×

விவசாயம் செழிக்க வேண்டி வெற்றிலை பிரி திருவிழா: 60 கிராம மக்கள் பங்கேற்பு

மேலூர்:  சித்திரை திங்களை முன்னிட்டு மேலூர் அருகே மகாலட்சுமிக்கு உகந்ததான வெற்றிலையை 10 ஆயிரம் குடும்பங்களுக்கு கொடுத்து ‘வெற்றிலை பிரி திருவிழா’ மேலூர் அருகே கோலாகலமாக இன்று நடைபெற்றது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூர் கிராமத்தை தலைமையிடமாக கொண்டது வெள்ளலூர் நாடு. இதில் ஐந்து மாகாணங்கள் என வெள்ளலூர், அம்பலகாரன்பட்டி, உறங்கான்பட்டி, மலம்பட்டி மற்றும் குறிச்சிபட்டி குறிப்பிடப்படும். இவைகளில் உள்ள 60க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இணைந்து கொண்டாடிய வெற்றி திருவிழா வெள்ளலூர் மந்தையில் இன்று காலை நடைபெற்றது. வெள்ளலூர் மந்தை கருப்பண சாமி கோயிலில் 11 கரைகளை சேர்ந்த 22 அம்பலகாரர்கள், 22 இளங்கச்சிகள் தலைமையில் கிராம மக்கள் கூடினர். சுமார் 200 கிலோ வெற்றிலை கொண்டு வரப்பட்டது. இவை 11 கரை அம்பலகாரர்களுக்கு ஒரு பங்காகவும், இதர மக்களுக்கு ஒரு பங்காகவும் பிரிக்கப்பட்டது.

அவற்றை பெற்று கொண்ட அம்பலகாரர்கள் மேலும் கிலோ கணக்கில் வெற்றிலைகளை சேர்த்து, தங்கள் கிராமத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் பாக்குடன் வழங்கினர். இது 10 ஆயிரம் குடும்பங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது. அவற்றை பெற்று கொண்ட கிராம மக்கள், தங்கள் வீடுகளில் நாழியில் வைத்த புது நெல், கலப்பை மற்றும் மாடுகளை வைத்து சாமி கும்பிட்டனர். பின் சேர்த்து வைக்கப்பட்ட சாணி குப்பைகளுடன் தங்கள் வயலுக்கு சென்று, இந்த ஆண்டிற்கான விவசாய பணிகளை மேற்கொண்டனர். மரக்கன்று வழங்கிய இளைஞர்கள்: வருடா வருடம் வெயில் அதிகமாகிறது என்று கூறுவதை விட ஆளுக்கொரு மரம் வளர்ப்போம் என்ற எண்ணத்துடன் வெள்ளலூர் கிராம இளைஞர்கள், வெற்றிலை பிரி விழாவிற்கு வந்தவர்களுக்கு இலவச மரக்கன்றுகளை வழங்கினர். மா, பலா, நெல்லி, பாதாம், வேம்பு உட்பட 30 வகையான 700 மரக்கன்றுகளை வழங்கினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : farm ,Festival , Agriculture, Betel Festival
× RELATED தும்மனட்டி பண்ணையில் ஸ்ட்ராபெரி பழங்கள் சாகுபடி