×

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை வாபஸ்

ஜகர்தா: இந்தோனேசியா நாட்டில் சுலவேசி தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.
 
நிலநடுக்கத்தால் அவதிப்படும் இந்தோனேஷியா

நிலநடுக்கத்தால் அடிக்கடி பாதிக்கப்படும் பகுதியாக இந்தோனேசியா உள்ளது. தொடர்ந்து இங்கு நிலநடுக்கத்தால் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்த மாத தொடக்கத்தில்,இந்தோனேசியா நாட்டில் உள்ள நுசா டெங்காரா மாகாணத்தில் அதிகாலை 4.54 மணிக்கு தீடிரென ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

சுலவேசி தீவில் 6.8 அளவில் நிலநடுக்கம்


இந்நிலையில் இந்தோனேசியா நாட்டில் சுலவேசி தீவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து 17கிமீ தொலைவை மையமாக கொண்டு தற்போதைய நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தில் எதிரொலியாக கட்டிடங்கள், வீடுகள் அதிர்ந்தன. பீதி அடைந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சில மணி நேரங்களில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டதை அடுத்து பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இதனிடையே கடந்த ஆண்டு டிசம்பர்  23-ம் தேதி இந்தோனேசியாவின் ஜாவா, சுமத்ரா தீவுகளில் எரிமலை வெடித்ததை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் 430 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்தோனேசியாவின் வடக்குப் பகுதியில் உள்ள இதே சுலவேசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியது, இதையடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்னர் திரும்பப் பெறப்பட்டது. எனினும், எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்ட சிறிது நேரத்தில் கடலோரப்பகுதிகளில் சுனாமி தாக்கியது. சுமார் 6 அடி உயரத்திற்கு எழுந்த ஆழிப்பேரலையால் கடலோர பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, பாலு மற்றும் டோங்க்லா பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : tsunami warning withdrawal ,earthquake ,Indonesia , A tsunami warning withdrawal of a powerful earthquake in Indonesia...
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்