அப்துல்லா, முப்தி மீது குற்றச்சாட்டு காஷ்மீரில் மோடி பிரசாரம்

கதுவா: பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங், காஷ்மீரின் உதம்பூர் மக்களவை தொகுதியில் பாஜ சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கதுவா பகுதியில் பிரதமர் மோடி நேற்று பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது: ஜம்மு காஷ்மீரில் 3 தலைமுறைகளை அப்துல்லா, முப்தி குடும்பங்கள் நாசமாக்கி விட்டன. ஜம்மு காஷ்மீருக்கு தனி பிரதமர் வேண்டும் என தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா கேட்கிறார். இவர்களை நாட்டை பிளவுபடுத்த அனுமதிக்க மாட்டேன். காஷ்மீரின் சிறந்த எதிர்காலத்துக்கு, அவர்கள் தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும். அவர்கள் வெளியேறிய பின்புதான். ஜம்மு காஷ்மீரின் சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும். அவர்கள் என்னை எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சிக்கட்டும். ஆனால், அவர்களால் நாட்டை பிளவுபடுத்த முடியாது.

முதல்கட்ட தேர்தலில் நாட்டின் ஜனநாயகத்தின் வலிமையை நீங்கள் நிருபித்துள்ளீர்கள். ஜம்மு மற்றும் பாரமுல்லா பகுதியில் மக்கள் அதிகளவில் வாக்களித்து, தீவிரவாத தலைவர்கள் மற்றும் சந்தர்ப்பவாதிகளுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளனர். நான் நாடு முழுவதும் பயணம் செய்து விட்டேன். கடந்த 2014ம் ஆண்டு தேர்தலைவிட இந்த முறை பாஜ.வுக்கு ஆதரவாக அலை வீசுகிறது. சமீபத்தில் வெளியான கருத்து கணிப்புகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். காங்கிரசுக்கு ஒரு சில சீட்டுகள் மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது எனவும், அதைவிட 3 மடங்கு அதிக இடங்கள் பாஜ.வுக்கு கிடைக்கும் என்றும் கருத்து கணிப்புகளை நடத்தியவர்கள் கூறியுள்ளனர். இது காங்கிரசுக்கு சிக்கலான நிலையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் நோய் கிருமிகளால் பாதிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் ராணுவத்தின் சிறப்பு அதிகார சட்டம் அகற்றப்படும் என அவர்கள் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளனர்.

அவர்கள் ஆட்சிக்கு வந்தால் பாதுகாப்பு படையினருக்கு பாதிப்பு ஏற்படும். நாட்டு பற்றுடைய ஒருவர் இவ்வாறு பேசலாமா? நமது பாதுகாப்பு படையினருக்கு பாதுகாப்பு வலை வேண்டாமா? ஜாலியன் வாலாபாக் நூற்றாண்டு நினைவு தினத்தைகூட காங்கிரஸ் அரசியலாக்குகிறது. அரசு சார்பில் அங்கு நடந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி கலந்து கொண்டார். அதில், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கலந்து கொள்ளவில்லை. நமது ராணுவத்தை நம்பாமல் சர்ஜிக்கல் ஸ்டிரைக், பாலகோட் தாக்குதல் பற்றி காங்கிரஸ் சந்தேகம் எழுப்புகிறது. காஷ்மீர் பண்டிட்கள் இங்கிருந்து வெளியேறியதற்கு காரணம் காங்கிரசின்  கொள்கைகள்தான். அவர்கள் இங்கு மீண்டும் குடியேறுவதில் பாஜ உறுதியுடன் உள்ளது. காங்கிரசுக்கு ஓட்டு வங்கிதான் முக்கியம். 1984ம் ஆண்டு சீக்கியர் மீதான வன்முறைக்கும் காங்கிரஸ்தான் காரணம். நியாய் திட்ட வாக்குறுதி அளித்து மக்களை காங்கிரஸ் ஏமாற்றுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Abdullah ,Mubhid ,Modi , Abdullah, Mufti, accusation, Modi, and campaign
× RELATED பரூக் அப்துல்லாவுக்கு மோடி பிறந்த நாள் வாழ்த்து