுடன் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகரின் தினசரி குடிநீர் தேவை 85 கோடி லிட்டர். ஆனால், தற்போது நாள் ஒன்றுக்கு 40 கோடி லிட்டர் நீர் வினியோகம் செய்யப்படுவதாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

உண்மையில், 30 கோடி லிட்டர் அளவிற்கும் குறைவாகவே, அதுவும் லாரிகள் மூலமே விநியோகிக்கப்படுகிறது. குழாய் மூலமான குடிநீர் விநியோகம் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாகவே அனைத்து பகுதிகளிலும் நிறுத்தப்பட்டு விட்டது. பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், புழல் ஆகிய நான்கு ஏரிகள் தான் சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன. தற்போது, இந்த ஏரிகளின் நீர் இருப்பு, மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது. வடகிழக்கு பருவ மழை ஏமாற்றியதால், 15 ஆண்டுகளுக்கு பிறகு நான்கு ஏரிகளிலும், கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால், நடப்பாண்டில், சென்னையின் குடிநீர் தேவையை எவ்வாறு சமாளிப்பது என சென்னை குடிநீர் வாரியம் விழிபிதுங்கி நிற்கிறது. நான்கு குடிநீர் ஏரிகளிலும் சேர்த்து தற்போது, அரை டி.எம்.சி., அளவிற்கு மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது.

இதைக்கொண்டு, தற்போதைய நீர் வினியோக அளவுப்படி கணக்கிட்டால் கூட, ஒரு வாரத்துக்கு கூட குடிநீர் விநியோகிக்க வாய்ப்பில்லை.  
அதிர்ஷ்டவசமாக, தென்மேற்கு பருவ மழை அளவுக்கு அதிகமாக கொட்டி தீர்த்ததால், மேட்டூர் அணை நீர் மூலம், வீராணம் ஏரியில் முழு கொள்ளளவு நிரம்பி உள்ளது. இதில் இருந்து, ராட்சத குழாய் மூலம், சென்னைக்கு தினமும் 12 கோடி லிட்டர் நீர் கொண்டு வரப்படுகிறது. அதை வைத்து லாரிகள் மூலம் ஒவ்வொரு பகுதிக்கும் தண்ணீர் அனுப்பி சமாளிக்கப்படுகிறது. இப்படி எல்லை மீறி குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், மீஞ்சூர், நெம்மேலியில் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்களை வாரியம் பெரிதும் நம்பியுள்ளது.

இந்த நிலையங்கள் மூலமாக மட்டும், 20 கோடி லிட்டர் குடிநீர், தினமும் கிடைக்கும். இது சென்னையின் குடிநீர் தேவையை, நான்கில் ஒரு பங்கு தான் பூர்த்தி செய்யும். எனவே, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், நிலத்தடி நீர்மட்டமும் கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனால், விவசாய கிணறுகளில் இருந்து, லாரிகள் மற்றும் குழாய்கள் மூலம் நீர் எடுக்கும் திட்டமும் கைக் கொடுக்குமா என்ற கேள்வி எழுகிறது. இவற்றை கருத்தில் கொண்டு, உள்ளூர் நீர் ஆதாரங்கள், கல்குவாரி குட்டைகள், சென்னையை சுற்றியுள்ள நீர் நிலைகள் ஆகியவற்றில் இருந்து, நீர் எடுப்பதற்கான முயற்சியில், சென்னை குடிநீர் வாரியம் ஈடுபட்டுள்ளது.

இதைத்தவிர, தென்மேற்கு பருவ மழையால், நிரம்பிய மேட்டூர், பவானிசாகர் உள்ளிட்ட பெரிய அணைகளில் இருந்தும், சென்னைக்கு நீர் கொண்டு வர, பொதுப்பணித் துறையுடன், வாரியம் ஆலோசித்து வருகிறது. இப்படி சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு எல்லை மீற மற்றொரு காரணமும் உண்டு. நிலத்தடி நீர் மட்டம் அதால பாதாளத்துக்கு சென்று விட்டதால் ஆழ்துளை கிணறுகளில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாத நிலை சென்னை மக்களை வாட்டி வதைத்து வருகிறது. வீட்டு உபயோகத்துக்கான தண்ணீர் கிடைக்காததால் பல வீடுகளில் கழிவறையை பயன்படுத்த  முடியாத அவல நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகளில் தண்ணீர் இல்லாததால் தினமும் தண்ணீர் லாரிகளை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மெட்ரோ வாட்டர் லாரிகளுக்கு முன்பதிவு செய்தால் ஏறக்குறைய 20 நாட்களுக்கு மேல் காத்திருப்பதாக குடியிருப்புவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஒன்று முதல் இரண்டு லாரி தண்ணீர் நாள் ஒன்றுக்கு தேவைப்படும் பட்சத்தில் ஒரு வாரத்துக்கு ஒரு லாரி தண்ணீரை வாங்குவதற்குள் படாதபாடு படுகின்றனர். எவ்வளவு பணம் கொடுத்தாலும் தண்ணீர் கிடைத்தாலும் போதும் என்று சொல்லக்கூடிய வசதிபடைத்த அடுக்குமாடி குடியிருப்புவாசிகளையும் தண்ணீர் பிரச்னை தெருவில் கொண்டு வந்து நிறுத்திவிட்டது.

ஏனென்றால் மெட்ரோ வாட்டர் லாரி தண்ணீர் கிடைப்பதற்கு ஒரு மாதம் வரை காத்திருக்க வேண்டிய நிலையில், தனியார் லாரி தண்ணீர் பெற ஒரு லோடுக்கு ரூ.2000 முதல் ரூ.2500 வரை வாங்குகின்றனர். அப்படி கொடுக்க தயாராக இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கூட தனியார் லாரி தண்ணீரும் கிடைப்பதில்லை. அதற்கும் பல நாட்கள் காத்திருக்கின்றனர். இப்படி அதிக விலை கொடுத்து சமாளிக்கக்கூடிய அடுக்குமாடி குடியிருப்புகளில் மாதம் ஒன்றுக்கு தண்ணீருக்கு மட்டும் ரூ.5000 முதல் ரூ.7000 வரை கட்டணம் நிர்ணயித்துள்ளனர். இதனால் மாத வாடகையே அவ்வளவு தான் கொடுக்கக்கூடிய எங்களால் இவ்வளவு பணம் கொடுத்து தங்க முடியாது என்று பல்வேறு குடும்பத்தினர் வீடுகளை காலி செய்து சென்னைக்கு வெளியில் தண்ணீர் இருக்கக்கூடிய பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

தண்ணீர் பிரச்னையை சமாளிக்க பல பகுதிகளில் 400 முதல் 600 வரை அடி வரை போர்வெல் போட்டும் தண்ணீர் இல்லாமல் பணத்தை இழந்து என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதிங்கி நிற்கின்றனர். தற்போதைய சூழ்நிலையில் சொந்த வீட்டுக்காரர்கள் தான் வேறு வழியில்லாமல் கிடைக்கும் தண்ணீரை சேமித்து அட்ஜெஸ்ட் பண்ணி வாழ்கின்றனர். வாடகைதாரர்களை பொறுத்தவரை வீடுகளை காலி செய்து வருவதால் அடுக்குமாடி குடியிருப்புகளில் பல வீடுகள் எம்டியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு, சென்னை குடிநீர் வாரியம் இருக்கின்ற தண்ணீரை கொண்டு ஓரளவு சமாளித்து விட்டது. ஆனால் இந்த ஆண்டு மாற்று ஏற்பாடுகள் மூலம் கிடைக்கும் தண்ணீரும் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. மேலும் ஆளும் அதிமுக அரசும் குடிநீர் பிரச்னை பற்றி எந்த சிந்தனையும் இல்லாமல் சம்பந்தப்பட்ட அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை தேர்தல் பணிகளில் பிசியாக இருந்து விட்டனர்.  மாற்று ஏற்பாடுகளை பற்றி அலட்சியம் காட்டியதால் ஏற்பட்ட விளைவைத் தான் சென்னை மக்கள் இன்னும் சில நாட்களில் சந்திக்கப் போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : families ,homes , House, evacuation, families, heavy, water, scarcity
× RELATED களைகட்டிய தேர்தல் திருவிழா.....