திமுக கூட்டணிக்கு கிறிஸ்தவர்கள் ஆதரவு: பேராயர் அந்தோணி பாப்புசாமி அறிவிப்பு

மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக மதுரை உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய மக்கள் இப்போது சந்திக்கவிருக்கும் தேர்தல் மதவாதத்துக்கும், மதச்சார்பின்மைக்கும் இடையே நடக்கும் போர். ஒடுக்கப்பட்டோர், சிறுபான்மையினரின் உரிமைகளை மறுக்கும் மதவாத அரசியலுக்கு விடை கொடுப்போம். தேர்தலில் வெற்றி கண்டு ஆட்சி அதிகாரத்தை சுவைக்கலாம் என்ற கனவில் மக்களை மதத்தின் அடிப்படையில் பிரிக்கும் கட்சிகளோடு, அணி சேர்ந்துள்ள கட்சிகளையும் ஒதுக்குவோம்.

மதவாத கட்சிகள் வெற்றி பெறக்கூடாது. இதன்பேரில் கிறிஸ்தவ அனைத்துத் தரப்பு மக்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற மாநாடு ஆயர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏழை, எளிய மக்களின் நலன்கருதியும், தேசத்தின் எதிர்காலம் கருதியும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டணிக்கு கிறிஸ்தவ மக்களின் கோரிக்கைகளும் முன்மொழியப்பட்டன. அதில் பட்டியல் சாதியினருக்கும், பழங்குடியினருக்கும் அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள சலுகைகளை மதம் மாறிய கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கும் வழங்குமாறு குடியரசுத் தலைவரின் ஆணையில் மாற்றம் செய்ய வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

More