×

அசம்கானுக்கு செக் வைப்பாரா சலங்கை ஒலி நாயகி?

ஆந்திர மாநிலம், ராஜமுந்திரியில் பிறந்தவர் ஜெயப்பிரதா. தனது 13வது வயதில் பள்ளி ஆண்டு விழாவில் நடனம் ஆட, அந்த விழாவுக்கு வந்திருந்த தெலுங்கு சினிமா கலைஞர் ஒருவர், பூமி கோசம் படத்தில் ஒரு பாடலில் நடனம் ஆட ஜெயப்பிரதாவை கேட்டார். அந்த ஒரு பாடல் அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.  1976ல் ஹீரோயினாக பாலசந்தரின் மன்மதலீலை படத்தில் அறிமுகம் ஆனார். கமல்ஹாசனுக்கு ஜோடியாக சலங்கை ஒலி உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

சாணக்யா சந்திரகுப்தா என்ற ஒரே படத்தில் சிவாஜி கணேசன், என்டிஆர், நாகேஸ்வரராவ் என 3 சூப்பர் ஸ்டார்களுடன் நடித்த ஒரே டாப் நடிகை என்ற பெருமையும் பெற்றார். இவரை தென்னிந்திய சினிமாவிலிருந்து இந்திக்கு அழைத்து சென்றவர் டைரக்டர் கே.விஸ்வநாத். ஜெயா இன்று வடநாட்டு அரசியலில் கோலோச்ச இந்த பாலிவுட் பிரவேசம்தான் பிள்ளையார் சுழி போட்டது. சர்கம் படத்தில் ரிஷி கபூருடன் நடித்தார். பாடல்களும் படமும் சூப்பர் ஹிட். அதன் பிறகு பாலிவுட் தயாரிப்பாளர்கள் எல்லோரும் ஐதராபாத்தில் முகாமிட்டு ஜெயப்பிரதாவின் கால்ஷீட்டுக்கு தவம் கிடந்தனர். தொடர்ந்து தர்மேந்திரா, அமிதாப்பச்சன், ராஜேஷ் கன்னா உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பாலிவுட்டில் அப்போதைய லேடி சூப்பர் ஸ்டார் ஹேமாமாலினிக்கு போட்டியாக வந்தார் ஜெயப்பிரதா.

சினிமாவில் ஹிட் படங்களால் தனக்கு பிரேக் கொடுத்த என்டிஆரின் அழைப்பின் பேரில் 1994ல் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். அப்போது நடந்த சட்டசபை தேர்தலில் என்டிஆருக்காக பிரசாரம் செய்தார். என்டிஆரின் உடல் நலம் பாதிக்கப்பட்டு, பிறகு நடந்த அரசியல் திருப்பத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு பின்னால் எம்எல்ஏக்கள் அணி திரண்டனர். அப்போது ஜெயப்பிரதாவும் அந்த அணிக்கு சென்றுவிட்டார். பின்னர் மாநிலங்களவைக்கு தெலுங்கு தேசம் சார்பில் அவர் தேர்வானார். சந்திரபாபு நாயுடுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியிலிருந்து பிரிந்து சமாஜ்வாடியில் இணைந்தார். 2004ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் உ.பியின் ராம்பூரில் போட்டியிட்டு வென்றார்.

2009ல் தேர்தலிலும் அதே தொகுதியிலிருந்து தேர்வானார். 2014 நாடாளுமன்ற தேர்தலில் ராம்பூருக்கு பதிலாக பிஜ்னோரில் போட்டியிட்டு தோற்றார். கடந்த மார்ச்சில் பாஜவில் இணைந்த ஜெயப்பிரதா, இந்த தேர்தலிலும் தனது பேவரைட் ராம்பூரில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து சமாஜ்வாடி சார்பில் வம்பு பேச்சுகளுக்கு பெயர்போன அசம்கான் போட்டியிடுகிறார்.9 முறை எம்எல்ஏவாக இருந்த அசம்கான், முதல்முறையாக எம்.பி. பதவிக்கு போட்டியிடுகிறார். அதுவும் ராம்பூரின் செல்லமான ஜெயப்பிரதாவை எதிர்த்து. அசம்கானின் அறுவெறுப்பான ஆபாச பேச்சுகளும் அதற்கு ஜெயப்பிரதா கொடுத்து வரும் பதிலடிகளும் இப்போதே மக்கள் மத்தியில் ஜெயாவுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி வருவதாக கணிக்கப்படுகிறது. இதனால் அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : hero , Azam Khan, Czech, yellow, heroine
× RELATED பதினோரு விநாயகர்களின் பரவச தரிசனம்