×

எல்லை பிரச்சனையால் கட்டுப்படுத்தும் பணி தாமதம் பணகுடி மலைப்பகுதியில் வேகமாக பரவும் காட்டுத்தீ

* அரியவகை மூலிகைகள், மரங்கள் எரிந்து நாசம்

பணகுடி : பணகுடி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால் அரியவகை மூலிகைகள், ஆயிரக்கணக்கான மரங்கள் எரிந்து நாசமானது. மாவட்ட எல்லை பிரச்னையால் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பணகுடி மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் மான், முயல், கரடி, கடமான், சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வசித்து வருகின்றன. பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த வனத்தில் நேற்று காலை முதலே புகைமூட்டமாக காட்சியளித்தது. நேரம் செல்ல, செல்ல மலைப்பகுதியில் காட்டுத்தீ கொளுந்துவிட்டு எரிந்தது.

தீ ஜூவாலையாக எரிவதை பார்த்த இப்பகுதி இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் களக்காடு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள், இது தங்கள் எல்லை இல்லை. பூதப்பாண்டி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு கூறினர். இதையடுத்து பூதப்பாண்டிக்கு தகவல் அளித்தனர். ஆனால் வனத்துறையினர் வருவதற்கு காலதாமதம் ஆனதால், அரியவகை மூலிகை செடிகளும், பல நூறு ஏக்கர் அளவிலான மரங்களும் தீயில் கருகின. இதனிடையே சம்பவ பகுதிக்கு வந்த பூதப்பாண்டி வனத்துறையினர், தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில வாரங்களாக சுட்டெரித்து வரும் வெயிலால் வனப்பகுதியில் செடி, கொடிகள் கருகி சருகுகளாக காட்சியளித்தன. மேலும் காற்றின் வேகத்தில் தீ மளமளவென பரவி வருவதால் தீயை கட்டுப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மலையின் ஒரு பகுதியில் பற்றிய தீ, கிராம பகுதியை நோக்கி பரவி வருகிறது. இதனால் வனவிலங்குகள் ஊருக்குள் புகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் பணகுடி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சிலர், வளர்ப்பு நாய்களுடன் வேட்டைக்கு செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இங்குள்ள வனப்பகுதி, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட பூதப்பாண்டி வனச்சரகத்தில் இருப்பதால் ரோந்து உள்ளிட்ட பாதுகாப்பு பணிகளும் குறைவாகவே உள்ளது. இதன் காரணமாக முயல் உள்ளிட்ட வனவிலங்குகள் வேட்டைக்கு செல்பவர்கள், தீப்பந்தம் அல்லது பீடி, சிகரெட் போன்றவற்றை அணைக்காமல் போட்டுவிட்டு வந்ததால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

எனவே பணகுடி வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு இரவு நேரங்களில் அத்துமீறி நுழைபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.

வனச்சரகம் மாற்றப்படுமா?

நெல்லை மாவட்டம் பணகுடியில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலை வனப்பகுதி, கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பூதப்பாண்டி வனச்சரகத்தில் உள்ளது. அங்குள்ள வன ஊழியர்கள், இப்பகுதியில் ரோந்து உள்ளிட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது எப்போதாவதுதான் நடக்கிறது என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அருகிலேயே திருக்குறுங்குடி வனச்சரகம் உள்ள நிலையில், பணகுடி வனப்பகுதியை திருக்குறுங்குடிக்கு மாற்றினால் கண்காணிப்பு, ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்படும்.

மேலும் தீ விபத்து உள்ளிட்டவை நிகழ்ந்தால் உடனடியாக விரைந்து செயல்பட்டு கட்டுப்படுத்தவும் வாய்ப்பு ஏற்படும். நேற்று தீ விபத்து குறித்து புகார் தெரிவிக்க பூதப்பாண்டி வனத்துறையினரை தொடர்பு கொள்ள படாதபாடுபட்டதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

கடையம் வனச்சரகத்தில் மின்னல் தாக்கி திடீர் தீ


களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட கடையம்  வனச்சரகத்தில் ராமநதி அணை வடமேற்கே தேவர் படகு வனப்பகுதி உள்ளது. நேற்று  முன்தினம் மாலை குற்றாலம், செங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் இடி, மின்னலுடன்  பலத்த மழை பெய்தது. அப்போது ஏற்பட்ட மின்னல், தேவர் படகு வனப்பகுதியை  தாக்கியது. இதில் காய்ந்த நிலையில் இருந்த சுக்குநாறி புல்லில்  தீப்பிடித்து எரிந்தது. பலத்த காற்று வீசியதால் தீ வேகமாக பரவியது.

இதையடுத்து  துணை இயக்குநர் ஓம்கார் கொம்மு உத்தரவின் பேரில் கடையம் வனச்சரகர் நெல்லை  நாயகம் ஆலோசனையில் வனவர், வனக்காப்பாளர், வனப்பாதுகாவலர், வேட்டை தடுப்பு  காவலர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் விரைந்து சென்று போராடி தீயை  அணைத்து வருகின்றனர். இதில் அரிய வகை மூலிகை செடிகள், விலை உயர்ந்த மரங்கள் எரிந்து  நாசமானது.  கடந்த 15 நாட்களில் கடையம் வனச்சரக பகுதியில்  இரு முறை  தீப்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : region , panakudi Forest Fire,tamilnadu ,kerala Forest Department
× RELATED இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பதற்றம்!