×

அரசியல் வானில் மின்னுமா மின் மினி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மக்களவை தேர்தலில் களமிறக்கி இருக்கும் இன்னும் ஒரு திரை நட்சத்திரம் தான் மிமி சக்ரவர்த்தி. இளம் நடிகைகள் நஸ்ரத், மிமி இருவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டது சமூக  வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும், திரிணாமுல் கட்சியினர் வெற்றி நமக்கே என உற்சாகம் அடைந்துள்ளனர். மேற்கு வங்கம், ஜல்பைகுரியில் 1989ல் பிறந்த மிமி, குழந்தை பருவத்தை அருணாச்சல பிரதேசத்தின் தியோமாலி கிராமத்தில் தான் கழித்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு அவரது குடும்பம் மீண்டும் ஜல்பைகுரிக்கே இடம்  பெயர்ந்தது. ஹோலி சைல்டு, செயின்ட் ஜேம்ஸ் பள்ளிகளில் படிப்பை முடித்தவர், கொல்கத்தா அசுதோஷ் கல்லூரியில் பட்டம் பெற்றார். தொடக்கத்தில் விளம்பர மாடலாக ஜொலித்தவர், ‘கானர் ஓபரே’ என்ற டிவி சீரியல் மூலமாக பெங்கால் மக்களின் உள்ளங்களைக் கொள்ளையடித்தார். அடுத்த ஆண்டே திரைப்பட வாய்ப்பு தேடி வந்தது. இதுவரை 22  திரைப்படங்களில் நடித்துள்ள மிமி, ஸ்டார் ஜல்ஷா பரிவார் உட்பட சில விருதுகளையும் பெற்றுள்ளார். அரசியலில் அடி வைத்து அரிச்சுவடி படிப்பதற்குள்ளாகவே எம்.பி. தேர்தலில் வேட்பாளராகி ஜாதவ்பூர் தொகுதியில் ஓட்டு  வேட்டையாடிக் கொண்டிருக்கிறார்.

முந்தைய தேர்தல்களில் பாடகர் கபீர் சுமன், கல்வியாளர் சுகதோ பாசுவைக் களமிறக்கிய திரிணாமுல், இம்முறை மிமியின் நட்சத்திர அந்தஸ்தை பெரிதும் நம்புகிறது. தொகுதிக்குப் புதியவர் என்பது சற்று பின்னடைவுதான்.  கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொல்கத்தா நகர முன்னாள் மேயர் விகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யாவும், பிஜேபியின் அனுபம் ஹஸ்ராவும் இங்கு வரிந்துகட்டுகின்றனர். இதில் அனுபம் ஹஸ்ரா திரிணாமுல் கட்சியின் முன்னாள் எம்.பி  என்பது குறிப்பிடத்தக்கது.ஜாதவ்பூரில் போட்டி கடுமையாக இருந்தாலும், பங்கார் மற்றும் பரூய்பூர் சட்டமன்ற தொகுதிகளில் பெருவாரியான வாக்குகளை அள்ளிவிடலாம் என்பது மிமி தரப்பு கணக்காக இருக்கிறது. எல்லாம் சரியாகவே  போய்க்கொண்டிருப்பது போல தோன்றினாலும், பிரசாரப் பயணத்தின்போது மிமி அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

கையுறைகளை அணிந்தபடி அவர் மக்களுடன் கை குலுக்கும் புகைப்படம் வைரலாகப் பரவ, எலிசபத் மகாராணி பரம்பரையா? என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். ஆர்வமுடன் கை குலுக்கும் தொண்டர்கள் சிலரின்  நகங்கள் கீறி காயம் ஏற்பட்டதால் தான் மிமி கிளவ்ஸ் போட்டுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பாகவே, தொண்டர்களுடன்  மிமி ஆக்ரோஷமாக வாக்குவாதம் செய்யும் வீடியோ வெளியாகி புதிய தர்மசங்கடத்தை கொடுத்துள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்த அவதூறு பிரசாரத்தை முறியடித்து ஜாதவ்பூரில் வெற்றிக் கனியை பறிப்பேன் என்கிறார் மிமி.  அரசியல் வானில் இந்த திரை நட்சத்திரம் மின்னுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : sky , political, sky,, Minnuma, E-Mini,
× RELATED வானகரம் அப்போலோ மருத்துவமனையில்...