×

இந்தியாவில் டிக் டாக் செயலி முடக்கம்..... ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியது கூகுள்

மதுரை: ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து இந்தியாவில் டிக் டாக் செயலியை கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது. டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று  மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை கடந்த 3-ம் தேதி டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. தொடர்ந்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது டிக்-டாக் செயலியை உருவாக்கிய நிறுவனம் தரப்பில் ஆஜரான வக்கீல் நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் தற்போது டிக்-டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. எனவே அந்த தடையை விலக்கி உத்தரவிட வேண்டும்” என்று வாதாடினார். இதற்கு நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். மேலும், “இந்த வழக்கு குறித்து பதில் அளிக்க மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனம் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. எனவே டிக்-டாக் செயலி மீதான நடவடிக்கை குறித்து மத்திய அரசின் தகவல் தொழில் நுட்பத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், டிக் டாக் செயலியை இந்தியாவில் கூகுள் நிறுவனம் முடக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிக் டாக் செயலியை தரவிறக்கம் செய்ய முடியாத நிலை இருப்பதாக கூறப்படுகிறது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு மத்திய அரசு, நீதிமன்ற உத்தரவை பின்பற்றுமாறு கடிதம் அனுப்பியிருந்தது. இந்நிலையில், கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் டிக் டாக் செயலியை நீக்கியதாக கூறப்படுகிறது. எனினும், ஆப்பிள் ஸ்டோரில் டிக் டாக் செயலி இன்னும் நீக்கப்படவில்லை.

கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனிப்பட்ட செயலிகள் தொடர்பாக நாங்கள் கருத்து தெரிவிக்க மாட்டோம். நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவோம்” என தெரிவித்து உள்ளது. ஆப்பிள் நிறுவனம்,  இது தொடர்பாக கருத்து கூற மறுத்துவிட்டது. கூகுள் நிறுவனத்தின் நடவடிக்கை தொடர்பாக கருத்து கூற டிக் டாக் நிறுவனமும் மறுப்பு தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,Google ,Play Store ,Directors , TikTok ban, India, Google, Madras HC ,
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!