×

பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அரசு ஒப்பந்ததாரர் பிஎஸ்கே நிறுவனத்திடம் இருந்து 112 கோடி சொத்து ஆவணங்கள், 14.18 கோடி பணம் பறிமுதல்

சென்னை: தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அரசு ஒப்பந்ததாரரான பிஎஸ்கே குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் கடந்த 3 நாட்களாக நடந்த அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.112 கோடி சொத்து ஆவணங்கள் மற்றும் ரூ. 14.18 கோடி ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அரசு ஒப்பந்ததாரரான பிஎஸ்கே குழுமத்திற்கு சொந்தமான பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் இருந்து தேர்தல் செலவுக்காக பல கோடி ரூபாய் பணம் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு கொடுக்கப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதற்கான ஆதாரங்களும் சிக்கியதாக கூறப்படுகிறது.

அதன்படி, பிஎஸ்ேக குழுமத்திற்கு சொந்தமான சென்னை எழும்பூர், அண்ணாநகர், சென்ட்ரல் பகுதியில் உள்ள அலுவலகங்கள், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள நடுகோம்பை பகுதியில் உள்ள பிஎஸ்கே குழுமத்தின் தலைவர் பெரியசாமி வீடு மற்றும் அவரது மகன்கள் அருண்குமார், அசோக்குமாரின் வீடு, அதேபோல், பைனான்சியர்களான ஆகாஷ் பாஸ்கர், சுஜாய் ரெட்டி ஆகியோர் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என சென்னையில் 10 இடங்களிலும், திருநெல்வேலி, விழுப்புரம் மற்றும் நாமக்கல் என மொத்தம் 11 இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் நேற்று முன்தினம் இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை முடிவடைந்தது.

இதில் ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு அதிகளவில் பணம் கொடுக்கப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. அதேநேரம் பிஎஸ்கே குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.14.18 கோடி ரொக்கப்பணம் மற்றும் வருமான வரித்துறையினரிடம் கணக்கு காட்டப்படாத ரூ.112 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ரகசிய டைரியும் சிக்கியுள்ளது. இதையடுத்து  வருமான வரித்துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர். அதைதொடர்ந்து பிஎஸ்கே குழுமத்தின் உரிமையாளர் பெரியசாமி அவரது மகன்கள் அருண்குமார், அசோக்குமார் ஆகியோருக்கு  வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : PSG , Public Works Department, Highways, Government Contractor, Asset Documents, Money
× RELATED சில்லிபாயின்ட்..