தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் தயார்...முதியோர், கர்ப்பிணி பெண்களுக்கு வாக்களிக்க முன்னுரிமை: சத்யபிரதா சாஹூ பேட்டி

சென்னை: தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் தயார் என்றும், முதியோர், கர்ப்பிணி பெண்களுக்கு வாக்களிக்க முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் அமைக்கப்பட்டிருக்கும், தேர்தல் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு அறையை சத்யபிரதா சாஹூ பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. தமிழ்நாடு முழுவதும், மொத்தம் 67,720 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன, அதில், 8,293 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது.

பதற்றமானதாக கண்டறியப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையங்கள் அனைத்தும், இணைய வழியாக நேரடியாக கண்காணிக்கும் வெப்காஸ்டிங் முறை மூலம் கண்காணிக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் புதன்கிழமையன்று, பகல் வாக்கில் அந்தந்த வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ள உதவும் விவிபேட் எந்திரத்தில், கட்சி சின்னம் மாறி வந்தால் உடனடியாக அங்குள்ள வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். எந்திரத்தில் கோளாறு இருப்பது உறுதியானால் அந்த எந்திரம் உடனடியாக மாற்றியமைக்கப்படும். ஆனால், இதுகுறித்து பொய்யான தகவல் அளிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் எவ்வித அசெளகரியங்களும் இன்றி எளிதாக வந்து வாக்களிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆண், பெண் என 2 வரிசைகளில் நின்று வாக்காளர்கள் வாக்களிக்கலாம். முதியோர், கர்ப்பிணி பெண்களுக்கு வாக்களிக்க முன்னுரிமை வழங்கப்படும். 2 பெண்கள் வாக்களித்த பின், ஒரு ஆண் வாக்களிக்கலாம். ஒரு மணி நேரத்திற்கு முன்பு வாக்களிக்க ஒத்திகை செய்யப்படும். தன்னுடைய வாக்கு எந்த வாக்குச்சாவடியில் உள்ளது என்பதை, வாக்காளர்கள், 1950 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். மேலும், தமிழகத்தில் இதுவரை ரூ135.41 கோடி பணம், 1022 கிலோ தங்கம், 645 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சத்யபிரதா சாஹூ தகவல் தெரிவித்துள்ளார்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED சேந்தமங்கலத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் மறியல்