×

அய்யாக்கண்ணு வித்தைகாட்டுபவர்... வீரனாக நினைச்சது எங்க தப்புதான்..

டெல்லியில் தமிழக விவசாயிகளுடன் போராட்டம் நடத்தி, நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்த விவசாயி அய்யாக்கண்ணு, பாஜ தேசியத் தலைவர் அமித்ஷா உடன் மேற்கொண்ட சந்திப்புக்குப் பிறகு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் மற்ற விவசாயிகளிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.டெல்லி போராட்டத்தில் விவசாயிகள் அரைநிர்வாணமாகவும், மண்டை ஓடுகளை வைத்துக்கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள், விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு அளித்தனர். பாஜ, அதிமுகவினர் மட்டும் கண்டுகொள்ளவில்லை என அப்போது குற்றஞ்சாட்டப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அய்யாக்கண்ணு, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகத் தாமும், தமது தலைமையிலான தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க உறுப்பினர்களும் என 111 விவசாயிகள் போட்டியிடப்போவதாக அறிவித்திருந்தார்.இந்தசம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அமித்ஷாவை சந்தித்ததும் அய்யாக்கண்ணு, தங்களது பெரும்பாலான கோரிக்கைகளை பாஜ ஏற்றுக்கொண்டுள்ளதால் தனது முடிவைக் கைவிட்டு விட்டதாக கூறியுள்ளார். இது மற்ற விவசாயிகளிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயி சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் ‘கள்’ நல்லசாமி கூறியதாவது:அய்யாக்கண்ணுவின் ேபாக்கு ஆரம்பத்தில் இருந்து எங்களுக்கு பிடிக்கவில்லை. அவரது போராட்டம் நியாயமானது, ஆனால் வடிவம் தவறானது. அவர் திடீர் என பின்வாங்கியது கண்டிக்கத்தது. இதற்கு முன்பு மோடியை மோசடி என்று கூறினார். தற்போது ஞானம் பிறந்துவிட்டதா?இவர் பாஜவில் இருந்தவர். அங்கு கோமாளித்தனம் செய்ததால் வெளியேற்றப்பட்டார். பாஜ தரப்பில் விவசாயிகள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படாத நிலையில், இவறாகவே தன்னிச்சையாக பாஜ, எங்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கிறார். மொடக்குறிச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளை நிறுத்தியே ஒன்றும் செய்ய முடியவில்லை.
இவரால், 111 பேரை நிறுத்தி என்ன சாதிக்க போகிறார்?. இவர் டெல்லி சென்றது குறித்து எந்த விவசாயிகளிடத்திலும் கூறவில்லை. அய்யாக்கண்ணுவின் முடிவால் ஒட்டுமொத்த விவசாயிகளும் பாதிக்கப்படுகிறார்கள்.

விவசாயிகளுக்கு மத்தியில் நம்பிக்கை இருந்தது. தற்போது முற்றிலும் இழந்துவிட்டனர். அய்யாக்கண்ணுவை நம்பி டெல்லி சென்றது, வித்தைகாட்டுபவரை படையில் வீரனாக சேர்த்து போரிட்டால் என்ன நிலமை ஏற்படுமோ அந்தநிலை தான் தற்போது ஏற்பட்டுள்ளதாக அவரை ஆதரித்தவர்கள் கூறுகின்றனர். தற்போது அய்யாக்கண்ணுவை நம்பி செல்ல விவசாயிகள் தயாராக இல்லை. இவரது ஆதரவால் பாஜவுக்கு ஓட்டு குறையும். பாஜவின் தேர்தல் அறிக்கை விவசாயியாக ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை. விவசாயி கமிஷன் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கூறி வந்தோம், ஆனால் அதைப்பற்றி எதுவும் சொல்லவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

வேறு என்ன காரணம்?
ஒரு தொகுதியில் குறிப்பிட்ட வேட்பாளருக்கு மேல் போட்டியிடுவதாக மனுதாக்கல்  செய்யும் பட்சத்தில் மின்னணு வாக்குப்பதிவுக்கு பதிலாக வாக்குச்சீட்டு  முறையை தேர்தல் ஆணையம் கையில் எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அதேபோல் மோடி  போட்டியிடும் தொகுதியில் ஏராளமான விவசாயிகள் ேபாட்டியிடும் பட்சத்தில்  தேவையில்லாத பிரச்னை ஏற்படும். இதைத்தடுக்கும் வகையிலையே அய்யாக்கண்ணுவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதனால் அவர் தனது முடிவை  கைவிட்டுள்ளார் என விவசாயிகள் தரப்பில் பேசப்படுகிறது.

எல்லாம் விவசாயிகளுக்கும் தெரியும்
அய்யாக்கண்ணு கூறியதாவது: நிதிகள் இணைப்பு, லாபகரமான விலை உள்ளிட்ட 6 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினோம். கடந்த மார்ச் 13ம் தேதி எங்களது கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்றி காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல்காந்தி, பாஜ தலைவர் அமித்ஷா ஆகியோருக்கு அனுப்பி வைத்தோம். அதன்பிறகு எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்கள்.

அதையடுத்து டெல்லிக்கு சென்றோம். அப்போது எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றுவதாக தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்படும் எனக்கூறப்பட்டது. அதனால் எங்களது போட்டியிடும் முடிவை கைவிட்டோம். மேலும் தற்காலிகமாகத்தான் எங்களது முடிவை தள்ளிவைத்துள்ளோம். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதபட்சத்தில் கடுமையாக போராட்டம் நடத்துவோம். விவசாயிகளிடம் முறையாக கூறிவிட்டு தான் சென்றேன். கள் நல்லசாமி உள்ளிட்ேடார் எங்களது போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : hero , Ayyakannu, Muttukkuta ,hell, wrong ..
× RELATED ஜோஷ்வா இமை போல் காக்க விமர்சனம்