×

நாகர்கோவில் அருகே 55 ஆயிரம் பறிப்பு...சென்னை குடும்பங்களை அலைக்கழித்த பறக்கும்படை

நாகர்கோவில் அருகே துக்கம் விசாரிக்க வந்த சென்னை குடும்பத்தினரை பறக்கும்படையினர் பணத்துடன் கலெக்டர் அலுவலகத்திற்கு அலைக்கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையில் உள்ள ஒரு குடும்பத்தினர், நாகர்கோவில் அனந்தநாடார்குடியிருப்பு அருகே ஒருவர் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க வந்தனர். பின்னர் நேற்று காலை காரில் ஊருக்கு திரும்பினர். ராஜாக்கமங்கலம் அருகே  அவர்களது காரை பறக்கும்படை அதிகாரிகள் சோதனை செய்தனர். காருக்குள் இரு குடும்பங்களை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 4 பேர் இருந்தனர். அதில் ஒருவரது கைப்பையில் ₹30 ஆயிரமும், மற்றொருவரது கைப்பையில் ₹25 ஆயிரமும் இருந்துள்ளது. விவரம் கூறியதும் பறக்கும்படை அதிகாரிகள் அவர்களை விடுவித்தனர்.தகவல் அறிந்த அகஸ்தீஸ்வரம் தாசில்தார் உத்தரவின்படி மீண்டும் பறக்கும்படை குழுவினர், புறப்பட்டு சென்ற அந்த குடும்பத்தினரை காருடன் மடக்கி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.

பின்னர் அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். தாசில்தார் அப்போது அங்கு இல்லாததால் துணை தாசில்தார் முன்னிலையில் விவாதம் நடந்தது. 2 குடும்பத்தினர் தனித்தனியாக வைத்திருந்த பணத்தை சேர்த்தால்தான் ₹55 ஆயிரம் ஆகிறது என்று தெரிவித்தும் பறக்கும்படையினர் அவர்களை விடுவிக்கவில்லை. காரில் இருந்த குடும்பத்தினர், தகவல் தெரிவித்து மரணமடைந்தவரின் வீட்டில் உள்ள உறவினர் ஒருவரையும் வரவழைத்தனர்.  பணத்தை பறிமுதல் செய்த வேளாண்மை துறை அதிகாரியோ தனக்கு சில மாதங்களில் பணி ஓய்வு வர உள்ளது. இந்த வேளையில் என்னை சிக்கலில் இழுத்துவிடாதீர்கள் என்று சக அலுவலர்களிடம் கூறிக்கொண்டு இருந்தார். இந்தநிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பணம் பறிமுதல் விவகாரத்தை நாகர்கோவில் சப் கலெக்டர் கவனத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் நடந்த விசாரணைக்கு பின் அவர்கள் விடுவிக்கப்பட்டு கைப்பற்றப்பட்ட பணமும் திருப்பி கொடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nagercoil ,families ,Chennai , 55 thousand, Nagercoil, Chennai ,families,flying
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு