×

தமிழகம் முழுவதும் தரமற்ற வகையில் விநியோகிக்கப்பட்டு பழுதான மின் மீட்டர்களை மாற்றுவதில் மின்வாரியம் மெத்தனம்: நுகர்வோர் பெரும் அவதி

நெல்லை: தமிழகம் முழுவதும் தரமற்ற வகையில் விநியோகிக்கப்பட்டதால் பழுதடைந்த மின் மீட்டர்களை மாற்றித் தர மின்வாரியம் உரிய நடவடிக்கை எடுக்காததால் நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2001 கணக்கெடுப்பின்படி 30 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட நகரங்களில் நவீன டிஜிட்டல் மீட்டர்களை பொருத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. இதனடிப்படிடையில் தமிழகத்தில் 110 நகரங்களில் மின் மீட்டர்களை மாற்றும் பணியில் மின்வாரியம் முதலில் ஈடுபட்டது. பின்னர் 1.2 கோடி வீடுகள், நிறுவனங்கள் மற்றும் ஆலைகள் உள்ளிட்ட மொத்தமுள்ள 2.2 கோடி மின் இணைப்புகளுக்கும் சிங்கிள் பேஸ், 3 பேஸ் இணைப்பிற்கேற்ப புதிய மீட்டரை மின்வாரியம் பொருத்தியது. நாளடைவில் புதிய டிஜிட்டல் மீட்டர்கள் அதிகளவில் பழுதடையத் துவங்கின. பல மீட்டர்களில் டிஸ்பிளே தெரியாமல் போனது. பல மீட்டர்கள் கருப்படைந்தன. இதுகுறித்து மின்வாரியத்தில் புகார்கள் குவிந்தன. புகாரின் தன்மைக்கேற்ப அவற்றை மாற்றித் தர முடியாமல் மின்வாரியம் திணறி வருகிறது. தமிழகத்தில் டெல்டா மற்றும் திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்கள் கடந்த ஆண்டு கஜா புயலால் கடும் பாதிப்பை சந்தித்தன. இதில் ஏராளமான மின்கம்பங்கள் சரிந்தன.  மின் மீட்டர்களும் பழுதாகின. தமிழகத்தில் பிற பகுதிகளில் காத்திருப்பில் வைக்கப்பட்டிருந்த மின் கம்பங்கள், மீட்டர்கள் உள்ளிட்ட மின்வாரிய தளவாட பொருட்கள் கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதனால் பல மாவட்டங்களில் புதிதாக மின் இணைப்பு கேட்பவர்களுக்கும் மின் மீட்டர் பழுதானதால் மாற்று மின் மீட்டர் கேட்டும் விண்ணப்பிப்பவர்களுக்கும் உடனடியாக கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த பிரச்னை தலைதூக்கியுள்ளது. மின் மீட்டர்  பழுது ஏற்பட்டு புகார் தெரிவித்தால் முதலில் வந்து பார்க்கும் மின்வாரிய பொறியாளர்கள் அந்த மின் மீட்டர் கருப்பு அடைந்திருந்தால் நுகர்வோர் செலவில் வாங்க அனுமதிக்கின்றனர். அப்படியில்லாமல் வேறு பழுது இருந்தால் மின்வாரியத்தினரே தரும் மின் மீட்டரை பொறுத்த அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனால் மின்வாரியத்தில் தேவைக்கு ஏற்ப போதுமான மின்மீட்டர் இல்லாததால் பல மாதங்களாக மாற்று மின் மீட்டர் கொடுப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் ஒவ்வொரு உதவி பொறியாளர் அலுவலகத்திலும் நூற்றுக்கணக்கான நுகர்வோர் புதிய மீட்டருக்காக காத்திருக்கின்றனர். உதாரணமாக நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் மின் மீட்டர் பழுது ஏற்பட்ட நுகர்வோருக்கு அக்டோபரில்தான் பழுது தொடர்பான சீனியாரிட்டி பதிவு எண் வழங்கியுள்ளனர். அதிலும் ஒற்றை இலக்க சீனியாரிட்டி எண்ணில் இருப்பவருக்கு கூட இன்றுவரை புதிய மின்மீட்டர் கிடைக்கவில்லை. மின் மீட்டர் பழுதான நுகர்வோர்களுக்கு பழுதானபோது கடைசியாக பதிந்த மின் நுகர்வு அளவீட்டிலேயே மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் மின்நுகர்வு குறித்த துல்லிய  விபரம் தெரியாமல் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் சிரமப்படுகின்றனர். மீட்டர் பழுதான வீடுகளில் நுகர்வோர் கடைசியாக செலுத்திய மின் கட்டணத்தின் சராசரியை செலுத்த சொல்வதால் பாதிக்கப்படுகின்றனர். தற்போது கோடை நேரம் என்பதால் மாதக்கணக்கில் இழுத்தடிக்காமல் மின் மீட்டர் பழுதாகி பதிந்து இருப்பவர்களுக்கு உடனடியாக மாற்று மின்மீட்டரை வழங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

மீட்டர் பழுதாவது ஏன்?
தற்போது ‘ஸ்டேடிக்’ என்ற பிளாஸ்டிக் மீட்டர் பொருத்தப்படுகிறது. இவற்றில் பல மீட்டர்கள் கிடங்குகளில் இருந்து வரும்போதே பிரச்னைக்கு உரியதாக உள்ளன. சிங்கில் பேஸ் மின் மீட்டர் ரூ.600க்குள்ளும், டிரிபில் பேஸ் மின் மீட்டர் ரூ.1200க்குள்ளும் விலை ஆகிறது. இதற்கான சரியான கட்டணத்தை உரிய விண்ணப்பத்துடன் நுகர்வோர் செலுத்தினால் மின்வாரியத்தினரே மின்மீட்டரை பொறுத்துகின்றனர். மீட்டர் பழுது குறித்து மின்வாரிய தரப்பினர் கூறுகையில், சிங்கில் மின் மீட்டரை அதற்கு ஏற்ற மின்பழுதாகாத அளவில் உபயோகப்படுத்தவேண்டும். அதிகமின்சக்தி பெறும் வகையில் பயன்படுத்தினால் அது பழுதாக அதிக வாய்ப்புள்ளது என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : city ,consumers ,Tamil Nadu , Tamilnadu, electric meters,
× RELATED சினிமா ஸ்டண்ட் நடிகர் வீட்டில் திருட்டு