பிரதமர் மோடி ஆட்சியில் ரூ.5.5 லட்சம் கோடி வாராக்கடன் ரத்து : ரிசர்வ் வங்கி தகவலால் அதிர்ச்சி

மும்பை: பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் மட்டும் ரூ.5.5 லட்சம் கோடி வாராக்கடன் ரத்து செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள ரிசர்வ் வங்கி கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் ரூ.7 லட்சம் கோடி வாராக்கடன் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மத்தியில் மோடி பிரதமராக பதவியேற்றதில் இருந்து ரத்து செய்யப்பட்ட வாராக்கடன் மட்டும் ரூ.5 லட்சத்து 55 ஆயிரத்து 603 கோடியாகும். 2016 - 17-ம் நிதியாண்டில் 1 லட்சத்து 08 ஆயிரத்து 374 கோடி ரூபாயும், 2017-18-ம் நிதியாண்டில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 328 கோடி ரூபாயும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

2018-19-ஆம் ஆண்டின் தொடக்க 6 மாத காலத்தில்வங்கிகள் 82,799 கோடி வாராக்கடன்களை ரத்து செய்துள்ளது. அதில் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து தற்போது வரை 5,55,603 கோடி வாராக்கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ரத்து செய்யப்பட்ட வாராக் கடன்களில் 80 சதவீத வாராக்கடன்கள் கடந்த 5 ஆண்டுகளிலேயே ரத்து செய்யப்பட்டுள்ளது.

வங்கிகளுக்கு கிடைக்கும் லாபம் அனைத்தும் வாராக்கடன்களுக்கு ஈடு செய்வதால் நஷ்டம் ஏற்படுவதாக வங்கி ஊழியர் சங்கங்கள் கூறியுள்ளன. ரூ.10 லட்சம் வாராக்கடன்களுடன் தத்தளிக்கும் தேசிய வங்கிகளுக்கு புத்துயிரூட்ட மறுமுதலீடாக ரூ.2 லட்சத்து 11 ஆயிரம் கோடியை மத்திய அரசு கடந்த ஆண்டு அளித்துள்ளது. வாராக்கடன்களை ரத்து செய்வது தவறல்ல. ஆனால் அதற்காக கொள்கை வகுக்கப்பட வேண்டும் என்பதே பொதுவான கோரிக்கையாகும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: