×

தமிழகத்தில் 38 மக்களவை, 18 சட்டசபை தொகுதிகளில் அனல் பறந்த பிரசாரம் ஓய்ந்தது... பதற்றமான 8000 வாக்குச்சாவடிகளில் துணை ராணுவம் குவிப்பு

சென்னை: தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகள், 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை இடைவிடாமல்  வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது.நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11ம் தேதியில் இருந்து மே மாதம் 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி முதல்கட்ட தேர்தல் கடந்த 11ம் தேதி முடிவடைந்தது. 2வது கட்ட தேர்தல் நாளை  (18ம் தேதி) நடைபெறுகிறது. 2வது கட்ட தேர்தலின்போது தமிழகத்தில் வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், 38 நாடாளுமன்ற தொகுதி, புதுச்சேரியில் ஒரு தொகுதி என நாடு முழுவதும் மொத்தம் 96  தொகுதிகளிலும், தமிழகத்தில் 18 சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தல் மற்றும் ஒடிசா மாநில சட்டமன்றத்துக்கான தேர்தலும் நாளை நடைபெறுகிறது.இதையொட்டி தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த சூறாவளி பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பிரசாரத்தை திருவாரூரில் நிறைவு செய்தார்.  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்திலும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனியிலும், வைகோ ஈரோட்டிலும், டி.டி.வி.தினகரன், கமல்ஹாசன் ஆகியோர் சென்னையிலும் தங்களது பிரசாரத்தை நிறைவு செய்தனர்.

தமிழகத்தில் நாளை நடைபெறும் தேர்தலுக்கான எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியதாவது: தொகுதிக்கு தொடர்பில்லாத வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து  அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சி பணியாளர்கள் ஆகியோர் நேற்று மாலை 6  மணிக்கு மேல் அந்தந்த தொகுதியை விட்டு வெளியேற்றப்பட்டனர்.  தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, இன்று பிற்பகல் முதல் தமிழகம் முழுவதும் உள்ள 67,720 வாக்குப்பதிவு மையங்களிலும் உச்சக்கட்டபாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்கள் துணை ராணுவம் பாதுகாப்புடன் இன்று பிற்பகலுக்கு மேல் எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்ட ஊழியர்களும்  அந்தந்த வாக்குச்சாவடிக்கு இன்று மதியத்திற்குள் வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நாளை (18ம் தேதி) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணி வரை இடைவேளை எதுவும்  இல்லாமல் தொடர்ச்சியாக வாக்குப்பதிவு நடைபெறும். மதுரை தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.வாக்குப்பதிவு நாளன்று, வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்குள்ளாக செல்போன் கொண்டு செல்லவோ பயன்படுத்தவோ கூடாது. வாக்குச்சாவடிக்குள் செல்பி போன்ற புகைப்படங்கள் எடுக்க கூடாது. ேவட்பாளர்களின்  தற்காலிக அலுவலகம், வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அமைக்க வேண்டும். அங்கு 2 பேர்தான் அமர வேண்டும். அங்கு தேவையில்லாத கூட்டத்தை அனுமதிக்கக் கூடாது போன்ற அறிவுறுத்தல்கள்  கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கா 160 கம்பெனி ராணுவ வீரர்கள் வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இன்று முதல் வாக்குப்பதிவு மையங்களில்  துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட தொடங்குவார்கள். தமிழகத்தில் 8,293 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குப்பதிவு மையங்கள் முழுவதும் வெப்கேமரா  பொருத்தப்பட்டு, சென்னையில் இருந்து கண்காணிக்கவும், கூடுதல் துணை ராணுவ வீரர்கள் நியமிக்கப்படவும், மைக்ரோ அப்சர்வர்கள் முன்னிலையில் தேர்தல் நடைபெற வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம்  உத்தரவிட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.தமிழகத்தில் நேற்று மாலை 6 மணிக்கு பிரசாரம் ஓய்ந்ததுபோல், புதுச்சேரியில் ஒரு மக்களவை தொகுதி, ஒரு சட்டசபை தொகுதிக்கும் பிரசாரம் ஓய்ந்தது. இங்கும், நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் உள்ள 39  மக்களவை தொகுதிகளில், 781 ஆண்கள் 63 பெண்கள் ஒரு திருநங்கை உட்பட 845 வேட்பாளர்களும், 18 சட்டசபை தொகுதிகளில் 242 ஆண்கள் 27 பெண்கள் என, மொத்தம் 269 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

நாளை காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு
தமிழகம் முழுவதும் 67,720 வாக்குப்பதிவு மையங்களிலும் நாளை காலை 7 மணிக்கு பொதுமக்கள் வாக்களிக்க தொடங்குவார்கள். முன்னதாக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு  நடைபெறும். அதன்படி, வாக்குப்பதிவு மையங்களில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் 50 ஓட்டுக்கள் வெவ்வேறு சின்னங்களில் பதிவு செய்யப்படும். அந்த வாக்குப்பதிவுகள் அனைத்தும், வாக்குப்பதிவு மையங்களில்  உள்ள பூத் ஏஜென்ட்கள் முன்னிலையில் நடைபெறும். மின்னணு எந்திரங்கள் முறையாக வேலை செய்கிறதா என்பதை கட்சிக்கான ஏஜென்ட்டுகள் தெரிந்து கொள்வதற்காகவே இந்த மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும். 18  சட்டமன்ற தொகுதிக்கான மையங்களில் மட்டும் நாளை காலை 5.30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும். இதைத்தொடர்ந்து காலை 7 மணிக்கு புதிதாக மீண்டும் பொதுமக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamil Nadu ,constituencies ,Loksabha ,tens of thousands ,polling stations , 38 Lok Sabha,18 Assembly , troubled 8000, polling, Subcommittee concentration
× RELATED மக்களவை தேர்தலை ஒட்டி நாளை...