×

பாஜ.வுக்குதான் ஓட்டு போடுறீங்களான்னு சிசிடிவி கேமராவில் மோடி பார்த்துக்கிட்டே இருப்பார்: குஜராத் எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

குஜராத்: குஜராத்தில் உள்ள 26 மக்களவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வரும் 23ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. கடந்த 2014ல் பாஜ 26 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இந்நிலையில், தஹோத் (தனி) மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பெதேபுராவின் பாஜ எம்எல்ஏ ரமேஷ் கதாரா, பழங்குடியினர் அதிகம் வசிக்கும் கிராமம் ஒன்றில் பேசிய வீடியோ காட்சிகள் வைரலாகி உள்ளன. அவர் பேசுகையில், ‘‘இங்கு போட்டியிடும் பாஜ வேட்பாளரும் எம்பி.யுமான ஜஸ்வந்த்சின் பாபோர் புகைப்படம், தாமரை சின்னம் ஆகியவை வாக்கு இயந்திரத்தில் இருக்கும். அதை அழுத்துங்கள். நீங்கள் பாஜ.வுக்குதான் ஓட்டு போடுகிறீர்களா அல்லது காங்கிரசுக்கு போடுகிறீர்களா என்பதை பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடியே பார்த்து விடுவார். ஏனென்றால், எல்லா பூத்திலும் சிசிடிவி கேமரா வைத்திருக்கிறோம். கேமராவில் எல்லாம் தெரிந்து விடும்.

எந்த பூத்தில் பாஜ.வுக்கு ஓட்டு குறையுதோ, அந்த கிராமத்துக்கு வேலைவாய்ப்புகளும் குறைந்துவிடும். உங்கள் புகைப்படம், தகவல் அனைத்துமே வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் கார்டில் இருப்பதை மறந்து விடாதீர்கள்’’ என எச்சரிக்கை விடுத்தார்.இந்த வீடியோ வைரலாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தஹோத் கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான காரதி, தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக எம்எல்ஏ கதாராவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். இது குறித்து கதாரா கூறுகையில், ‘‘வீடியோவில் உண்மை திரிக்கப்பட்டுள்ளது. பழங்குடியின மக்களுக்கு அவர்களுக்கான மொழியில் வாக்குப்பதிவு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். மற்றபடி யாரையும் நான் மிரட்டவில்லை’’ என்கிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,CCTV ,BJP MLA , BJP, Vote, CCTV Camera, Modi, Gujarat MLA, controversy
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...