×

தேர்தல் முடிவதற்குள் இன்னும் எத்தனை பொய்யோ... தாமரையை வறுத்தெடுக்கும் பிஜேடி கட்சிக்காரர்கள்

புவனேஸ்வர்: ‘‘தேசபக்தி, பசு பாதுகாப்பு, விமானப்படை தாக்குதல், சவுக்கிதார்... என்று எக்கச்சக்க தற்காப்பு சாதனங்களோடு இந்தத் தேர்தலை எதிர் கொள்கிறது தாமரை கட்சி. முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்திருக்கும் நிலையில், அடுத்தடுத்த கட்டங்களை சமாளிக்க அவர்கள் கையில் எடுத்திருக்கும் புது ஆயுதம் என்ன தெரியுமா...?’’ - ஒடிசா பக்கமாகப் போனால், ஆளை நிறுத்தி, இப்படி கேள்வி எழுப்பி, கிடுக்கிப்பிடி போடுகிறார்கள் அம்மாநிலத்தை ஆளும் பிஜேடி கட்சிக்காரர்கள்.

ஒடிசாவில் இம்முறை மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடக்கிறது. நான்கு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில், முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 11ம் தேதி நடந்து முடிந்திருக்கிறது. வாக்குப்பதிவு முடிந்த சில நாட்களில், புதிய அணுகுண்டு வீசியிருக்கிறார்கள் அம்மாநில பாஜ கட்சியினர். கஞ்சம் மாவட்டம், சிகிதி சட்டப்பேரவை தொகுதியில் பாஜ கட்சி வேட்பாளராக போட்டியிடும் மனோரஞ்சன் சமந்த்ரே, தேர்தல் முடிந்த கையோடு, அவசர பிரஸ்மீட் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார்.
 
கட்சித் தொண்டர்கள் புடைசூழ நிருபர்களை சந்தித்த சமந்த்ரே, ‘‘பிஜேடி கட்சிக்காரர்கள், எங்கள் தொண்டர்களை குறிவைத்து தாக்குகிறார்கள். முதற்கட்ட தேர்தலில் எங்கள் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தவர்களை கணக்கெடுத்து, அவர்களை ஊரைவிட்டே விரட்டும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். கோவிந்த்பூர் கிராமத்தில் எங்கள் ஆதரவாளர்களை குடியிருக்க விடாமல் பிஜேடி கட்சியினர் அட்டகாசம் செய்கின்றனர். அத்தியாவசியப் பொருட்கள் கூட வாங்க விடுவதில்லை. எங்களுக்கு ஓட்டுப் போடும் மக்களுக்கு இதன் மூலம் மறைமுக மிரட்டலை பிஜேடி கட்சிக்காரர்கள் விடுகிறார்கள்...’’ என்று பரபரப்பு புகார் கூறினார்.

தனது புகாருக்கு ஆதாரமாக, ஒரு சில வீடியோக்களையும் போட்டுக் காட்டினார். அந்த வீடியோவில் எளிய தோற்றம் கொண்ட சில கிராமத்து மக்கள் தோன்றி, ‘‘எங்களை ரேஷன் வாங்க விடாமல் தடுக்கிறார்கள். ஊர் அபராதம் விதிக்கிறார்கள். பாஜ.வை ஆதரித்ததால் எங்களால் நிம்மதியாக வாழ முடியவில்லை...’’ என்று கூறி மூக்கைச் சிந்தினார்கள். ஆனால், தாமரையின் இந்தப் புகாரை பிஜேடி காரர்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறார்கள். ‘‘இது அவர்களது புது டெக்னிக். தாமரை பொய் சொல்லியே தீரும். தேர்தல் முடிவதற்குள் இன்னும் எத்தனை பொய்கள் வரப்போகிறதோ, தெரியவில்லை...’’ என்கிறார்கள். மக்கள் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்...?!

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : parties ,BJD , Election, how many, lying, lotus, roasting, bjd
× RELATED மெஞ்ஞானபுரம் அருகே சொத்து தகராறு மோதலில் இருவர் படுகாயம்