×

பல்லாயிரம் பக்தர்கள் திரண்டு தரிசிக்க மதுரையில் இன்று தேரோட்டம் நாளை வைகையில் இறங்குகிறார் அழகர்

மதுரை: சித்திரை திருவிழாவில் நேற்று, மதுரை மீனாட்சி அம்மனுக்கு திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. இன்று சித்திரை திருவிழா தேரோட்டம், நாளை வைகையாற்றில் அழகர் இறங்கும் வைபவம் நடக்க  உள்ளது.  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத்திருவிழா கடந்த ஏப். 8ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக அதிகாலை 4 மணிக்கு மணமக்கள்  அலங்காரத்தில் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் மற்றும் பிரியாவிடை கோயில் பழைய மண்டபத்தில் எழுந்தருளினர். திருமணத்தைக் காண திருப்பரங்குன்றம் முருகன் - தெய்வானை, பவளக்கனிவாய் பெருமாள் அதிகாலை 5 மணியளவில் மீனாட்சி கோயிலுக்கு வந்தனர். பின்னர் மணக்கோலத்தில் அம்மன், சுவாமி சித்திரை வீதிகளில் வலம்  வந்தனர். மேலக்கோபுர வாசலில் அம்மன், சுவாமிக்கு பாதபூஜை நடந்தது. தொடர்ந்து கன்னி ஊஞ்சல் ஆடும் நிகழ்ச்சி நடந்தது. கோயில் வடக்கு - மேற்கு ஆடி வீதி சந்திப்பில் அலங்கரிக்கப்பட்டிருந்த மணமேடைக்கு காலை 9.20  மணிக்கு சுந்தரேஸ்வரர் - மீனாட்சி மற்றும் பிரியாவிடை வந்தனர்.

ஓதுவார்கள் யாகம் வளர்த்து வேதமந்திரம் ஓதினர்.சுந்தரேஸ்வரர், மீனாட்சியம்மன் பச்சைப் பட்டிலும், பிரியாவிடை கிளிப்பச்சை பட்டிலும் ஜொலித்தனர். அம்மன் பிரதிநிதியான காளாஸ் பட்டர், சுவாமியின் பிரதியான ஆனந்த் பட்டருக்கு காப்பு கட்டப்பட்டது. பின் விக்னேஷ்வர  பூஜை, புண்ணியாக வாஜனம், பஞ்சகவ்யம், கலச பூஜை, மாங்கல்ய பூஜை நடந்தன. சுவாமி, அம்பாள் மூன்று முறை மாலை மாற்றிக் கொண்டனர். தொடர்ந்து சுந்தரேஸ்வரருக்கு, மீனாட்சியை புனித நீர் கொண்டு தாரை வார்க்கும்  வைபவம் நடந்தது. 21 சுமங்கலி பெண்கள் நவதானிய பூஜை செய்தனர். பின்பு பட்டர்கள் இருவரும் வைரக்கல் பதித்த தங்க திருமாங்கல்யத்தை சுந்தரேஸ்வரரின் பாதம் மற்றும் கரங்களில் வைத்து எடுத்து, பக்தர்களுக்கு  காட்டினர். மங்கள வாத்தியங்கள் முழங்க, பக்தர்கள் பரவசத்துடன் மலர்களை தூவ, காலை 10 மணிக்கு மீனாட்சி அம்மன் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு, திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது.  கூடியிருந்த பெண்கள்,  தங்கள் மாங்கல்யத்துக்கு புதிதாக மஞ்சள் கயிறு மாற்றிக் கொண்டனர்.  சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று அதிகாலை 5.45 மணி நடக்க உள்ளது. தொடர்ந்து அழகர் எதிர்சேவை நடைபெறும். நாளை அதிகாலை 5.45 மணிக்கு மதுரை வைகையாற்றில் அழகர் இறங்கும் வைபவம் நடக்க உள்ளது.

மதுரையில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு
மதுரையில் இன்று நடக்கும் சித்திரை திருவிழா ேதரோட்டத்துடன் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவும் நடக்கிறது. 67 ஆண்டு கால தேர்தல் வரலாற்றில் மதுரை சித்திரை திருவிழாவோடு தேர்தல் நடப்பது இதுவே முதன்முறை.  இதைெயாட்டி கூடுதலாக 2 மணி நேரம் அதாவது காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவதற்கு பதிலாக இரவு 8 மணி வரை நீடித்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி மதுரை மக்களவை  தொகுதியிலுள்ள 1,549 வாக்குச்சாவடிகளில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.  இரவிலும் வாக்குப்பதிவுக்கு அனுமதிப்பதும் இதுவே முதன்முறையாகும்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : pilgrims ,theater ,Madurai , Thousands , pilgrims , Madurai ,theater today
× RELATED மக்களவைத் தேர்தலை முன்னிட்டு...