×

பருவமழை பொய்த்ததால் வறண்டு கிடக்கும் கண்மாய்கள்

*கிராம ஊராட்சிகளில் தண்ணீர் பஞ்சம்; மாற்று ஏற்பாடு செய்ய மறந்த நிர்வாகம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் காலிக்குடங்களுடன் அலையும் பரிதாப நிலை உருவாகி உள்ளது. தேர்தல் பணியால் அதிகாரிகள் குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். விருதுநகர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 820.10 மி.மீ, கடந்த 18 ஆண்டுகளில் 2005, 2006, 2015 ஆண்டுகளில் மட்டும் சராசரியை விட கூடுதல் மழை பதிவாகி உள்ளது.

alignment=


கடந்த ஆண்டு 800 மி.மீ மழை பதிவாகியது. சராசரியை நெருங்கிய மழை பெய்திருந்தாலும் மாவட்டத்தில் உள்ள 1020 கண்மாய்களில் 20க்கும் குறைவான கண்மாய்கள் மட்டும் நிறைந்தன. சில கண்மாய்களில் பாதி அளவிற்கும், பல கண்மாய்களில் தூரிலும் தண்ணீர் கிடந்தன. கண்மாய்களுக்கான வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்பு, மண் அள்ளியதால் ஏற்பட்ட பள்ளங்களால் தண்ணீர் வரவில்லை. இதனால் பல கண்மாய்கள் தண்ணீரின்றி வறண்டு  கிடக்கின்றனர்.

கிராம ஊராட்சிகளின் குடிநீர் ஆதாரமாக கண்மாய்கள் விளங்குகின்றன. கிராமங்களுக்கான கூட்டுக்குடிநீர் கண்மாய்களில் போர்வெல் மூலம் எடுத்து விநியோகம் செய்யப்படுகிறது. கண்மாய்களில் கடந்த 3 ஆண்டுகளாக தண்ணீரில்லாத காரணத்தால் கிராமங்களில் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பல கிராமங்களில் 30 நாட்களுக்கு ஒரு முறை கூட குடிநீர் வழங்க முடியவில்லை. குடிநீரை குடம் ரூ.10 முதல் ரூ.12 வரை விலை கொடுத்து வாங்கி குடிக்கின்றனர். கிராமங்களில் தண்ணீர் விநியோகம் பாதிப்பிற்குள்ளாகி வருவதால் கிராமப்புற மக்கள் பிற உபயோகத்திற்கான தண்ணீரையும் தற்போது குடம் ரூ.5 கொடுத்து வாங்கி உபயோகப்படுத்தும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தேர்தல் பணியில் அதிகாரிகள் இருப்பதால் கிராமப்புறங்களில் நிலத்தடி நீர் இருக்கும் இடங்களில் போர்வெல் அமைப்பது மற்றும் இருக்கும் குடிநீர் திட்டங்களை பராமரிப்பு செய்வது, பழுதடைந்த அடிகுழாய்களை பழுதுநீக்கம் செய்வது உள்ளிட்ட பணிகள் நடைபெறவில்லை. மாவட்ட நிர்வாகம் குடிநீர் மற்றும் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை முறைப்படுத்தி செயல்படுத்த உத்தரவிட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : virdhunagar District,Non Monsoon,storage area,water , drought
× RELATED யானை தாக்கி விவசாயி பலி