×

போபால், இந்தூர், விதிஷாவில் யார்? பாரதிய ஜனதா சஸ்பென்ஸ்

மத்திய பிரதேசம் வரும் 29ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை 4 கட்டங்களாக மக்களவைத் தேர்தலை சந்திக்கவிருக்கிறது. இதையடுத்து அங்குள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சிகள் அறிவித்து வருகின்றன. இந்தூர் தவிர மற்ற 28 தொகுதிக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்து விட்டது. கடந்த மார்ச் 23ம் தேதி 15, மார்ச் 29, ஏப்ரல் 6 தேதிகளில் தலா 3 என 21 வேட்பாளர்களின் பெயரை பாஜ ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில், கஜூராஹோ, தார், ரட்லம் மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளனர். இத்துடன் சேர்த்து மொத்தம் 24 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜ அறிவித்துள்ளது.

இந்த முறை கஜூராஹோ, தார் தொகுதிகளின் தற்போதைய எம்பி.க்கள் நரேந்திர சிங், சாவித்ரி தாகூருக்கு சீட் கொடுக்கப்படவில்லை. அவர்களுக்கு பதிலாக கஜூராஹோவில் பி.டி.சர்மா, தார் தொகுதியில் சட்டர் சிங், ரட்லம் தொகுதியில் தாமோர் ஆகியோர் பாஜ சார்பில் களமிறக்கப்பட்டுள்ளனர். போபால், இந்தூர், விதிஷா தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. போபாலில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் போட்டியிடுவதால் அவருக்கு போட்டியாக பாஜ ஆட்சியின் போது முதல்வராக இருந்த உமாபாரதியை களமிறக்க பாஜ ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தூர் தொகுதியை பொருத்தமட்டில், அங்கிருந்து கடந்த 8 முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களவை சபாநாயகராக பதவி வகித்த சுமித்ரா மகாஜனுக்கு இம்முறை வயதை காரணம் காட்டி கட்சித் தலைமை சீட் ஒதுக்கவில்லை. விதிஷா தொகுதி தற்போதைய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியாகும். கடந்த 2014ம் ஆண்டு பொதுத்தேர்தலில் மொத்தமுள்ள 29 தொகுதிகளில் பாஜ 27 தொகுதிகளை கைப்பற்றியது. சிந்த்வாரா, குணா தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bhopal ,Indore ,Vidisha , Bhopal, Indore, Vidisha, who? BJP, Suspense
× RELATED போபால் முதல் விசாகப்பட்டினம் வரை