×

22 சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் அதிமுக ஆட்சி கவிழுமா? 10 தொகுதியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம், மே 23ம் தேதி விடை தெரியும்

சென்னை:  தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த 2016ம் ஆண்டு பொதுத்தேர்தல் நடந்தது. இதில் அதிமுக 136 இடங்களில் வென்று ஆட்சியை மீண்டும் தக்க வைத்தது. திமுக கூட்டணியில் திமுக 89 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு இடம் என 98 இடங்களில் வெற்றி பெற்றன. வலுவான எதிர்க்கட்சியாக திமுக உள்ளது. இதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுகவின் பலம் 135 ஆனது. தொடர்ந்து ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் நடத்தப்பட்ட தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது. ஆர்.கே.நகர் தொகுதி டி.டி.வி.தினகரன் வசமானது.

தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து அதிமுகவின் பலம் மேலும் குறைந்தது. அதாவது, அதிமுகவின் எண்ணிக்கை 117 ஆனது. அதன் பிறகு திருப்பரங்குன்றம் ஏ.ேக.போஸ், சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மறைவு, ஓசூர் எம்எல்ஏ பாலகிருஷ்ண ரெட்டி தகுதியிழப்பு என்று அதிமுக உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்து 114 (சபாநாயகர் சேர்த்து) ஆனது. தற்போதைய நிலையில் 107 எம்எல்ஏக்கள் இருந்தாலே போதுமானது. ஆனால் அதிமுகவிடம் 114 பேர் (சபாநாயகரை சேர்த்து) உள்ளனர்.
அதே நேரத்தில் அதிமுகவில் அறந்தாங்கி, விருத்தாச்சலம்,  கள்ளக்குறிச்சி என 3 தொகுதி எம்எல்ஏக்கள் டி.டி.வி.தினகரன் பக்கம் உள்ளனர்.

இதுதவிர அதிமுகவின் இரட்டை இலை  சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ்  ஆகியோரும் மாற்று கருத்தில் இருந்து வருகின்றனர். அதில் தமிமுன் அன்சாரி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கருணாசும் தனியாகத்தான் உள்ளார். இதனால் 6 எம்எல்ஏக்கள் அதிமுகவுக்கு எதிராகவே உள்ளனர். எனவே, அதிமுகவின் எண்ணிக்கை 108 ஆகத்தான் உள்ளது. சபாநாயகரை சேர்க்காவிட்டால் அதிமுகவுக்கு 107 தான் பலம். 22 தொகுதிக்கு தேர்தல் நடைபெற்று அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்றால் 118 எம்எல்ஏக்கள் தேவை.
இதனால், இடைத்தேர்தலில் 11 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.  மெஜாரிட்டி இல்லாத பட்சத்தில் சபாநாயகர் வாக்களிக்கலாம் என்ற விதி ஒன்று உள்ளது. அவரை  சேர்த்தால் அதிமுகவுக்கு 10 எம்எல்ஏக்கள் தேவைப்படும்.

இதனால், அதிமுக 22 தொகுதிக்கு நடைபெறும் தேர்தலில் 10 தொகுதிகளில் எப்படியாவது வென்றாக வேண்டும். வெற்றி பெறாவிட்டால் ஆட்சியை இழக்கும் நிலை ஏற்படும். இதே நேரத்தில் திமுக தலைவர் கருணாநிதி மறைவு காரணமாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் எண்ணிக்கை (திமுக 88, காங்கிரஸ் 8, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1) 97 என உள்ளது. 22 தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் 21 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றால் திமுக ஆட்சி அமைக்க முடியும். 2021 வரை திமுக ஆட்சி அமைக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எடப்பாடி அரசுக்கு 10 எம்எல்ஏக்கள் இல்லாவிட்டால் கவிழ்ந்து விடும். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில், அதிமுகவில் உள்ள பல எம்எல்ஏக்கள் தற்போது திமுக ஆதரவு மனநிலையில் உள்ளனர்.

இதனால் ஆட்சி கவிழ்ந்தால் திமுக ஆட்சி அமைக்கும் என்ற சூழ்நிலை தற்போது ஏற்படும் என்கின்றனர் நடுநிலையாளர்கள். இதனால், எடப்பாடி ஆட்சி நீடிக்குமா அல்லது திமுக ஆட்சியை பிடிக்குமா என்பது மே 23ல் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் விடை தெரிந்து விடும். எனவே, தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயிப்பதாக 22 தொகுதிக்கான இடைத்தேர்தல் அமைந்துள்ளது. இந்த இடைத்தேர்தலில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்பது தமிழகத்தில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் உலகத்தின் பார்வையியே தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தல் பக்கம்தான் திரும்பியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : LS ,AIADMK ,constituencies , 22 Legislative Assembly, by-election, AIADMK, victory, answer
× RELATED கூடாரமே காலி ஆகிறதா? அதிமுக காலை வாரிய தென் மாவட்ட தொகுதிகள்