×

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் தலைப்பாகை தின கொண்டாட்டம்: அமெரிக்கர்களும் அணிந்து மகிழ்ந்தனர்

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில், அங்குள்ள சீக்கியர்கள் நேற்று தலைப்பாகை தினம் கொண்டாடினர். ஆயிரக்கணக்கான மக்களுக்கு வண்ண தலைப்பாகை அணிவித்து சீக்கியர்களின்  அடையாளம் பற்றி விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். அமெரிக்காவில் சீக்கியர்கள் பலர் பணியாற்றுகின்றனர். இவர்கள் தலைப்பாகையுடன் சென்றால், அவர்களை சிலர் வித்தியாசமாக பார்ப்பது வழக்கம். அமெரிக்காவில் நடந்த செப்டம்பர் 11 தீவிரவாத தாக்குதலுக்குப் பின்,  சீக்கியர்களை தவறான கண்ணோட்டத்துடன் சிலர் பார்க்கத் தொடங்கினர். சீக்கியர்கள் மீது இனவெறி தாக்குதல் சம்பவங்களும் பல நடந்தன. இதனால், சீக்கியர்களின் அடையாளம் பற்றி அமெரிக்கர்களுக்கு தெரியப்படுத்த தலைப்பாகை தினம் கொண்டாட அமெரிக்காவில் உள்ள சீக்கியர்கள் முடிவு செய்தனர். முதல் தலைப்பாகை தினம் (டர்பன் டே) கடந்த 2013ம் ஆண்டு  தொடங்கப்பட்டது. இந்நாளில் அமெரிக்காவில் உள்ள சீக்கியர்கள் ஒன்று கூடி, ஆயிரக்கணக்கான வண்ண தலைப்பாகைகளை அமெரிக்க மக்களுக்கும் அணிவித்து, சீக்கியர்களின் அடையாளம் குறித்து பிரசாரம் செய்தனர். நியூயார்க்  டைம்ஸ் சதுக்கத்தில், கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 7ம் தேதி நடந்த தலைப்பாகை தினத்தில், 8 மணி நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு தலைப்பாகை அணிவித்து கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.

இந்தாண்டு, பைசாகி தினம் என அழைக்கப்படும் தங்களின் புத்தாண்டு தினமான நேற்று தலைப்பாகை தினம் கொண்டாட சீக்கியர்கள் முடிவு செய்தனர். நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் தெருக்களில் சென்ற அமெரிக்கர்கள்,  வெளிநாட்டினர் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு ஆயிரக்கணக்கான வண்ண தலைப்பாகைகள் அணிவிக்கப்பட்டன. அவர்களும் மகிழ்ச்சியுடன் தலைப்பாகை அணிந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அர்ஜென்டினாவை சேர்ந்த கேப்ரிலா வினேட்டி மற்றும் அவரது தோழி எரி பன்ஜாகி ஆகியோர் இது குறித்து கூறுகையில், ‘‘இன்னொரு கலாச்சாரத்துக்கு மதிப்பழிக்கும் வகையில் நாங்கள் தலைப்பாகை அணிந்து நாங்கள்  ஒற்றுமையை வெளிப்படுத்தினோம்’’ என்றனர். சுமார் 5 மணி நேரம் நடந்த நிகழ்ச்சியில், சீக்கிய சிறுவர் சிறுமியர்கள் கலாச்சார நடன நிகழ்ச்சிகளும் நடத்தினர். இதனால் நியூயார்க் டைம்ஸ் சதுக்கம் நேற்று வண்ணமயமாக காட்சியளித்தது. இது குறித்து நியூயார்க் சீக்கியர்கள்  சங்கத்தின் துணை நிறுவனர் சன்ப்ரீத் சிங் கூறுகையில், ‘‘ஒருவருக்கு தலைப்பாகை அணிவித்தால், அது சமூக இணையதளம் மூலம் 200 பேருக்கு பரவுகிறது. இதன் மூலம் அவர்களும் விழிப்புணர்வு அடைகிறார்கள். கடந்த 7  ஆண்டுகளில் நாங்கள் 38 ஆயிரம் தலைப்பாகைகளை பிறருக்கு அணிவித்துள்ளோம்’’ என்றார்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Celebration ,Turban Day ,Americans ,New York Times Square , New York, Times, Square, Terrace, Day Celebration
× RELATED திருப்பதி, சித்தூர், ஸ்ரீகாளஹஸ்தியில் யுகாதி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்