×

திடீர் மாரடைப்பு ராமநாதபுரம் முன்னாள் எம்பி நடிகர் ஜே.கே.ரித்தீஷ் மரணம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், மணக்குடியை சேர்ந்தவர் ஜே.கே.ரித்தீஷ்(46). பொறியியல் பட்டதாரி. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர் பின்னர் நடிகர் ஆனார். அவரது முதல் படம் கானல் நீர். தொடர்ந்து நாயகன், பெண் சிங்கம் மற்றும் சமீபத்தில் வெளியான எல்கேஜி படத்திலும் நடித்துள்ளார். கடந்த 2009ல் திமுகவில் சேர்ந்து ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 2014ல் அதிமுகவில் சேர்ந்தார். ராமநாதபுரம் மக்களவை தொகுதி பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து நேற்று மணக்குடி பகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். பகலில் ராமநாதபுரம் ஆர்.ஆர்.சேதுபதி நகரில் உள்ள தனது வீட்டில் பகல் உணவு சாப்பிட்ட போது திடீரென நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார். உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. ரித்தீஷ் உயிரிழந்த தகவல் அறிந்த அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் அவரது வீட்டின் முன்பு கூடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆதரவாளர்களில் சிலர், ‘ரித்தீஷ் இறக்கவில்லை’ எனக் கூறி மீண்டும் ராமநாதபுரம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ரித்தீஷ் உடலை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்ததை உறுதிப்படுத்தினர். இதையடுத்து அவரது உடல அஞ்சலிக்காக ஆர்.ஆர்.சேதுபதி நகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள கண்டியில், 1973ல் ஜே.கே.ரித்தீஷ் பிறந்தார். அவரது இயற்பெயர் குமார். ரித்தீஷூக்கு ஜோதி என்ற மனைவி, 2 மகன்கள் மற்றும் 6 மாத பெண் குழந்தை உள்ளனர்.
ரித்தீஷ் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : death ,JK Ratheesh ,Ramanathapuram , Heart attack, former MP, actor, death
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே...