×

கூத்தாண்டவர் கோயில் சித்திரை பெருவிழா : பூசாரியிடம் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

உளுந்தூர்பேட்டை: விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டர் கோயில் சித்திரை பெருவிழா வருடந்தோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை பெருவிழா 2ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. விழாவையொட்டி தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.  சித்திரை பெருவிழாவின் முக்கிய விழாவான, சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போது தமிழகம் மட்டுமின்றி மும்பை, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வந்த ஆயிரக்கணக்கான திருநங்கைகள் தங்க, வைர நகைகள், பட்டுப்புடவை அணிந்து அழகு பதுமைகளாக கோயில் பூசாரி கையால் தாலி கட்டிக்கொண்டனர்.

தாலி கட்டிய பிறகு புதுமணப்பெண்கள்போல் காட்சி அளித்த திருநங்கைகள் கூத்தாண்டவர் கோயில் அருகில் பல்வேறு இடங்களில் இருந்து வந்த திருநங்கைகளுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக விடிய, விடிய கும்மி அடித்து கூத்தாண்டவரை தனது கணவராக நினைத்து அவரின் அருமை, பெருமைகள் கூறியபடி ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இதனை காண ஆயிரக்கணக்கானவர்கள் கூவாகம் கிராமத்தில் திரண்டனர். திருநங்கைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும், கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையிலும் கோயிலுக்கு உள்ளேயும், வெளியேயும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று (17ம் தேதி) சித்திரை தேரோட்டம் நடைபெறுகிறது.

அப்போது தேர் பந்தலடிக்கு சென்ற பிறகு அழுகளம் எனப்படும் அரவாண் களப்பலி இடும் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து 18ம் தேதி விடையாத்தியும், 19ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் 18 நாள் சித்திரைப் பெருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள், விழாக்குழுவினர், கூவாகம் கிராம மக்கள் செய்து இருந்தனர். விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி பாலசந்தர் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நாளை மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால், வெளியூர்களில் இருந்து வரவேண்டிய திருநங்கைகள் பலர் நேற்று நடந்த விழாவுக்கு வரவில்லை. விழாவில் கலந்து கொண்ட திருநங்கைகள், இன்று நடைபெறும் தேரோட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு, வாக்களிக்க எங்கள் ஊருக்கு செல்வோம் என தெரிவித்தனர்.   


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : festival ,Kuttantavar Koilai Chaiti ,priest , Kuttantavar temple,chithirai festival, transgender
× RELATED காரைக்கால் அம்மையார் கோயிலில்...