×

தமிழக லோக் ஆயுக்தா தலைவராக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.தேவதாஸ் பதவியேற்பு

சென்னை: தமிழ்நாடு லோக் ஆயுக்தா தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி பி.தேவதாஸ் இன்று பதவி ஏற்றார். முதல்வர், அமைச்சர்கள் உள்பட மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக் ஆயுக்தா  கொண்டுவரும் வகையில் லோக்பால் சட்டம் ஏற்கனவே மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது. இதைதொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனத்தை பெற்ற பிறகு, நாட்டில் 18வது மாநிலமாக தமிழக அரசும் லோக்  ஆயுக்தாவை தொடங்குவதாக அறிவித்தது. கடந்த ஜூலையில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை விவாதத்தின் போது, லோக் ஆயுக்தா குறித்த சட்ட மசோதா கொண்டுவரப்பட்டு  நிறைவேற்றப்பட்டது.

ஆனால், பலமுறை உச்சநீதிமன்றம் அவகாசம் கொடுத்தும் லோக் ஆயுக்தாவுக்கு உறுப்பினர்களை நியமிக்காமல் தமிழக அரசு இருந்து வந்தது. இந்நிலையில் இறுதியாக கடந்த பிப்ரவரி மாதம், 11ம் தேதி நடந்த விசாரணையில்,  16 வார காலத்திற்குள் லோக் ஆயுக்தா அமைப்பில் உறுப்பினர்களை நியமித்து, நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து லோக் ஆயுக்தா உறுப்பினர்களை நியமிக்க  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இந்த குழு கடந்த மார்ச் 13-ம் தேதி உறுப்பினர்களை தேர்வு செய்யும் பணியை முடித்தது.

தேர்தல் நடத்தை அமலில் இருப்பதால், அதற்கு தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற வேண்டியிருந்தது. இந்நிலையில், கடந்த 2-ம் தேதி தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் உறுப்பினர்களின் விவரங்கள்  வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக லோக் ஆயுக்தா தலைவராக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.தேவதாஸ் நியமனம் செய்யப்பட்டார். ஊழல் தடுப்பு அமைப்பான லோக் ஆயுக்தாவுக்கு 4 உறுப்பினர்களும்  நியமிக்கப்பட்டுள்ளனர். அதில், நீதித்துறை உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் கே.ஜெயபாலன், ஆர்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.ராஜாராம், மூத்தவழக்கறிஞர்  கே.ஆறுமுகம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைப்பின் முதல் நடுவராக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.தேவதாஸ் பதவி ஏற்றார். தமிழக ஆளுநர்  பன்வாரிலால் பதவி பிரமானம் செய்து வைத்தார். அவருடன் ஓய்வுபெற்ற நீதிபதிகள் கே.ஜெயபாலன், ஆர்.கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் நீதித்துறை சார்ந்த உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Supreme Court Judge ,P. Devdas ,Lokayukta Lokayukta , Tamil Nadu Lok Ayukta, Retired High Court Judge P. Devdas, sworn in
× RELATED திருப்பதி கோயிலில் மழை வேண்டி சிறப்பு...