×

திருவண்ணாமலை...... கிரிவல தொகுதியில் வெற்றிவலம் வருவது யார்?

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமையும், பெருமையும் மிக்க அண்ணாமலையார் திருக்கோயில், பிரசித்தி பெற்ற பவுர்ணமி கிரிவலம், ரமண மகரிஷி ஆசிரமம் எனும் ஆன்மிக அடையாளங்களால் உலகளவில் புகழ்பெற்றது திருவண்ணாமலை. கடந்த 1957ல் முதன்முதலாக திருவண்ணாமலையை மையமாக கொண்டு மக்களவை தொகுதி உருவானது. 1962 தேர்தலுக்கு பிறகு நடந்த தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக, மக்களவை தொகுதி எனும் தனித்தன்மையை திருவண்ணாமலை இழந்தது. கடந்த 1967 மற்றும் 1971 மக்களவை தேர்தல்களில் திண்டிவனம் மக்களவை தொகுதியிலும், 1977 முதல் 2004 வரை, வந்தவாசி மக்களவை தொகுதியிலும் திருவண்ணாமலை இடம் பெற்றிருந்தது. கடந்த 2009ல்தான், மீண்டும் திருவண்ணாமலை மக்களவை ெதாகுதி எனும் தனித்தன்மையை பெற்றது. இந்த தேர்தலில், திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் 25 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ஆனாலும், சி.என்.அண்ணாதுரை (திமுக), அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அதிமுக), ஏ.ஞானசேகர் (அமமுக) ஆகிய மூன்று பேருக்கு இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. மூன்று வேட்பாளர்களும் முதலியார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் இருவரும் ஏற்கனவே மக்களவை தொகுதியில் நின்று வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள். அமமுக வேட்பாளர் தேர்தல் களத்துக்கு புதியவர். பொய்த்தது விவசாயிகள் வாழ்க்கை
திருவண்ணாமலை மக்களவை தொகுதி, 90 சதவீதம் கிராமங்களை உள்ளடக்கியது. விவசாயம், கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி மட்டுமே பிரதான தொழில். வானம் பொய்த்தால் வாழ்க்கையில்லை. பிழைப்புக்கு வேறெந்த தொழில் வளமும் இல்லை.

திருவண்ணாமலை தொகுதியில் சாத்தனூர் அணை, குப்பனத்தம் அணை என இரண்டு அணைகள் அமைந்துள்ளன, ஆனாலும், சாத்தனூர் அணையின் பெரும்பான்மையான பாசன பரப்பு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, கர்நாடக மாநிலத்தில் அடுத்தடுத்து கட்டப்பட்ட தடுப்பணைகளால், சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து தடைபட்டு பல ஆண்டுகளாகிறது. அதனால், அணை முழுமையாக நிரம்புவது கேள்விக்குறியாக மாறிவிட்டது. கர்நாடகத்தின் அடாவடியை தடுக்க, சட்டப்பூர்வமான எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்கவில்லை. இந்த தொகுதி விவசாயிகள் பிரதானமாக நம்பியிருப்பது கிணற்று நீர் பாசனத்தை மட்டுமே. திருவண்ணாமலை தொகுதியில் மட்டும் சுமார் 1 லட்சம் விவசாய பாசன கிணறுகள் உள்ளன. மழையின்றி அனைத்தும் வறண்டுள்ளன. நிலத்தடி நீரும் வற்றிவிட்டது. சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்காக, ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலம் பறிபோக இருந்த பகுதிகளில் செங்கம், கலசபாக்கம், திருவண்ணாமலை சட்டப்பேரவை தொகுதிகள் அடங்கும். தங்கள் வாழ்வாதாரமான விளைநிலங்கள் பறிபோவதை எதிர்த்து கடுமையாக விவசாயிகள் போராடியது குறிப்பிடத்தக்கது. புகழ்மிக்க திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஆனால், திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு நேரடி ரயில் வசதியில்லை. அகல ரயில்பாதையாக மாறியபிறகும், திருவண்ணாமலை வழியாக கூடுதல் ரயில்கள் இயக்கவில்லை.

திருவண்ணாமலை தொகுதியில் 2014 தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவை சேர்ந்த ஆர்.வனரோஜா, கடந்த 5 ஆண்டுகள் பதவியில் இருந்தாரா என்பதே இத்தொகுதி மக்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது. திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை. விவசாயம் மற்றும் கட்டுமான பணி ஒப்பந்ததாரராக உள்ளார். திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர். ஏற்கனவே, துரிஞ்சாபுரம் ஒன்றியக்குழு துணைத் தலைவராக பணியாற்றியவர். கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தவர். அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஏற்கனவே இரண்டு முறை கலசபாக்கம் தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். கடந்த 1998 மக்களவைத் தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டு 271 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவர். வேளாண் அதிகாரி தற்கொலை விவகாரத்தால், ஜெயலலிதாவின் கோபத்துக்கு ஆளாகி மாவட்ட செயலாளர், அமைச்சர் பதவி பறிக்கப்பட்டவர். அதனால், கடந்த 2016 தேர்தலில் போட்டியிடும் வாய்ப்ைபயும் இழந்தவர். ஜெயலலிதா மறைவால், மீண்டும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். இவை அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு பெரும் சவாலாக மாறியிருக்கிறது. அமமுக வேட்பாளர் ஞானசேகர், தேர்தல் களத்துக்கு புதியவர் என்றாலும், அதிமுகவில் உள்ள அதிருப்தியாளர்களின் வாக்குகளை பெறுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. திருவண்ணாமலை தொகுதி எப்போதும் திமுகவுக்கு சாதகமான தொகுதி. இந்த தேர்தலில் மத்திய- மாநில அரசுகளின் மீதான கடும் எதிர்ப்பு அலையும், திமுக கூட்டணி மீதான மக்களின் நம்பிக்கையும் ஒருங்கிணைந்து, கிரிவல தொகுதியில் திமுகவே வெற்றியாக வலம் வரும் என்பதே தற்போதைய நிலவரம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : successor ,Thiruvannamalai , Thiruvannamalai, girivalam constituency,
× RELATED விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர்...