×

தங்களை எதிர்க்கும் குரல்களை ஒடுக்குவதே பாஜ, ஆர்எஸ்எஸ் பணி: பத்தனம்திட்டாவில் ராகுல் பேச்சு

திருவனந்தபுரம்: காங்கிரஸ் கட்சி மத நம்பிக்கை கொண்டவர்களுக்கு எப்போதுமே பாதுகாப்பாக இருக்கும் என்று பத்தனம்திட்டாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல்காந்தி தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உத்தரப் பிரதேசம் அமேதி தொகுதியுடன், கேரள மாநிலம் வயநாட்டிலும் போட்டியிடுகிறார். இந்த நிலையில் 2வது கட்ட பிரசாரத்துக்காக நேற்று முன்தினம் இரவு ராகுல்காந்தி விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். நேற்று சூறாவளி பிரசாரத்தை தொடங்கிய அவர் காலை 10.30 மணிக்கு மாவேலிக்கரை தொகுதியில் உள்ள பத்தனாபுரம் மற்றும் 11.30 மணிக்கு பத்தனம்திட்டா ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார்.

பத்தனாபுரத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது:

இந்தியா இப்போது மிகவும் ஆபத்தான கட்டத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. பாஜவும், ஆர்எஸ்எஸ்சும் சேர்ந்து இந்தியாவில் மின்னல் தாக்குதல் நடத்துகின்றன. தங்களை எதிர்க்கும் குரல்களை ஒடுக்கவே அவர்கள் முயற்சிக்கின்றனர். இதற்கு தேர்தல் மூலம் காங்கிரஸ் தக்க பதிலடி கொடுக்கும். இதனால்தான் காங்கிரசை இந்தியாவை விட்டு விரட்டுவோம் என மோடி கூறுகிறார். நாங்கள் நியாய் திட்டத்தை கொண்டு வருவோம் என கூறியிருந்தோம். அந்த திட்டத்துக்கு நடுத்தர வர்க்கத்திடம் இருந்து வரி வசூலிக்க திட்டமிட்டிருப்பதாக பாஜ பொய் பிரசாரம் செய்து வருகிறது.
ஆனால் அதில் எந்த உண்மையும் கிடையாது.

அந்த திட்டத்துக்காக நடுத்தர வர்க்கத்திடம் இருந்து ஒரு பைசாவும் வசூலிக்கமாட்டோம். அனில் அம்பானி போல வரி ஏய்ப்பு நடத்தும் பெரும் முதலாளிகளிடம் இருந்து தான் நாங்கள் அந்த திட்டத்துக்கு வரி வசூலிப்போம். அவர்களிடம் இருந்து வரியை வாங்கி ஏழை மக்களுக்கு அளிப்போம்.
போர் விமானங்களை தயாரிக்க மோடி தனது நண்பரான அனில் அம்பானிக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். ஆனால் அந்த நிறுவனம் இதுவரை ஒரு போர் விமானம் கூட தயாரித்ததில்லை என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். பிரதமர் மோடியின் நண்பர்கள் என்ற ஒரே காரணத்தினால் தான் சில பணக்காரர்களுக்கு எல்லாம் கிடைக்கிறது. கடந்த முறை மோடி ஆட்சிக்கு வரும்போது அளித்த வாக்குறுதிகள் ஒன்றை கூட அவர் நிறைவேற்றவில்லை. நான் கேரளாவில் போட்டியிடுவதை பெருமையாக கருதுகிறேன்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றார். தொடர்ந்து பத்தனம்திட்டாவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசுகையில், ‘‘காங்கிரஸ் கட்சி என்றுமே மத நம்பிக்கை கொண்டவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் கட்சியாகும். யாருடைய மத நம்பிக்கைக்கும் எதிராக செயல்பட மாட்டோம், அவர்களை வேதனைப்படுத்தவும் மாட்டோம். மத நம்பிக்கைகளும், ஆச்சாரங்களும் பாதுகாக்கப்பட வேண்டியவை ஆகும். ஆனால் மத நம்பிக்கையின் பெயரை வைத்து வன்முறைகளில் ஈடுபடக்கூடாது.

கேரள மக்களுக்கு மத நம்பிக்கையில் சுயமாக முடிவெடுக்கும் திறமை இருக்கிறது’’ என்றார். பத்தனம்திட்டா மாவட்டத்தில்தான் சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. தேர்தல் பிரசாரத்திற்கு சபரிமலை ஐயப்பன் பெயரை பயன்படுத்தக்கூடாது என்று தேர்தல் கமிஷன் தடை விதித்திருந்தது. இதனால்தான் ராகுல்காந்தி தனது பேச்சில் சபரிமலை குறித்து நேரடியாக பேசவில்லை.

2ம் நாள் பிரசாரம்

2வது நாளான இன்று காலை 7.30 மணிக்கு கண்ணூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து ஹெலிகாப்டரில் வயநாடு தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் பிரசாரத்துக்காக செல்கிறார்.  பிரசாரத்தை முடித்துக் கொண்டு இரவு டெல்லி திரும்புகிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bhajan ,RSS ,speech ,Pathanamthitta ,Rahul , Opposing, voice, Bhaj, RSS work, Rahul, talk
× RELATED திமுக அளித்த புகாரில் ஒன்றிய...