×

போலியாக நடிக்கிறார் எடப்பாடி: வீரபாண்டி எஸ்.கே.செல்வம் சேலம் நாடாளுமன்றத் தொகுதி அமமுக வேட்பாளர்

ரூ. 10 ஆயிரம் கோடியில் மத்திய அரசு கொண்டு வந்து, மாநில அரசு தமிழகத்தில் செயல்படுத்த முனைப்பு காட்டுவது தான், சேலம்-சென்னை 8வழி பசுமை விரைவுச்சாலை திட்டம். இந்த திட்டத்திற்கு பசுமை விரைவுச்சாலை என்று பெயர்வைத்துள்ளனர். ஆனால் இது முழுக்க, முழுக்க விளைநிலங்களை அழித்து விவசாயத்திற்கு உலை வைக்கும் அபாயகரமான திட்டம். விவசாயிகளின் கண்ணீருக்கு முடிவு கட்டும் வகையில், உயர் நீதிமன்றம், 8வழிச்சாலைக்காக தமிழக அரசு போட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

ஆனால் தற்போது தேர்தல் நேரம் என்பதால் 8வழிச்சாலை விவகாரத்தில் தமிழக அரசு மற்றும் அதிமுகவின் நிலைப்பாடு குறித்து எந்தவித அறிவிப்பையும் வெளியிடாமல் மவுனம் காத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.  இந்நிலையில் நேற்று முன்தினம், சேலத்தில் நடந்த கூட்டத்தில் கண்டிப்பாக 8வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று அறிவித்துள்ளார் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி. முதல்வர் இது குறித்து எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை. அதேபோல் 8வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து அடிக்கடி முதல்வர், தம்மிடம் பேசிவருவதாகவும் போட்டு உடைத்துள்ளார் மத்திய அமைச்சர்.

இதன்மூலம் 8வழிச்சாலை விவகாரத்தில் முதல்வர் நாடகமாடுவது அம்பலமாகியுள்ளது. இது தமிழக விவசாயிகளுக்கு, அவர் செய்யும் பெரும் துரோகமாகும்.  கண்டிப்பாக ஓட்டுப்பதிவு முடிந்த மறுநாளே 8வழிச்சாலை குறித்த அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என்பதை உறுதியாக கூறமுடியும். இதேபோல் தமிழக முதல்வரை மேடையில் வைத்துக் கொண்டே, 8வழிச்சாலை திட்டத்தை நாங்கள் நிறைவேற்றியே தீருவோம் என்று ஒரு மத்திய அமைச்சர், தைரியமாக சொல்வதும் வேறு எங்கும் நடக்காத காரியம். ஆக மொத்தத்தில் அதிமுக-பாஜ கூட்டணி வெற்றி பெற்றால் கண்டிப்பாக இந்த திட்டத்தை நிறைவேற்றி விடுவார்கள். எனவே தேர்தலை ஒரு வாய்ப்பாக விவசாயிகள், பயன்படுத்தி போலியாக நடித்து ஏமாற்றும் இந்த கூட்டணிக்கு மாற்றாக வாக்களித்து பாடம் புகட்ட வேண்டும்.

அதே போல் 8வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து வழக்கு போட்டு, அதை தடுத்து நிறுத்தியது தாங்கள் தான் என்று மார்தட்டுகிறது பாட்டாளி மக்கள் கட்சி. ஆனால் நிதின்கட்கரி, திட்டத்தை நிறைவேற்றிய தீருவோம் என்று கூறிய போது, பாமக நிறுவனர் ராமதாசும் மேடையில் உடனிருந்துள்ளார். அவரும் இது குறித்து எந்த மறுப்பும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்துள்ளார். இதனால் 8வழிச்சாலை விவகாரத்தில் அதிமுக மட்டுமல்ல, அதன் கூட்டணி கட்சிகள் அனைத்தும்  விவசாயிகளை ஏமாற்றி நாடகமாடி வருவது அம்பலமாகியுள்ளது. ஸ்டெர்லைட் திட்டத்திலும் அதிமுகவின் நிலைப்பாடு இது போலத்தான் இருக்கும். அமமுகவை பொறுத்தவரை தலைகீழாக நின்று கூட, போராடி இந்த திட்டத்தை நிறைவேற்றாமல்  இருப்பதற்கு தொடர்ந்து குரல்கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Veerapandi SK Chelavam Salem ,candidate ,Ammukh ,constituency , Pseudo, Edattadi, Veerapandi SK Chelavam, Volume Ammukh, Candidate
× RELATED அமமுகவிற்கு வாக்களித்த வாக்காளர்கள்...