×

ரோகித் - டி காக் விளாசல் வீண் பட்லர் அதிரடியில் ராயல்ஸ் வெற்றி

மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வாங்கடே மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீசியது. அந்த அணியில் ஸ்டோக்ஸ் (காயம்), ரியான் பராகுக்கு பதிலாக லிவிங்ஸ்டோன் (அறிமுகம்), கவுதம் இடம் பெற்றனர். மும்பை அணியில் கேப்டன் ரோகித் ஷர்மா களமிறங்கத் தயாரானதால், சித்தேஷ் லாட் நீக்கப்பட்டார். ரோகித், டி காக் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 10.4 ஓவரில் 96 ரன் சேர்த்தது. ரோகித் 47 ரன் (32 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆர்ச்சர் பந்துவீச்சில் பட்லர் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த சூரியகுமார் 16, போலார்டு 6 ரன்னில் பெவிலியன் திரும்பினர். பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்ட டி காக் 81 ரன் (52 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ஆர்ச்சர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

கடைசி கட்டத்தில் அதிரடியில் இறங்கிய ஹர்திக் பாண்டியா 3 இமாலய சிக்சர்களைத் தூக்கி அசத்தினார். இஷான் கிஷண் 5 ரன்னில் பெவிலியன் திரும்ப, மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன் குவித்தது. ஹர்திக் 28 ரன் (11 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்), குருணல் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராயல்ஸ் பந்துவீச்சில் ஆர்ச்சர் 3, குல்கர்னி, உனத்காட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 188 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கியது. கேப்டன் ரகானே - ஜோஸ் பட்லர் இணை முதல் விக்கெட்டுக்கு 6.1 ஓவரில் 60 ரன் சேர்த்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. அல்ஜாரி ஜோசப் வீசிய 5வது ஓவரில் ரகானே 17 ரன் விளாசினார். அவர் 37 ரன் எடுத்து (21 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விக்கெட்டை இழந்தார்.

அடுத்து வந்த சாம்சன் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, மிரட்டலாக விளையாடிய பட்லர் அரை சதம் அடித்தார். ஜோசப் வீசிய 13வது ஓவரை துவம்சம் செய்த பட்லர் 28 ரன் விளாசினார் (6, 4, 4, 4, 4, 6). பட்லர் - சாம்சன் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 87 ரன் சேர்த்தது. சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பட்லர் 89 ரன் (43 பந்து, 8 பவுண்டரி, 7 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார். சாம்சன் 31 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த திரிபாதி, லிவிங்ஸ்டன் தலா 1 ரன்னில் பெவிலியன் திரும்பினர். ஸ்மித் 12 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். கடைசி கட்டத்தில் ராயல்ஸ் 4 ரன்னுக்கு 4 விக்கெட் பறிகொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், ராஜஸ்தான் அணி 19.3 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 188 ரன் எடுத்து வென்றது. ஷ்ரேயாஸ் கோபால்13, கவுதம் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை பந்துவீச்சில் குருணல் 3, பூம்ரா 2, சாஹர் 1 விக்கெட் வீழ்த்தினர். பட்லர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Royals ,Roger-De Kock ,Vain Butler , Rohit - De Gogh, Vain, Butler, Action
× RELATED ரைடர்ஸ் Vs ராயல்ஸ்: ஈடன் கார்டனில் இன்று 1 மற்றும் 2 மோதல்