×

நகரியில் மீண்டும் மலர காத்திருக்கும் ரோஜா

நடிகையாக மக்களுக்கு அறிமுகமாகி இன்று பரபரப்பான அரசியல்வாதியாக ஆந்திர அரசியலில் கலக்கி வருகிறார் ரோஜா.திருப்பதியில் பிறந்த ரோஜாவுக்கு இப்போது 46 வயதாகிறது. ஸ்ரீ லதா ரெட்டியை தமிழுக்கு அழைத்து வந்தவர் டைரக்டர் ஆர்.கே.செல்மணி. ரோஜா என்ற பெயரில் இவர் படங்களில் நடித்தார். 1991ல் தெலுங்கில் அறிமுகமானவர்,  அடுத்த வருடமே தமிழில் செம்பருத்தி படத்தின் மூலம் செல்வமணியால் அறிமுகம் செய்யப்பட்டார். அந்த படத்தின் படப்பிடிப்பிலேயே ரோஜாவுக்கும் செல்வமணிக்கும் காதல். இருவருமே அப்போது சினிமாவில் படுவேகமாக  முன்னேறி வந்ததால், தங்கள் காதலை ரகசியமாக வளர்த்து வந்தனர். காதல் கதை வெளியே தெரிய ஆரம்பித்ததும் எப்போது கல்யாணம்? என்ற கேள்வி இவர்களை துரத்த ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில், இருவரின் கரங்களை  கட்டி ‘சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்கப்பா’ என சினிமா மேடை ஒன்றில் பாரதிராஜாவே கூறும் அளவுக்கு 10 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். ஒருவழியாக 2002ல் இவர்களின் திருமணம் நடந்தது.

நக்மா, குஷ்பு, சவுந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், ரம்பா, மீனா என அப்போது தமிழ் சினிமாவில் கிளாமர் பிளஸ் நடிப்பில் இந்த நடிகைகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இந்த நடிகைகளுடன் போட்டி போட்டு, தனக்கான  இடத்தை தக்க வைத்தபடி இருந்தவர் ரோஜா. அது மட்டுமில்லை. பத்தே ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் 100 படங்களில் நடித்து சாதனை படைத்தவர். அவருக்கு பிறகு இந்த சாதனையை எந்த  நடிகையும் முறியடிக்க முடியவில்லை. இதுவரை 150க்கு அதிகமான படங்களில் இவர் நடித்துவிட்டார். 1999ல் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். மகளிர் அணி தலைவியாக வெற்றிகரமாக வலம் வந்தார். 2009 சட்டசபை தேர்தலில் சூறாவளி பிரசாரம் செய்தார். இவர் பிரசாரத்தில் ஈடுபட்டாலே மற்ற கட்சியினரை கடுமையாக  விமர்சிப்பார். போல்டான பேச்சுக்கு சொந்தக்காரர். இவரது பிரசாரத்தை கேட்டு அப்போது அரசியல் கட்சியினர் கதி கலங்கி போனதுண்டு. தெலுங்கு தேசத்தில் திடீரென தான் ஓரம்கட்டுப்படுவதை உணர்ந்தவர், அதற்கு எதிராக  போராடி பார்த்தார்.

 பிறகு 2009ல் அக்கட்சியிலிருந்து விலகி ஒய்எஸ்ஆர் காங்கிரசில் இணைந்தார். 2014 சட்டசபை தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். தேர்தல் பிரசாரத்தை போல, சட்டசபையிலும்  ஆளும்கட்சியை கேள்விகள் கேட்பதிலும் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதிலும் தடாலடியாக செயல்பட்டு ஒய்எஸ்ஆர் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரம் ஆனார். 18 டிசம்பர் 2015ல் இவரது காரசார பேச்சால் சட்டசபையில் பலத்த  எதிர்ப்பு கிளம்பியது. மெஜாரிட்டி எம்எல்ஏக்களின் ஒப்புதலோடு ஒரு வருடத்துக்கு இவரை சஸ்பெண்ட் செய்துவிட்டனர்.இந்நிலையில் கடந்த 11ம் தேதி நடந்து முடிந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் அதே நகரில் தொகுதியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சி சார்பில் கலி பானு பிரகாஷ் போட்டியிட்டார். ரோஜாவின் வெற்றி  நிச்சயம் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நம்புகிறது. அடுத்த மாதம் இதற்கான விடை கிடைத்துவிடும்.   



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rose ,city , Rebuild ,town, Blossoming roses
× RELATED பூங்காவில் பூத்தது ரோஜா பூக்கள்