×

சித்திரை மாத பிறப்பு கொண்டாட்டம்: குமரி கோயில்களில் பக்தர்கள் குவிந்தனர்.. கை நீட்டம் - காய்கறிகள் பிரசாதமாக வழங்கினர்

நாகர்கோவில்: சித்திரை மாத பிறப்பையொட்டி குமரி மாவட்ட கோயில்களில் இன்று அதிகாலையிலேயே பக்தர்கள் குவிந்தனர். கோயில்களில் விஷூ கணி தரிசன நிகழ்ச்சியும், கை நீட்டமும் வழங்கினர். சித்திரை மாத பிறப்பு தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. அதன்படி  இன்று (14ம்தேதி) குமரி மாவட்டத்திலும் சித்திரை மாத பிறப்பு உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. கோயில்கள் மற்றும் வீடுகளில் விஷூ கணி தரிசனம் மற்றும் கை நீட்டம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தன. வீடுகளில் பழ வகைகள், காய்கறிகள், கொன்றை பூக்கள் மற்றும் நகைகளை கண்ணாடி முன் படைத்து அவற்றை அதிகாலையில் எழுந்து வீடுகளில் உள்ள பெரியவர்கள், சிறியவர்கள் ஒன்று சேர்ந்து அவற்றை கண்ணாடியில் பார்த்து வணங்கினர். இவ்வாறு செய்வதன் மூலம் வாழ்வில் அனைத்து வித நன்மைகளும் நடைபெறும் என்பது நம்பிக்கை ஆகும். பின்னர் வீடுகளில்  பெரியவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்று, கைநீட்டம் பெற்றனர்.

இதே போல் குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்களிலும் கணி காணுதல், கை நீட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. குமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், நாகர்கோவில் நாகராஜா கோயில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில், நடுக்காட்டு இசக்கியம்மன் கோயில், முப்பந்தல் இசக்கியம்மன் கோயில், கிருஷ்ணன்கோவில் கிருஷ்ணசுவாமி கோயில், மண்டைக்காடு பகவதியம்மன்கோயில், குமாரகோவில் முருகன் கோயில், வெள்ளிமலை முருகன் கோயில் உள்பட மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற கோயில்களில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலையில் பக்தர்கள் பெருமளவில் கோயில்களில் குவிந்தனர். நீண்ட வரிசையில் நின்று அவர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு காய்கறிகள், பழங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன. சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலில் நாளை (15ம்தேதி) விஷூ கணி தரிசன நிகழ்ச்சி நடக்கிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chithirai Birth Celebration: Bhaktoras ,temples ,Kumari , Chithirai, Kumari temple, pilgrims gathered
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு