×

நாமக்கல் பிஎஸ்கே குழுமத்தின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை 2ம் நாளாக சோதனை: பல கோடி ரொக்கம், ஆவணங்கள் சிக்கியது

நாமக்கல்: நாமக்கல்லை சேர்ந்த பிஎஸ்கே குழும உரிமையாளர் பெரியசாமியின் வீடு, அலுவலகம்  மற்றும் உறவினர் வீடுகளில் 2ம் நாளாக சோதனை நடந்தது. நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தை அடுத்துள்ள நடுக்கோம்பையை சேர்ந்தவர் பெரியசாமி (70). இவர் பொதுப்பணித்துறையின் ஒப்பந்ததாராக உள்ளார். நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தின் சார்பில் மத்திய, மாநில அரசுகளிடம், கட்டுமான ஒப்பந்தம் மேற்கொண்டு தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் கட்டுமான பணிகளை செய்து வருகிறது. இந்நிறுவனத்திற்கு சொந்தமாக நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கல்வி நிறுவனங்கள், பெட்ரோல் பங்க், ஸ்பின்னிங் மில் மற்றும் பஸ் சர்வீஸ் ஆகிய தொழில்களும் நடந்து வருகிறது. தற்போது, தேர்தல் நேரம் என்பதால் அரசியல் கட்சியினருக்கு பணம் பட்டுவாடா செய்ய பெரியசாமியின் வீடு, அலுவலகம், உறவினர்கள் வீடுகளில், பணம் பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறைக்கு புகார் வந்தது.

புகாரின் அடிப்படையில், சேந்தமங்கலம் அடுத்த நடுக்கோம்பையில் உள்ள பெரியசாமி வீடு, அலுவலகம் மற்றும் நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள, அவரது உறவினர் செல்வக்குமார் வீடு உள்பட, பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். நேற்று முன்தினம், காலை சோதனை துவங்கியது. இதில், நாமக்கல், சேலம், கோவை, சென்னையை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். பெரியசாமியின் அலுவலகங்களில் நடந்த முதல் நாள் சோதனையில், கணக்கில் வராத, பல கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. 2ம் நாளாக நேற்றும் பெரியசாமியின் வீடு, அலுவலகம், உறவினர் செல்வகுமார் வீடு, நாமக்கல்-மோகனூர் சாலையில் உள்ள பெரியசாமியின் நெருங்கிய உறவினர் சண்முகம் வீடு, மற்றொரு உறவினர் வீடு என ஐந்து இடங்களில் சோதனை நடந்தது. இரவு வரை நீடித்த சோதனையில் கோடிக்கணக்கில் பணம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : income tax department ,offices ,house ,group , PSK Group, House, Office, Income Taxes, Trial
× RELATED நயினார் நாகேந்திரனுக்கு கொண்டு சென்ற...