‘டிரான்ஸ்பர் தொழிற்சாலை’காங்கிரஸ் மீது பா.ஜ கடும் தாக்கு

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 15 ஆண்டுகால பாஜ ஆட்சியை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. கடந்த டிசம்பர் மாதம் மாநில முதல்வராக காங்கிரஸ் மூத்ததலைவர் கமல்நாத் பொறுப்பேற்றார். சட்டப்பேரவை தேர்தலில் கோட்டை விட்டதைபோல மக்களவை தேர்தலிலும் நடந்துவிடக் கூடாது என கவனமாக காய்களை நகர்த்தி வருகிறது அம்மாநில பாஜ. சட்டப்பேரவை தேர்தல் வெற்றியால் கூடிவரும்  முதல்வர் கமல்நாத்தின் செல்வாக்கை எப்படியாவது சரித்து விட பகிரத பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது. மத்திய பாஜ அரசின் ஆசியுடன் கடந்த வாரம்  கம்ல்நாத்தின் நெருங்கிய வட்டாரங்களில் வருமான வரித்துறை சோதனை செய்தது. 52 இடங்களில் நடந்த சோதனையில் 281 கோடிக்கும் மேல் கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித் துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து கமல்நாத் பதவி விலக வேண்டும், மக்களவை தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என பாஜ தலைவர்கள் கூறிவந்தனர்.      

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் 100 நாள் ஆட்சியில் நடந்த ஊழல்களை கண்டித்து மாவட்ட வாரியாக போராட்டங்களை நடத்தியது. இதில் பங்கேற்று பேசிய முன்னாள் முதல்வர் சவுகான், கமல்நாத்தின் 100 நாள் ஆட்சியில் ஊழல் பெருக்கெடுத்து உள்ளது. காங்கிரஸ் அரசு ‘டிரான்ஸ்பர் தொழிற்சாலையை’ மட்டுமே சிறப்பாக நடத்தி வருகிறது. பணத்தை கொடுத்தால், காலை போபாலிலிருந்து சிஹோருக்கும், மதியம் சிஹோரிலிருந்து ஆஸ்தாவிற்கும், மாலை ஆஸ்தாவிலிருந்து தேவாஸிற்கும், இரவு தேவாஸிலிருந்து உஜ்ஜையினுக்கும் டிரான்ஸ்பர் வாங்கிக் கொள்ளலாம் என சாடினார். முதல்வர் கமல்நாத்தோ விமர்சனங்களை சட்டை செய்யாமல் முந்தைய பா.ஜ ஆட்சிகளில் நடந்த ஊழல்களை தோண்டித் துருவும் வேலையில் படுபிசியாக இருக்கிறார். தேர்தலுக்காக  இருதரப்பும் ஒருவரை ஒருவர் சாடுவதற்கு தினம் ஒரு பிரச்னை கையில் எடுத்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாஜகவில் இணைந்தார்