கோரிக்கைகளை நிறைவேற்றாததால் மணல் லாரி சங்கத்தினர் அதிமுக கூட்டணிக்கு எதிராக வாக்கு: யுவராஜ் பேட்டி

சென்னை: மத்திய, மாநில அரசுகள் கோரிக்கையை நிறைவேற்றாததால் மணல் லாரி சங்கத்தினர் அதிமுக கூட்டணிக்கு எதிராக வாக்கு அளிக்க முடிவு செய்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த 2014 பாஜ தேர்தல் அறிக்கையில், டீசல் விலையை ரூ.50க்குள் கொண்டு வருவோம். காலாவதியான டோல்கேட்டை மூடுவோம். இன்சூரன்சில் தனியார் நிறுவன தலையீட்டை களையெடுக்க நடவடிக்கை எடுப்போம் என்று கூறியிருந்தனர். இதை நம்பி இத்தொழிலை சேர்ந்த நாடு முழுவதும் 15 கோடி பேர், தமிழகத்தில் 5 கோடி பேர் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஆனால் இரண்டாண்டுகளாகியும் அவர்கள் எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களை பேச்சுவார்த்தைக்கு கூட அழைக்கவில்லை. மேலும், 147 காலாவதியான சுங்கச்சாவடிகளில் சுங்க வரிகட்டணம் ரத்து செய்யப்படவில்லை. நாள் ஒன்றுக்கு ரூ.60 லட்சம் என தலா ஒரு சுங்கச்சாவடி மூலம் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தினம் தினம் டீசல் விலை உயர்வு போன்ற காரணங்களால் எங்கள் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தமிழக அரசு மணல் விற்பனை செய்வதும் புதிய குவாரிகளை திறக்காததும் எங்கள் தொழிலை நசுக்கி உள்ளது.

மணலுக்கு மாற்றாக எம்சாண்டை அரசு அறிமுகப்படுத்தினாலும் ஆளுங்கட்சியினர்தான் தரமற்ற எம்சாண்டை பயன்படுத்தி விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாத மத்திய, மாநில அரசுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தேர்தலில் அவர்களுக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்துள்ளோம். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாத இந்த அரசுகளுக்கு ஒரு விரல் புரட்சி மூலம் பாடம் புகட்டுவோம். அடுத்து வரும் ஆட்சியாளர்களும் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அவர்களுக்கு இதே கதி தான். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>