×

எப்போதும் மக்களுடன் இருப்பவர்கள் திமுகவினர்தான் மோடி ஆட்சி வீழ்ந்தால் எடப்பாடி ஆட்சியும் வீழ்ந்து விடும்: தயாநிதி மாறனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

சென்னை: எப்போதும் மக்களுடன் இருப்பவர்கள் திமுகவினர்தான் என்றும், மோடியின் ஆட்சி வீழ்ந்தால் எடப்பாடி ஆட்சியும் வீழ்ந்து விடும் என்றும் மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து பேசும்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை ஆதரித்து திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட ஐஸ்அவுஸ் சந்திப்பு, ஆயிரம் விளக்கு புஷ்பா நகர், அண்ணாநகர் புல்லாரெட்டி அவென்யூ, அயனாவரம், கே.எச்.ரோடு நூர் ஓட்டல், நியூ ஆவடி சாலை, ஐ.சி.எப். சிக்னல், கே.எச்.ரோடு, ஓட்டேரி பாலம், பிரிக்ளின் சாலை, வெங்கடம்மாள் சமாதி சாலை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, ரெட்டேரி நெடுஞ்சாலை,  சைடாம்ஸ் ரோடு, அல்லிக்குளம் சாலை, ஈவெரா பெரியார் நெடுஞ்சாலை, ஈவ்னிங் பஜார் சாலை, என்.எஸ்.சி.போஸ் ரோடு, தங்கசாலை தெரு-மகாசக்தி ஓட்டல் அருகில், தங்கசாலை மணிக்கூண்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.

திருவல்லிக்கேணி ஐஸ்அவுஸ் பகுதியில் திரண்டிருந்த பெருந்திரள் மக்கள் கூட்டத்தின் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தேர்தலுக்காக மட்டும் வந்து போகிறவர்கள் நாங்கள் அல்ல. எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும் எப்படிப்பட்ட நிலையிலும் உங்களோடு இருக்க கூடியவர்கள் நாங்கள். அந்த உரிமையோடு உணர்வோடு உங்கள் இடத்தில் ஓட்டு கேட்க வந்திருக்கிறோம். நீங்களும் நிச்சயமாக உதயசூரியனுக்கு தான் ஒட்டு போட போறீங்க. மத்தியில் நடைபெறக்கூடிய ஆட்சி ஒரு மதவெறி பிடித்த ஆட்சி. சர்வாதிகார ஆட்சி. இந்த ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும். நீங்கள் எல்லாம் வருகிற 18ம் தேதி ஓட்டு போட்டு தயாநிதி மாறனை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுகின்ற நிலையிலே உறுதியாக, நிச்சயமாக,  தமிழ்நாட்டில் மோடிக்கு எடுபிடியாக இருக்கக்கூடிய எடப்பாடி ஆட்சியும் தூக்கி எறியப்பட இருக்கிறது.

எடப்பாடி தலைமையிலான ஆட்சி  மைனாரிட்டி நிலையில்தான் உள்ளது. இந்த ஆட்சியை முட்டுக்கொடுத்து இதுவரைக்கும் யார் காப்பாற்றி கொண்டிருந்தார், பிரதமராக இருக்கக்கூடிய மோடி. மோடி அவுட் ஆனால், எடப்பாடியும் அவுட் ஆகிவிடுவார். வருகிற 18ம் தேதி 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும்  நடக்கிறது.  அதற்கு பிறகு அடுத்த மாதம் 19ம் தேதி 4 தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. 18 பிளஸ் 4 என்று 22 தொகுதிகளில் தேர்தல் நடக்க போகிறது. எப்படியும் புதுவையும் சேர்த்து நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 நாம்தான் வெற்றி பெற போகிறோம். அதில் எந்த மாற்றமும் கிடையாது.

ஏற்கனவே திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டணியாக நமது எம்எல்ஏக்கள் எண்ணிக்கை என்னன்னு கேட்டீர்கள் என்றால், 97. 97 உடன் இந்த 22ஐ கூட்டி பார்த்தால் 119. தமிழ்நாட்டில் உள்ள ஆட்சிக்கு எவ்வளவு எம்எல்ஏக்கள் வேண்டுமென்றால்,  தமிழகத்தில் 234  எம்எல்ஏக்கள் இடங்கள் உள்ளன. அதில் பாதி 117. 117 பிளஸ் 1 வந்தாலே ஆட்சிதான். ஆக 119 வந்து விடுகிறோம். அப்போது யார் ஆட்சி. ஏற்கனவே ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தூக்கு கயிற்றில் தொங்கிக்கொண்டிருக்கிறது அந்த ரிசல்ட். மோடிதான் காப்பாற்றி வைத்திருக்கிறார். ஜட்ஜ்மென்ட் வராமல் உள்ளது. மோடி போய் விட்டார் என்றால் அந்த தீர்ப்பும் வந்து விடும். அதுவும் ஒரு 11.  அங்க அதிமுகவில் 11 மைனஸ் ஆகி விடுகிறது. இதை எல்லாம் ஒட்டு மொத்தமாக நீங்கள் கூட்டி பார்த்தீர்கள் என்றால்,  மோடி ஆட்சி மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள எடப்பாடி ஆட்சியும் ஒழியும்,. ஒழிகிற நாள் வந்திருச்சு. அதுதான் வருகிற 18ம் தேதி.

திருவல்லிக்கேணி, சேப்பாக்கம்,  ஆயிரம் விளக்கு, அண்ணாநகர்,  துறைமுகம், எழும்பூர், வில்லிவாக்கம் என 6 இடங்களையும் பிடித்த மத்திய சென்னை தொகுதி இது. திமுகவுக்கு மத்திய சென்னை மிகப்பெரிய கோட்டையாக விளங்கிக் கொண்டிருக்கிறது. நான் இதே சென்னை மாநகரத்துல ஒரு முறை அல்ல 2 முறை உங்களின் அன்போடு, ஆதரவோடு மேயராக இருந்தவன் தான். மேயராக இருந்த போது என்னென்ன பணிகளை எல்லாம் செய்தோம் என்று உங்களுக்கு தெரியும். மாநகராட்சியை சீர்படுத்தினோம். மாநகராட்சி பள்ளி கட்டிடத்தை ஒழுங்குப்படுத்தினோம். மாநகராட்சி பள்ளியின் கல்வியின் தரத்தை உயர்த்தினோம். ஒரு காலத்தில் ஒரு பையன் கெட்டு போகனும் என்றால் காப்பரேஷன் ஸ்கூலில் சேருங்கள் என்று கேவலமாக பேசும் காலம் இருந்தது. அந்த நிலைமையை நான் மேயராக இருந்த போது மாற்றி,  மாநகராட்சி பள்ளியின் தரத்தை தனியார் பள்ளிக்கூடத்தின் தரத்துக்கு நிகராக  கொண்டு வந்து ஒரு மிகப்பெரிய சாதனையை செய்தோம்.

மாநகராட்சியின் மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள், சமூக நலக்கூடங்கள், விளையாட்டு திடல்கள், பூங்காக்கள், கம்ப்யூட்டர் வசதிகள் இப்படி மாநகராட்சி பள்ளிக்காக பல பணிகளை செய்தோம். எல்லாத்துக்கும் முத்தாய்ப்பாய், சென்னை நகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க  10 மேம்பாலங்களை கட்டிய ஸ்டாலின் தான்  உங்கள் மத்தியில் வந்திருக்கிறேன். சும்மா வந்து உங்களிடம் ஓட்டு கேட்க வரவில்லை. பல சாதனைகளை செய்து இருக்கோம். வேட்பாளராக இருக்கக்கூடிய தயாநிதிமாறன்  2 முறை எம்பியாக, 2 முறை அமைச்சராக இருந்த போது அவர் செய்த சாதனைகளை மிகச்சுருக்கமாக சொன்னேன். அவருக்காக ஒட்டு கேட்க வந்துள்ள நான் நான் மேயராக இருந்த போது என்ன பணிகளை செய்த பணிகளை தலைப்பு செய்தியாக சொல்லியிருக்கேன்.

இந்தியாவில் மும்பை, டெல்லி, கொல்கத்தா,  சென்னை என 4 மாநகராட்சி தான் உள்ளது. இவை தான் பெரிய மாநகராட்சிகள். எந்த மாநகராட்சியும் பாலங்கள் கட்டிய வரலாறு கிடையாது. முதல் முதலாக 1996ம் ஆண்டு நான் இந்த சென்னை மாநகராட்சியின் மேயராக பொறுப்பேற்ற பிறகு,  கலைஞர் முதலமைச்சராக இருந்த காரணத்தினாலே,  அவரின் துணையோடு, திமுகவின் ஒத்துழைப்போடு,  முதன் முறையாக பாலம் கட்டியது சென்னை மாநகராட்சி தான்.  நான் மேயராக இருந்த போது தான். சென்னையில்  10 இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டது. 10 மேம்பாலம் கட்டுவதற்கு முன்னர் அண்ணா மேம்பாலம் கலைஞர் முதல்வராக இருந்த போது 1971ல் கட்டியது.

அதன் பிறகு யாரும் மேம்பாலங்கள் கட்டவில்லை.  அதன் பிறகு நான் மேயராக வந்த போது திமுக ஆட்சி துணையோடு, திமுக மாநகராட்சி கைவசம் வந்த போது  அந்த பணிகளை நாம் செய்து முடித்தோம். எத்தனையோ திட்டங்களையும், சாதனைகளையும்  திமுக ஆட்சி பொறுப்பில் இருந்த போது தான் செய்யப்பட்டது. கலைஞர் ஆட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. அதே போன்று தற்போது திமுக தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கான சிறப்பு திட்டங்களை வாக்குறுதியாக அளித்துள்ளோம். பெண்களின் மனதை அறிந்து கேபிள் டிவி கட்டணத்தை குறைக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல சாதனைகள் செய்த உரிமையோடு நாங்கள் உங்களிடம் ஓட்டு கேட்டு வந்துள்ளோம். கலைஞர் 5 முறை முதல்வராக இருந்தார். அவர் ஏழை எளிய மக்களுக்கு உதவிக் கரமாக இருந்தார். ஆனால் இப்போதுள்ள எடப்பாடி யாருக்கும் உதவாக்கரையாக இருக்கிறார். அம்மையார் ஜெயலலிதா  உடல் நலிவுற்று அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். அவர் இறப்பில் மர்மம் இருக்கிறது. இதை நான் சொல்லவில்லை. இதை முதன்முதலில் சொன்னது யார் என்றால் ஓபிஎஸ்தான். அவர் பதவியை திடீர் என்று பிடுங்கியதால் தான். சொத்து குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் தண்டனை விதித்து தீர்ப்பு வந்தது. 48 மணி நேரத்தில் பெங்களுர் சிறையில் ஆஜராக வேண்டும் என்றும் உ்த்தரவிட்டது. அப்போது அந்த அம்மா காலடியில் ஒரு புழுபோல ஏதோ ஊர்ந்து வந்தது. அது எடப்பாடி. நான் அவரை மண்புழு என்றேன்.

ஆமாம் நான் விவசாயிக்கு உதவுபவன் என்று எடப்பாடி கூறினார். அவர் யார் காலில் விழுந்தார். சசிகலாவின் காலில் விழுந்தார். நான் இல்லாததை சொல்லவில்லை. அவர் காலில் விழுந்ததை வீடியோவில் வந்ததைத்தான் கூறினேன். அதனால் எடப்பாடிக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது. அப்போது ஓபிஎஸ் கோபித்துக் கொண்டு ஆத்திரத்துடன் ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து 40 நிமிடம் தியானம் செய்தார். அப்புறம் ஆவியுடன் பேசினார். அ்ம்மாவிடம் பேசினேன் என்றார். அம்மா சாவு மர்மமான சாவு என்று தெரிவித்ததாக கூறினார். அதனால் பெயருக்காக ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் கமிட்டி போட்டனர்.

அது நாடகம். ஓபிஎஸ்சை சமாதானம் செய்தனர். பிரதமர் மோடியை வைத்து ஓபிஎஸ்சை சமாதானம் செய்தனர். ஜெயலலிதா இறப்பு தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி கமிட்டியில் இருந்து ஓபிஎஸ்சுக்கு 6 முறை சம்மன் வந்தது. ஆனால் ஓபிஎஸ் ஒருமுறை கூட போகவில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது. அதனால் அதிமுக தொண்டர்களுக்கு நான் சொல்வது  என்னவென்றால் முதல்வராக இருந்து மறைந்தவரின் சாவில் மர்மம் இருக்கிறது. அதை கண்டுபிடித்து காரணமாக இருந்தவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். நாம் ஆட்சிக்கு வந்து முதல் முறையாக செய்ய வேண்டிய வேலை இது.

அதேபோல கொடநாடு சம்பவம், பொள்ளாச்சி சம்பவம் ஆகியவற்றில் தொடர்புடைய வர்களுக்கும் தண்டனை வாங்கிக் கொடுப்பதுதான் நமது வேலை. துணை சபாநாயகர், அவரது மகன்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கை விட்டேன். அவர்களை காப்பாற்றும் வகையில் அதிகாரிகள் செயல்படுகின்றனர். ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலை குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். கலைஞருக்கு 6 அடி நிலம் கொடுக்க  மறுத்த இந்த அயோக்கியர்களுக்கு தமிழகத்தில் இடம் கொடுக்கலாமா, கலைஞர் எத்தனை பேருக்கு உதவி செய்திருப்பார். எத்தனை பேருக்கு வீட்டுவசதி வாரியம் மற்றும் குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் கொடுத்திருக்கிறார்.

எத்தனை பேருக்கு நலத் திட்டங்கள் கொடுத்தவர். அவரின் கடைசி ஆசை அண்ணா உங்கள் இதயத்தை இரவலாக தாருங்கள் நான் வரும்போது அதை கொண்டு வந்து உங்கள் காலடியில் வைக்கிறேன் என்று தெரிவித்த அந்த ஆசையை நிறைவேற்ற, எடப்பாடியின் வீட்டுக்கு சென்று அடக்கம் செய்ய இடம் கேட்டேன். ஆனால் மறுத்தனர். அவருக்கு 6 அடி நிலம் கொடுக்க மறுத்தவர்களை வீட்டுக்கு அனுப்பும் உறுதியோடு வாக்களிக்க வேண்டும்.  கலைஞரின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் மீண்டும் தமிழகத்தில் திமுகவை மலரச் செய்ய பெரிய வெற்றி நாம் பெற வேண்டும்.  உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்க. தயாநிதி மாறனை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வையுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

கன்னியாகுமரி முதல்  காஷ்மீர் வரை ரூ. 1க்கு போனில் பேசும் வாய்ப்பை ஏற்படுத்தியவர் தயாநிதி மாறன்: மு.க.ஸ்டாலின் புகழாரம்

பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மத்திய சென்னை தொகுதியில் தம்பி தயாநிதி மாறன் நிற்கிறார்  என்றால் அவரை பற்றி உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அவர் 2 முறை இதே தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட 2 முறையும் மத்திய  அமைச்சராகவே இருந்திருக்கிறார். 2 முறை  எம்பியாக இருந்து, 2 முறை மத்திய அமைச்சராக இருந்து, பல பணிகளை குறிப்பாக  நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும், சென்னை  மாநகராட்சியின் வளர்ச்சிக்கும் பல பணிகளை செய்து முடித்தவர் இங்கே வேட்பாளராக நிற்க கூடிய  தம்பி தயாநிதி மாறன். நோக்கியா பார்க்கிறோம்.

இன்றைக்கு, அதேபோல சாம்சங், கம்ப்யூட்டர் நிறுவனங்கள், இதை எல்லாம் கொண்டு வந்து பல சாதனைகளை படைத்தவர். மத்திய அமைச்சராக இருந்தபோது டெலிபோன் கட்டணத்தை குறைத்து கொடுத்தவர் அவர்தான். கன்னியாகுமரி முதல்  காஷ்மீர் வரை ஒரு ரூபாயிலேயே போன் பேசும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தவர்  இங்கே நிற்கும் வேட்பாளர் தயாநிதி மாறன். குறைந்த கட்டணத்தில் இன்டர்நெட் சேவையை கொண்டு வந்தவர். தயாநிதி மாறன் நிற்கிறார் என்றால் இந்த தொகுதியில் நான் நிற்பது போன்று. ஏன் இந்த தொகுதியில் கலைஞரே நிற்கிறார் என்று கூட சொல்லலாம். அவரை நீங்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

சென்னை திமுகவுக்கு அன்னை:

புரசைவாக்கம் தானா தெருவில் வாக்குசேகரிக்க வந்தபோது தொண்டர்கள் கூட்டம் அப்பகுதியில் அலைமோதியதை பார்த்த மு.க.ஸ்டாலின், ‘பேசாமல் அப்படியே உங்களுடைய முகத்தை பார்த்துக்கொண்டே இருந்தால் போதும்’ என்று கூறியதும் தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து சென்னை திமுகவின் கோட்டை நிச்சயம் வெற்றி பெறுவோம். சென்னை திமுகவுக்கு அன்னை போல் என்று கூறியதும் தொண்டர்கள் உற்சாகமாக கோஷமிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,DMK ,MK Stalin ,Eddie , DMK, Modi's regime, Edapadi regime, fall, MK Stalin, talk
× RELATED சொல்லிட்டாங்க…