×

தேனி இரட்டைக்கொலை வழக்கில் திவாகரனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

தேனி: தேனி அருகே சுருளி மலையில் நடந்த இரட்டைக்கொலை வழக்கில் திவாகரின் தூக்குத்தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் 22-ம் தேதி தூக்குத்தண்டனை நிறைவேற்றபடவிருந்த நிலையில் தண்டனையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரட்டைக்கொலை சம்பவம்:

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் எழில் முதல்வன், அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரும் காதலித்து வந்தனர். இவர்கள் கடந்த 2011-ம் ஆண்டு சின்னமனூர் சுருளி அருவிக்கு மேல் கைலாசநாதர் குகை கோவிலுக்கு செல்லும் வனப்பகுதியில் தனிமையில் இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்த கட்டவெள்ளை என்ற திவாகர், காதல் ஜோடியிடம் அரிவாளை காட்டி மிரட்டி, நகை மற்றும் பணத்தை தரும்படி கேட்டுள்ளார். ஆனால் எழில்முதல்வன் கொடுக்க மறுத்து, திவாகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த திவாகர், தான் வைத்திருந்த அரிவாளால் எழில்முதல்வனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார். இந்த சம்பவத்தை பார்த்து கதறிய மாணவி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அவரையும் திவாகர் துரத்திச்சென்று கால், கைகளை வெட்டினார். ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவியை பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளார். இருவரின் உடலும் அழுகியநிலையில் 5 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டன.

கொலையாளி திவாகருக்கு தூக்கு தண்டனை:

தமிழகத்தையே உலுக்கிய இரட்டைக்கொலை சம்பவம் முதலில் எந்தவித தடயமும் கிடைக்காததால் மூடப்பட இருந்தது. அதன் பின்னர், சி.பி.சி.ஐ.டி-க்கு விசாரணை மாற்றப்பட்டபோது, அவர்கள் இச்சம்பவம் தொடர்பாக திவாகர் என்பவரை கைது செய்தனர். பின்னர் திவாகரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் தம் குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த இரட்டைக்கொலை வழக்கை தேனி மாவட்ட முதன்மை கோர்ட் விசாரித்து வந்தது. கடந்த 8 வருடங்களாக நடைபெற்று வந்த வழக்கில் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் திவாகரை குற்றவாளி என அறிவித்ததோடு, 7வருட கடுங்காவல் தண்டனையும் ஓர் ஆயுள் தண்டனை மற்றும் தூக்குத் தண்டனையும் விதித்து உத்தரவிட்டிருந்தது.

தூக்குத்தண்டையை உறுதி செய்தது ஐகோர்ட் கிளை:

மேலும் இந்த தீர்ப்பை உறுதி செய்யக்கோரி, தேனி மாவட்ட முதன்மை கோர்ட்டு சார்பில் மதுரை ஐகோர்ட்டுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்த பரிந்துரை மனுவை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, பி.புகழேந்தி ஆகியோர் விசாரித்து வந்தனர். அப்போது, அந்த வழக்கின் தீர்ப்பை கடந்த மார்ச் 14ம் தேதி நீதிபதிகள் பிறப்பித்தனர். அதில், ‘இந்த வழக்கில் குற்றவாளியான திவாகருக்கு தேனி மாவட்ட முதன்மை கோர்ட் தூக்கு தண்டனை விதித்து சரியான தீர்ப்பை பிறப்பித்துள்ளது. இந்த வழக்கை பொருத்தமட்டில், இத்தகைய கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிக்கு கருணை காட்ட முடியாது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை நாங்களும் உறுதி செய்கிறோம்‘ என தீர்ப்பில் கூறியுள்ளனர்.

தண்டையை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்:

உயர்நீதிமன்ற மதுரை கிளை உறுதி செய்த தீர்ப்பை எதிரித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, திவாகரனுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் திவாகரின் மேல்முறையீட்டு மனு மீது தொடர்ந்து விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Supreme Court ,Divakaran ,Theni , Theni, dual slogan, hanging sentence, cancellation, Supreme Court
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...