×

பிரதமர் மோடி அனுதாபம் தேடும் நோக்கத்தில், தன்னை தேசத்துடன் சமப்படுத்தி பேசுகிறார்: மெகபூபா முப்தி ட்வீட்

காஷ்மீர்: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு முதற்கட்ட வாக்குப்பதிவு 20 மாநிலங்களில் நிறைவடைந்த நிலையில், பல்வேறு மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கதுவாவில் நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைக் கடந்த 3 தலைமுறைகளாக அப்துல்லா குடும்பத்தாரும், முப்தி குடும்பத்தாரும் ஆண்டு விட்டனர். மூன்று தலைமுறைகளாக மாநிலத்தைச் சுரண்டி விட்டார்கள். மாநிலத்தின் எதிர்காலம் கருதி, அவர்களை மக்கள் விரட்டியடிக்க வேண்டும். இவர்களைத் தோற்கடித்தால் தான், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பான எதிர்காலம் அமையும். ஒட்டுமொத்த குடும்பத்தாரையும் அரசியலுக்குள் கொண்டு வந்துவிட்டார்கள். அவர்களின் நோக்கம் நாட்டைத் துண்டாட வேண்டும் என்பதுதான். ஆனால், அதற்கு ஒருபோதும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம். மாநிலத்தில் நடந்த முதல்கட்ட வாக்குப்பதிவில் ஏராளமான வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளார்கள்.

இந்த அதிகமான வாக்குப்பதிவின்  மூலம் தீவிரவாதத் தலைவர்கள், சந்தர்ப்பவாதிகள், எதிர்க்கட்சிகள் அனைவரும் அச்சமடைந்திருக்கிறார்கள். முதல்கட்ட வாக்குப்பதிவில் மாநில மக்கள் ஜனநாயகத்தின் வலிமையை நிரூபித்துவிட்டார்கள் என பேசினார். மேலும், அவர்கள் ஒன்று திரண்டு, என்னை எவ்வளவு வேண்டுமானாலும் தூற்றலாம். ஆனால், அவர்களால் இந்த நாட்டை பிரிக்க முடியாது. அதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என்று பிரதமர் மோடி பேசினார். அவரது இந்த கருத்தை விமர்சித்து, மெகபூபா முப்தி தனது ட்விட்டர் பதிவில் மோடிக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில், சிறுபான்மையினரை நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்ற நச்சு கொள்கையை கடைப்பிடிப்பதன் மூலம் பாஜக தான் நாட்டை பிரிக்க விரும்புகிறது” என்று கூறியுள்ளார். மேலும் அவர் பதிவில், நான் அனுதாபம் தேடி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக, அரசியல் எதிரிகளை திட்டுவது இல்லை. ஆனால், பிரதமர் மோடியோ அனுதாபம் தேடும் நோக்கத்தில், தன்னை தேசத்துடன் சமப்படுத்தி பேசுகிறார். மோடி தான் இந்தியா அல்ல, இந்தியா தான் மோடியும் அல்ல. தேர்தலுக்கு முன்பு, குடும்பங்களை விமர்சிக்கும் மோடி, தேர்தலுக்கு பிறகு அதே கட்சிகளுடன் கூட்டணி ஆட்சி அமைக்க தூது விடுவது ஏன்? பாஜக தான் சிறுபான்மையினரை ஒதுக்கிவிட்டு, இந்தியாவை பிளவுபடுத்த விரும்புகிறது என மோடி கருத்திற்கு பதிலடி தந்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,nation ,Mehbooba Mufti , Prime Minister Modi,Sympathetic, megabuba, mupti tweeted
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...