உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டதையடுத்து யோகி, மாயாவதி பிரசாரத்துக்கு தடை: தேர்தல் ஆணையம் அதிரடி

புதுடெல்லி: தேர்தல் பிரசாரத்தில் மத ரீதியிலான கருத்தை தெரிவித்த உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் 3 நாள் பிரசாரம் செய்யக் கூடாது எனவும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி 2 நாட்கள் பிரசாரம் செய்யக் கூடாது எனவும் தேர்தல் ஆணையம் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது.  உத்தரப் பிரதேசத்தின் மீரட் பகுதியில் சமீபத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், மக்களவை தேர்தலை முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த அலிக்கும், இந்து கடவுள் பஜ்ரங் பாலி (அனுமன்) இடையே நடக்கும் போட்டி என பேசினார். இதற்காக அவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதேபோல் தியோபந்த பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, ‘‘முஸ்லிம்கள் தங்கள் ஓட்டை காங்கிரஸ் கட்சிக்கு அளித்து வீணாக்கக் கூடாது, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கூட்டணிக்கு போட வேண்டும்’’ என பேசினார். தேர்தல் பிரசாரத்தில் ஜாதி மற்றும் மதரீதியாக பேசி ஓட்டுக் கேட்பது தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்.

இதனால் இருவருக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டது.  இந்நிலையில் சார்ஜாவில் உள்ள இந்திய யோகா டீச்சர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், ‘‘மதம், இனம், ஜாதி அடிப்படையில் மக்களிடம் அரசியல்வாதிகள் விடுக்கும் வேண்டுகோள்கள், அடிப்படை உரிமைக்கு எதிரானது. இது பொது நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தேர்தல் நடைமுறை முழுவதையும் கண்காணிக்க உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும். ஜாதி, மத அடிப்படையில் விவாதங்கள் நடத்தும் ஊடகங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதரீதியாக வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் பேசுபவர்களுக்குத்தான் தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படுகிறது. ஜாதி மற்றும் மதரீதியிலான அரசியல் ஊடகம் மற்றும் சமூக ஊடகங்களில் வேகமாக வளர்கிறது.

இது போன்ற நபர்கள் மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்படும் சூழல் அபாயகரமானது. ஜாதி மற்றும் மத ரீதியாக பேசும் அரசியல் தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவாதி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என விளக்கம் கேட்டது. இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம், ‘‘தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்களுக்கு முதலில் நோட்டீஸ் வழங்குவோம், பிறகு ஆலோசனை வழங்குவோம், அதன்பின் புகார் அளிப்போம். அதற்கு மேல் நடவடிக்கை எடுக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை’’ என கூறியது.  தேர்தல் ஆணையத்தின் சட்டஅதிகாரம் குறித்து இன்று ஆய்வு செய்வதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதற்காக தேர்தல் ஆணையத்தின் பிரதிநிதி இன்று ஆஜராக உச்ச நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

இந்நிலையில் திடீர் திருப்பமாக யோகி ஆதித்யநாத் 3 நாள், மாயாவதி 2 நாள் தேர்தல் பிரசாரம் செய்யக் கூடாது என தேர்தல் ஆணையம் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இருவருக்கும் தேர்தல் ஆணையம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.அசம்கான், மேனகாவும் தடை: இதேபோல், உ.பி.யின் ராம்பூர் தொகுதியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் நடிகை ஜெயப்பிரதாவை அநாகரீகமாக விமர்ச்சித்ததற்காக, அவரை எதிர்த்து போட்டியிடும் சமாஜ்வாடி வேட்பாளர் அசம் கான் 3 நாட்கள் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இதேபோல், ‘‘எனக்கு ஓட்டு போடாவிட்டால், உங்களுக்கு உதவ மாட்டேன்’’ என்று சிறுபான்மையினருக்கு மிரட்டல் விடுத்த சுல்தான்பூர் பாஜ வேட்பாளரும், மத்திய அமைச்சருமான மேனகா காந்திக்கு 2 நாள் பிரசாரம் செய்யவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.ராகுலிடம் விளக்கம் ேகட்பு: இதற்கிடையே, ரபேல் விவகாரத்தில், பாதுகாப்பு துறையில் இருந்து கசிந்த ஆவணங்களின் அடிப்படையில், தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ராகுல், ‘‘ரபேல் விவகாரத்தில் நாட்டின் காவலாளி திருடன்’’ என உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது என பேட்டியளித்தார். அதனால் அவர் மீது பா.ஜ எம்.பி. மீனாட்சி லெகி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘ரபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கூறியதாக, ராகுல் காந்தி தெரிவித் கருத்து தவறானது. அதுபோன்ற கருத்தை நீதிமன்றம் தெரிவிக்கவில்லை. அட்டர்னி ஜெனரல் எதிர்ப்பு தெரிவித்த ஆவணங்களை விசாரணை ஏற்றுக் கொள்ள நாங்கள் முடிவு செய்தோம். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் வரும் 22ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்’’ என தெரிவித்தனர்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED இனி அனைத்து தேர்தல்களிலும் பகுஜன்...