×

இன்னொரு அனிதா உயிரிழப்பதை காங்கிரஸ் விரும்பவில்லை நீட் பற்றி தமிழகமே முடிவு செய்ய அதிகாரம்

தேனி: இன்னொரு அனிதா உயிரிழப்பதை காங்கிரஸ் விரும்பவில்லை. நீட் தேர்வு வேண்டுமா, வேண்டாமா என்பதை தமிழகம் முடிவு செய்யும், கடனை கட்டாத விவசாயியை கைது செய்தால் அந்த அதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேனியில் நேற்று நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசினார். தேனி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சட்டசபை தொகுதி திமுக வேட்பாளர்கள் மகாராஜன் (ஆண்டிபட்டி), சரவணக்குமார் (பெரியகுளம்) ஆகியோரை ஆதரித்து தேனி அருகே அன்னஞ்சியில் நேற்று மாலை பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை தயாரிக்கும்போது நீட் தேர்வு பற்றி தெரிவித்தனர். தமிழகத்தின் ஏழை மாணவி அனிதா, இதனால் தற்கொலை செய்ததை அறிந்தேன். அனிதாவை போல இன்னொரு மாணவி, நீட் தேர்வால் உயிரிழப்பதை காங்கிரஸ் விரும்பவில்லை. அனிதாவின் நினைவை உள்வாங்கி அஞ்சலி செலுத்தும்விதமாகவே, தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றது. நீட் தேர்வு வேண்டுமா, வேண்டாமா என்பதை தமிழகம் முடிவு செய்யும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சொல்கிறது. யாரும் தமிழகத்தின் மீது விருப்பத்தை திணிக்க முடியாது.

தமிழக விவசாயிகள் டெல்லியில் போராடியதை நேரில் பார்த்து, அவர்களை அன்போடு தழுவிக் கொண்டேன். கடுமையான இந்நேரத்தில்  உங்களோடு நிற்கிறேன் என்றேன். 2019 தேர்தல் முடிந்தபிறகு, விவசாயிகளுக்கு புரட்சிகரமான திட்டத்தை நிறைவேற்றுவோம். காங்கிரஸ் கட்சி முதல் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கும்போது, விவசாயிகளுக்கு தனியான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வோம். நிதி ஆண்டு துவக்கத்தில், ஒவ்வொரு விவசாயிக்கும் அரசு என்ன செய்யப்போகிறது என்பதை அது சொல்லும். குறைந்தபட்ச ஆதார விலை எவ்வளவு? ஊக்கத்தொகை எவ்வளவு? பயிர் இழப்பீடுக்கு நஷ்டஈடு, உலகின் மிகச்சிறந்த தொழில்நுட்பம் இப்படி எல்லாமும் தெரிவிக்கப்படும்.

அனில் அம்பானி மத்திய அரசு வங்கியில் ரூ.45 ஆயிரம் கோடி கடன் வாங்கி திரும்பக் கட்டவில்லை. ரூ.20 ஆயிரம், ரூ.40 ஆயிரம் கடன் வாங்கி கட்ட முடியாத விவசாயியை மறுநாள் சிறையில் போடுகின்றனர். 2019 மக்களவை  தேர்தலுக்கு பிறகு, எந்த ஒரு விவசாயியும் கடன் கட்டாததற்காக சிறை செல்லும் சம்பவம் நடக்காது என்று உறுதியளிக்கிறேன். வாங்கிய கடனை கட்டவில்லை என்று அதிகாரி நடவடிக்கை எடுத்தால் அந்த அதிகாரி மீது குற்றவியல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக பெண்கள், இளைஞர்கள் லஞ்சம் தராமல், அனுமதி பெறாமல் சுய தொழில் தொடங்கலாம். 3 ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்திய பிறகு அனுமதி பெறலாம். இந்த மதச்சார்பற்ற கூட்டணி வரலாற்றுப்புகழ் மிக்கது. நிச்சயம் வெற்றி பெறும். இது அரசியல் கூட்டணி மட்டுமல்ல. நம் இதயத்திற்கு நெருக்கமானது. இவ்வாறு அவர் பேசினார்.

பெரியார், கருணாநிதி புத்தகத்தை
பிரதமர் மோடிக்கு பரிசளிப்பேன்
ராகுல்காந்தி  பேசுகையில், ‘‘மோடி, டெல்லியிலிருந்து தமிழகத்தை  நிர்வாகம் செய்ய முடியும் என்று நினைக்கிறார். தமிழகத்தின் வரலாறு அவருக்கு  தெரியாது. தமிழ்மொழியின் இனிமை, தொன்மை, இந்த மொழியின் வேகம், உணர்வு  தெரியாது. பெரியாரின், கருணாநிதியின் புத்தகங்களை அவருக்கு பரிசாக கொடுக்க  நினைக்கிறேன். அந்த புத்தகங்களை படித்த பிறகாவது அவர் தமிழகத்தை புரிந்து  கொள்வார் என்று நம்புகிறேன். தமிழக மக்கள் விரும்பாததை செய்ய வைக்கும் சக்தி, உலகில்  யாருக்கும் இல்லை என்பதை மோடி புரிய வேண்டும். தமிழக மக்களை அவர் தொடர்ந்து  அவமதிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது’’ என்றார்.

ஸ்டாலினை முதல்வராக்குவோம்
பின்னர், மதுரை ரிங்ரோடு மண்டேலா நகர் சந்திப்பில் நேற்றிரவு நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: மோடியை தோற்கடித்து, மத்தியில் ஆட்சி மாற்றத்தை உருவாக்குவோம். தமிழ்நாட்டிலும் ஆட்சி மாற்றத்தை உருவாக்கி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவோம்.  20 சதவீத ஏழை மக்களுக்கு 72 ஆயிரம் ரூபாய் ஓராண்டுக்கு என, ஐந்தாண்டுக்கு 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை காங்கிரஸ் அரசு கட்டாயம் கொடுக்கும்.  இது எங்கும் இல்லாத புரட்சிகரமான திட்டம், இது மக்கள் மத்தியில் மிகப்பெரிய புரட்சியை உருவாக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Congress ,Anita , Congress, Neet, Tamilnadu
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...